ஒரு கிரிக்கெட் சண்டை எவ்வாறு ஊரில் வாலிபால் கொண்டுவரக் காரணமாக இருந்தது என்று 'அட்டாக்கர்' படவிழாவில் பா. ரஞ்சித் விளக்கிக் கூறினார்.
தனுஷின் மருமகன் பவிஷ், குஷ்புவின் மகள் அவந்திகா சுந்தர் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம், தினேஷ் ராஜ் தயாரிப்பில் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் தொடக்க விழாவில் பேசிய பா.ரஞ்சித், அவர் ஊரில் கைப்பந்து விளையாட்டு வந்தக் கதையைக் கூறினார். அதுவே இந்தப் படத்திற்கு உத்வேகம் அளித்தது என்றார்.
அவர் கூறியதாவது:
" இயக்குநர் நாகபூஷணம், எங்க ஊர்ப் பையன். என்கிட்ட தொழில் கத்துகிட்டவர். இது ரொம்ப முக்கியமான படமாக இருக்கும். ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா. வாலிபால் பற்றிய படம். வாலிபால் பற்றி நல்லா இவருக்குத் தெரியும். நிறைய விளையாடிருக்கோம். ஏன்னா, அதை இந்த ஊருக்கு கொண்டுவந்ததே நான்தான்னு இந்த இடத்தில் பெருமையாக சொல்லிக்கொள்வேன். அந்தக் கதையை இங்க சொல்லியாகனும்.
எங்கள் ஊரில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தப்போது ஒரு சண்டை வந்துவிட்டது. கிரிக்கெட் தவிர என்ன விளையாடலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தோம். அப்போது தான் என் பாட்டி நினைவிற்கு வந்தார். அவர் நன்றாக வாலிபால் விளையாடுவார். நாங்களும் வாலிபால் விளையாடலாம் என்று முடிவு செய்தோம்.
பின்னர் எங்கள் ஊரில் நன்றாக விளையாடும் அண்ணனிடம் கற்றுக்கொண்டு 'ரெட் சன்' என்ற பெயரில் வாலிபால் டீமை நான் தான் உருவாக்கினேன். அந்த டீமை மையமாக வைத்து எழுதிய படம். மக்களுடன் ஒத்துப்போகக் கூடிய படம். இது நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக வரும்." என்று கூறினார்.