சினிமா செய்திகள்

BIGGBOSS9TAMIL: அத்துமீறி அடிதடியில் இறங்கிய பிக்பாஸ் போட்டியாளர்; ரெட் கார்டு கொடுக்கப்படுமா?

ச. ஆனந்தப்பிரியா

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்ததுள்ளது.

பிக்பாஸ் தமிழின் ஒன்பதாவது சீசன் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் போட்டியாளர்களால் பெரிதாக நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூடவில்லை. இதனால் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூட்ட கடந்த வாரம் பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா என நான்கு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே போயிருக்கிறார்கள். இதில் திவ்யா, பிரஜின், சாண்ட்ரா என மூவரும் அதிரடி காட்ட அமித் இப்போதைக்கு சாஃப்ட் ஜோனில் பயணிக்கிறார்.

வந்த முதல் வாரத்திலேயே ‘தல’ போட்டியில் வெற்றி பெற்று கேப்டன் ஆகியிருக்கிறார் வைல்ட் கார்டு போட்டியாளர் திவ்யா. வந்த முதல் நாளில் இருந்தே தைரியமாகவும் தெளிவாகவும் செயல்படுகிறார் திவ்யா என பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும் அவர் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்றைய எபிசோடிற்கான முதல் புரோமோ தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் பிரவீனுக்கும் கம்ருதீனுக்கும் இடையில் அடிதடி சண்டை ஆரம்பித்திருக்கிறது. இதனை போட்டியாளர்கள் அனைவரும் தடுக்க முயல்கின்றனர். அதில் பிரஜினும் இடையில் நுழைய கம்ருதீன் அவரை அடிக்க பாய்கிறார். இதனால், எங்கே பிரஜினை கம்ருதீன் அடித்து விட்டாரோ என்ற பதட்டம் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. பிரஜின் இதுபோன்று சண்டையில் ஈடுபடுவதைப் பார்த்து அவரது மனைவி சாண்ட்ராவும் கதறி அழுகிறார்.

இதற்கு முந்தைய எபிசோடுகளிலேயே இதேபோன்று அடிதடி சண்டைக்கு துஷாரிடம் வம்பிழுத்தார் கம்ருதீன். ‘பிக்பாஸ் வாய்ப்பு பத்தி எல்லாம் யோசிக்க மாட்டேன். அடிச்சிருவேன்…’என்ற ரீதியில் அவர் பேசியதையும் தொகுப்பாளர் விஜய்சேதுபதி கண்டித்திருந்தார். கடந்த வாரம் நாமினேஷனில் சிக்கியிருந்ததால் எந்த வம்புதும்புக்கும் போகாமல் அமைதியாக இருந்த கம்ருதீன் இந்த வாரம் மீண்டும் அடிதடியில் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே வார்னிங் கொடுத்திருந்தும் அத்துமீறி மீண்டும் அடிதடியில் இறங்கிய கம்ருதீனுக்கு இந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்படுமா என பிக்பாஸ் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.