சினிமா செய்திகள்

BIGGBOSS9TAMIL: கனி திருவை காப்பாற்றியதா பிக்பாஸ் அணி? திவாகர் வெளியேற்றத்தில் நடந்தது என்ன?

ச. ஆனந்தப்பிரியா

பிக்பாஸின் ஒன்பதாவது சீசனில் கடந்த வாரம் திவாகர் எவிக்ட் ஆகி இருக்கிறார். வார இறுதி எபிசோடின் படப்பிடிப்பு தொடங்கியபோது கனி திரு எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார் என்று செய்தி வெளியானது. ஆனால், இறுதியில் திவாகர்தான் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார். கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். பிக்பாஸின் விளையாட்டு விதிமுறைகள் இதுதான் என்று பொதுமைப்படுத்தி விட முடியாது. அந்தளவிற்கு சீசனுக்கு சீசன் விதிமுறைகளை கலைத்து போட்டு விளையாடுவதுதான் பிக்பாஸூக்கு பிடித்தமான விஷயம். இதில் போட்டியாளர்கள் வெளியேற்றமும் அடங்கும். என்னதான் பிக்பாஸ் போட்டியாளர்களின் எவிக்‌ஷனை பார்வையாளர்களின் ஓட்டுகள்தான் தீர்மானிக்கிறது என்றாலும் சமயங்களில் மக்கள் ஓட்டுகளை தாண்டி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயமும் பிக்பாஸ் அணியினருக்கு ஏற்படுகிறது. அப்படியான எவிக்‌ஷனாகதான் கடந்த வாரம் திவாகர் எவிக்‌ஷன் அமைந்தது.

ஏனெனில், வார இறுதி எபிசோடுக்கான ஷூட் தொடங்கும் சனிக்கிழமை காலை முதலே கனி திரு தான் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. பின்னர் திவாகர் பெயர் வந்தது. திவாகர் மற்றும் கனி இருவரும் டபுள் எவிக்ஷன் என்றும் திவாகருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. ஆனால், டபுள் எவிக்‌ஷன் இல்லாமல் ஒரே நபராக திவாகர்தான் அனுப்பப்பட்டிருக்கிறார். பிக்பாஸின் அன் அஃபிஷியல் ஓட்டு தளங்களில் கூட ரம்யா, சுபிக்‌ஷா, கனி போன்றோர்தான் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தார்கள். பட்டியலில் முன்னிலையில் இருந்த திவாகர் திடீரென வெளியேற்றப்பட்டிருப்பதன் காரணம் என்ன?

’நடிப்புபுபூ அரக்கன்ன்ன் வாட்டர் மெலன் ஸ்டார்…’ என தனக்கு தானே வைத்துக் கொண்ட அடைமொழியோடு சமூகவலைதளங்களில் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்தான் இந்த திவாகர். இந்த பிரபல்யமே அவரை பிக்பாஸ் போட்டியாளராகவும் உள்ளே அழைத்து சென்றது. ஆனால், அங்கு போய் அவரை பிக்பாஸ் விளையாட்டு விளையாட வைக்க சகபோட்டியாளர்களும் தொகுப்பாளர் விஜய்சேதுபதியும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைத்து கேமராக்களிடமும் சென்று ‘நடிப்பு அரக்கன்ன்….’ என்று ஹைடெசிபலில் கத்திக் கொண்டு ரீல்ஸ் போடுவதையே முழுநேர வேலையாக வைத்திருந்தார் திவாகர். குறிப்பாக வியானா, அரோரா என பெண்களிடம் அவர் நெருங்கி பழகுவதையும், லவ் கண்டெண்ட் முயன்று பார்ப்பதையும் பிக்பாஸ் ரசிகர்கள் பெரிதாக ரசிக்கவில்லை.

இதோடு நில்லாமல், மற்றவர்களுடன் சண்டைக்கு போகும்போது ‘உனக்கு தகுதி இல்லை…தராதரம் இல்லை…மரியாதை கெட்டுவிடும்…’ என்றெல்லாம் ஏக வசனத்தில் அடுத்தவர்களை மட்டம் தட்டிக் கொண்டிருந்தார். அதிலும் கானா வினோத்திடம் சண்டையிடும்போதெல்லாம் நாகூசும் வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதை விஜய்சேதுபதி பலமுறை கண்டித்தும் திவாகர் தன்னை மாற்றிக் கொள்வதாக இல்லை. இதன் உச்சமாக கடந்த வாரம் நடந்த ‘ராஜா ராணி’ டாஸ்கில் அரோரா சாதாரணமாக அடுக்கிய செங்கலை பார்த்து ஆபாச குறியீடு என்ற ரீதியில் அவர் மீது முத்திரை குத்தினார் திவாகர். இதை இந்த வார இறுதி எபிசோடில் கடுமையாக ஆட்சேபித்தார் விஜய்சேதுபதி.

பிக்பாஸில் டாஸ்க் செய்யாமல் இருப்பது, ரீல்ஸ் செய்வதே முழுநேர வேலையாக வைத்திருந்தது, சாதி குறித்து பேசுவது, பெண்களிடம் லவ் கண்டெண்ட் தேற்றுவது, சபை நாகரிகம் இல்லாமல் பேசுவது என சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர்தான் திவாகர். இதை சகபோட்டியாளர்களும் விஜய்சேதுபதியும் சுட்டிக் காட்டியும் திவாகர் திருத்திக் கொள்ளத் தயாராக இல்லை. விஜே பார்வதி, திவாகர், கம்ருதீன் போன்ற அடாவடி நபர்களால் ஏற்கனவே இந்த சீசன் மீது பார்வையாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பலமுறை சுட்டிக் காட்டியும் அடாவடித்தனத்தையும் நாகரிகத்தையும் பின்பற்றவில்லை என்பதால் திவாகரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி மற்ற போட்டியாளர்களுக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது பிக்பாஸ் அணி முடிவு செய்திருக்கிறது. இதனாலேயே, கடைசி நேரத்தில் கனி திரு காப்பாற்றப்பட்டு திவாகர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.