தமிழ் சினிமாவில் இந்த காதல் படும்பாடு இருக்கிறதே ஐயகோ.
பூபதிபாண்டியன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தேவதையை கண்டேன்’. தன்னைக் காதலித்து பின்னர் ஜகா வாங்கும் பெண்ணைக் கோர்ட்டுக்கு இழுத்து மீண்டும் தன்னையே காதலிக்கவேண்டும் என்று நீதிபதியிடம் அடம்பிடித்து தீர்ப்பு வாங்குவார் தனுஷ். படத்துக்கு தேவதைக் கொன்றேன்’ என்று டைட்டில் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று சொல்லுமளவுக்கு கொடுமையான படம்.
இப்ப என்னத்துக்கு அந்த பழைய கதை என்கிறீர்களா ? சரியாக 21 வருடம் கழித்து அதே பழைய மாவில் புதிய சப்பாத்தி சுட்டிருக்கிறாரே தனுஷின் அக்கா மகன் பவிஷ்?
லவ்வோ லவ். நாயகி அவந்திகாவை ஒரு சாவு வீட்டில் முதல் சந்திப்பிலேயே காதல் கொள்கிறார் பவிஷ் என்கிற ரகுவரன். அவரை பிக் அப் பண்ணி டிராப் பண்ணுவது, அவர் கேட்டதையெல்லாம் வாங்கித்தருவது என்று ஒரு கட்டத்தில் பெரும் கடனாளியாகிவிடுகிறார். அவரை கிரெடிட் கடன்கார ரகள் சூழ்ந்துகொள்ளும் வேளையில் இவர்களுக்கு காதல் கசந்துவிடவே, ‘ஒண்ணு எனக்கு காதல் விடுதலை [என்ன எழவோ எல் 3’ யாம்] கொடுத்துவிட்டு ஓடிவிடு. அல்லது 4 மாசத்துக்கு நான் உனக்கு செய்தது போல் எனக்கு சேவகம் செய்’ என்று பல்டி அடிக்கிறார்.
திரைக்கதை சுவாரசியம் என்கிற பெயரில், இவ்வளவு கூத்துகளையும் காவல்நிலையம் ஒன்றில் உயர் அதிகாரியான மூத்த மாமா செல்வராகவனிடமும், மகளிர் சங்கத் தலைவலி வனிதா மாமியிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் பவிஷ்.
கதாநாயகன் பவிஷ் நடிப்பில் தோற்றத்தில் குரல் சாயலில் கூட அப்படியே மலிவு விலை தனுஷ் போலவே தெரிகிறார். குடும்பத்தினர் இவரை வைத்து தொடர்ந்து படங்கள் எடுத்துவரும் வகையில் இன்னும் ஒரு நாலைந்து படங்களில் நிச்சயம் தேறிவிடுவார். அதுவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆந்திர ஏரியாவில் யூடியூபில் பிரபலமான நாகதுர்காவை கதாநாயகியாக இறக்கியிருக்கிறார்கள். மறுபடியும் அவரை யூடியூபுக்கே அனுப்பி விடலாம்.
மகளிர் சங்கத்தலைவியாக வரும் வனிதா அக்கா அப்படியே கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
படத்தின் சுமாரான ஆறுதல் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு.
இசை யாரோ பிரதீப் பார்த்திபனாம். ஓ.சி. வாங்கிய ‘வாடி பொட்டப்புள்ள வெளியே’ பாட்டைத்தவிர எதுவும் தேறவில்லை.
அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் முதல் படத்துக்கு இப்படி ஒரு பாடாவதி கதையை தேர்ந்தெடுத்திருக்கவேண்டாம்.
லவ்வோ லவ் காதலின் பெயரால் ஜவ்வோ ஜவ்.