சென்சார்போர்ட்காரர்கள் வெட்டவெட்டக் குறையாத கெட்ட வார்த்தைகளுடன் வெளியான அதே ’வட சென்னை’வாசியாக தமிழ்க் கடவுள் முருகனை சித்தரிக்கும் படமொன்றை இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி உருவாக்கப்போவதாக வந்திருக்கும் அறிவிப்பால் ஒரிஜினல் முருக பக்தர்கள் உள்ளம் நடுங்குதையா என்று பதறிக்கிடக்கிறார்கள்.
தமிழ்க் கடவுள் முருகனுக்கு அண்ணன் சீமான் அரசியல் ரீதியாக நல்ல மைலேஜ் கொடுத்திருக்கும் நிலையில், சமீபகாலமாக சினிமாக்காரர்களுக்கும் முருக பக்தி பெருகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்துவரும் சிவகார்த்திகேயன்,சிவகுமார் முருகேசன் கூட்டணியின் ‘சேயோன்’ படம் ஒரு மறைமுக முருகபுராணம் என்றே சொல்லப்படுகிறது. இப்படத்தை ‘முருகன்னு ஒருத்தர் இருக்கிறாரான்னு தெரியலை. அப்படி ஒருத்தர் இருந்தா நல்லாதான் இருக்கும். இப்போதைக்கு படத்துக்கு நல்ல கல்லா கிடைச்சா போதும்’ கமல் தயாரிக்கிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ’காட் ஆஃப் த வார்’ என்கிற ஜூனியர் என்.டி.ஆர் பட விளம்பரத்தில் மிஸ்டர் முருகரை வட இந்திய கடவுள் என்று அறிவித்திருந்தது பெரும் சலசலப்பை உண்டாக்கியிருந்தது. வட இந்தியர்களை வந்தேறின்னு சொல்றீங்களே… சாட்சாத் உங்க முருகன் ஜியே ஒரு வட இந்திய வந்தேறிதானப்பா என்று சீண்டுவது போல் இருந்தது வந்த அறிவிப்பு.
அந்த அறிவிப்பைக் கண்டதும் முருகனுக்கான காப்பி ரைட்ஸைக் கைவசம் வைத்திருக்கும் அண்ணல் சீமான் ’ தம்பி முருகனை தவறாக சித்தரிச்சா தமிழ் நாட்டுல ஒரு தியேட்டர்ல கூட முட்டை போண்டா, சமோஷா விக்க முடியாது’ என்று எச்சரித்திருக்கிறார்.
இந்த இன்னல் நிலையில் அண்ணல் சீமானுக்கு வந்த அடுத்த சோதனையாக வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து ’தமிழ்க் கடவுள்’ முருகன் என்றொரு படத்தை அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கு முன்னர் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘சீடன்’ படத்திலும் கூட ஒரு குட்டி முருக அவதாரம் எடுத்து அப்படத்தை தோற்கடித்தார் தனுஷ்.
தனுஷ் மீண்டும் முருக அவதாரம் எடுப்பதே ஒரு பெரும் அதிர்ச்சி என்னும் நிலையில் அந்த முருகன் வடசென்னையில்தான் பிறந்தார். அவர் செந்தமிழ் பேசியதாக இருப்பதெல்லாம் கட்டுக்கதை. நல்ல தரமான கெட்ட வார்த்தைகளுடன் அவர் வட சென்னைத் தமிழ்தான் பேசினார். வள்ளி, தெய்வானைகளைத் தாண்டி அவருக்கு ஆன்ட்ரியாவுடனும் ஒரு காதல் புரிதல் இருந்தது என்று தயாராகிறதாம் கதை.
முருகனுக்கு ஆன்ட்ரியாவுடன் இருந்ததுபோல் தம்பிகள் வெற்றிமாறன், தனுஷுடன் அண்ணன் சீமானுக்கும் நல்ல புரிதல் இருப்பதால் இப்படம் தொடர்பாக அவர் என்ன முடிவு எடுப்பார் என்று தெரிந்துகொள்ள தமிழ் நிலம் கன்னத்தில் கைவைத்து காத்துக்கிடக்கிறது.