கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' திரைப்படம், 56ஆவது 'ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில்' திரையிட தேர்வாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
மதுரை மாநகரின் கிராமங்கள் 90-களில் எப்படி இருந்தது என்பது தத்ரூபமாக இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. கிராமத்துப் பின்னணியைக் கதையாகக்கொண்டு உருவான இந்தப் படத்தில், சாதிய ஏற்றத்தாழ்வுகள், ஆணாதிக்கம், மூன்றாம் பாலினத்தவர்களின் உணர்வுகள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 'டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில்' 'டோரதி' படம் திரையிடப்பட்டது. இந்த சர்வதேச திரையிடலுக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வான முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் இப்படம் ஏற்கனவே பெற்றுள்ளது.
இந்நிலையில்,வரும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 7ஆம் தேதிவரை நெதர்லாந்தில் நடைபெறவுள்ள 'ரோட்டர்டாம் திரைப்பட விழாவில்', சர்வதேச அளவில் கவனம் பெற்ற படங்களுக்கான 'லைம்லைட்' பிரிவில் இப்படம் தேர்வாகியுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.