பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
நேற்று தன் பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
வயது மூப்பு காரணமாக சென்னை, வடபழனியில் உள்ள அவரது வீட்டில் சரவணன் இயற்கை எய்தினார்.
எம்ஜிஆர், சிவாஜி காலத்து திரைப்படங்களைத் தயாரித்த ஏவிஎம் நிறுவனம், கமல் ஹாசன் சிறுவனாக இருந்தபோதிருந்தும் அவரைக் கதாநாயகனாக வைத்தும் திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.
விஜய்யின் வேட்டைக்காரன் படம்வரை ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்புகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்துள்ளன.
கால ஓட்டத்தில் திரைப்படத் தயாரிப்பைவிட தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் ஈடுபட்டது. ஒரு கட்டத்தில் ஏவிஎம் படப்பிடிப்பு நிலையத்தில் தயாரிப்புப் பணி குறைவடையத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சென்னை, வடபழனியில் உள்ள அந்த இடம் குடியிருப்புப் பகுதிகள் கட்டுவதற்கான விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலைமாறுகட்டம்வரையிலும் சரவணன், நிறுவனத்தை கவனித்துவந்தார். எனினும் மூப்பு காரணமாக அன்றாடச் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்த அவர், முக்கியமான பொது நிகழ்வுகளில் மட்டும் கலந்துகொண்டுவந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்.