சினிமா செய்திகள்

கோல்டன் குளோப்: விருதுகளை அள்ளிய டிகாப்ரியோ திரைப்படம்!

Staff Writer

அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில், திரைப்பட பிரிவில் ஒன் பேட்டில் ஆப்டர் அனெதர் படமும், தொலைக்காட்சி பிரிவில் அடோலெசன்ஸ் தொடரும் விருதுகளை குவித்தன.

ஆஸ்கருக்கு அடுத்த படியாக, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு, கோல்டன் குளோப் என்ற பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 83வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடை பெற்றது.

சிறந்த திரைப்படங்கள் பிரிவில், 14 விருதுகளும், தொலைக்காட்சிப் பிரிவில், விருதுகளும் வழங்கப்பட்டன. அதில், பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கிய ஒன் பேட்டில் ஆப்டர் அனெதர் (one battle after another) என்ற ஹாலிவுட் திரைப்படம் சிறந்த கதை, சிறந்த இயக்குநர் உட்பட நான்கு விருதுகளை வென்றது.

சிறந்த சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கான விருதை சின்னர்ஸ் திரைப்படம் வென்றது. டிராமா பிரிவில் சிறந்த படமாக ஹாம்நெட் தேர்வு செய்யப்பட்டது.

தொலைக்காட்சி பிரிவில், நெட்பிளிக்ஸ் தொடரான 'அடோலெசன்ஸ், சிறந்த நடிகர், சிறந்த வெப் சீரிஸ் உட்பட நான்கு விருதுகளை குவித்தது. ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவில் சிறந்த படத்துக்கான விருதை, பிரேசிலிய திரைப்படமான தி சீக்ரெட் ஏஜென்ட் வென்றது. அனிமேஷன் பிரிவில் சிறந்த படமாக கே-பாப் டீமான் ஹண்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டது.

கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் இந்தியாவில் இருந்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மட்டுமே கலந்து கொண்டார். டிராமா பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதை அவர் வென்றார்.