இளையராஜா 
சினிமா செய்திகள்

“நான் என்ன செய்து விட்டேன்?” - நெகிழ்ந்த இளையராஜா

Staff Writer

“நான் எனது குழந்தைகளுக்காக நேரம் செலவிடவில்லை. அவர்களிடம் செலவழிக்க வேண்டிய நேரத்தில் சிம்பொனி எழுதினேன்” என இளையராஜா கூறியுள்ளார்.

தமிழக அரசு சார்​பில், இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் இசை பயண பொன்​விழா ஆண்​டையொட்டி "சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்​பில் பாராட்டு விழா சென்னை நேரு உள் விளை​யாட்​டரங்​கில் நேற்று முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நடை​பெற்​றது.

விழா மேடையில் இளையராஜா பேசியதாவது: “இசை உலக சரித்திரத்தில் இசையமைப்பாளருக்கு ஒரு அரசாங்கம் பாராட்டு விழா நடத்தியது இல்லை. இப்போது தான் முதல் முறையாக நடந்துள்ளது. லண்டனில் சிம்பொனி வாசிக்க போகிறேன் என கூறியதும் வீட்டிற்கு வந்து முதலமைச்சர் வாழ்த்தினார். திரும்ப வரும்போது அரசு மரியாதை கொடுத்து வரவேற்றனர்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தான் 'இசைஞானி' என பட்டம் கொடுத்தார். பின்னாளில் அதுவே என் பெயர் என ஆகிவிட்டது.

சிம்பொனி எழுதுவதற்கு என் வாழ்க்கை முழுவதும் செலவனாது. நான் எனது குழந்தைகளுக்காக நேரம் செலவிடவில்லை. அவர்களிடம் செலவழிக்க வேண்டிய நேரத்தில் சிம்பொனி இயற்றினேன். எனது பிள்ளைகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

‘ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்...’ - என்று சொல்வது போல். இந்த விழாவின் போஸ்டரை பார்த்தபோது நெகிழ்ந்து போனேன்.

சிம்பொனி எழுதும்போது கிராமிய சாயல், திரைப்படப் பாடல் சாயல், தமிழன் என்ற சாயல், இந்தியன் என்ற கட்டுப்பாடுகளை மீறி 35 நாள்களில் சிம்பொனியை எழுதி முடித்தேன்.

நான் என்ன செய்துவிட்டேன் என்று எனக்கு பாராட்டு விழா வைத்துள்ளீர்கள்? என்று தெரியவில்லை. நான் பேச நினைத்ததையே மறந்துவிட்டேன்.

சிம்பொனி இசையை அனைத்து மக்களும் கேட்க வேண்டும். இதை நேரில் கேட்டால்தான் முழுதாக உணர முடியும். ரெக்கார்டு செய்து கேட்டால் நன்றாக இருக்காது. அதனை. இது போன்ற உயர்ந்த விஷயங்களை நாம் காண வேண்டும். மக்களுக்காக பெரிய மைதானத்தில் சிம்பொனி நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு உதவி செய்வார் என நம்புகிறேன்.” என்று பேசினார்.