ஆட்சி மாறினால் காட்சிகளும் மாறிதானே ஆகவேண்டும் ? அப்படி திமுக ஆட்சி மாறியநிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் மனசு மாறிய ஒரு குட்டிக் கதை இது.
முன்னாள் துணை முதல்வர் உதயநிதியை நாயகனாக வைத்து அவர்களது ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு ‘மாமன்னன்’ படம் இயக்கி பெரும்பேரையும் பொருளையும் சம்பாதித்த பின்னர் ஏறத்தாழ கழக இயக்குநராகவே மாறிப்போன மாரி செல்வராஜ் சமூக வலைதளங்களில் உதயநிதியின் உஇபியாக செயல்பட்டு வந்த நிலையில் அடுத்து அவரது வாரிசு இன்பன் உதயநிதியை வைத்து படம் இயக்கவும் முன் வந்தார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு தேர்தல் முடிவுகள் வந்த பிறகு வரவிருந்த நிலையில், முன்னதாக நடிப்புப் பயிற்சி,நடனப்பயிற்சி, சிலம்பம், குதிரையேற்றம் என்று ஆயகலைகள் 64ஐயும் கற்றுக் குடித்துக்கொண்டிருந்தார் இன்பன்.
ஆனால் விதி வலியது அல்லவா?
எவரும் எதிர்பாராத நிலையில் திமுக தோற்று விஜய் ஆட்சியைப் பிடிக்க உதயநிதியின் ரெட்ஜெயண்டே சற்று ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டிய நிலை. இந்நிலையில் மாரி செல்வராஜ் மட்டும் ரிஸ்க் எடுப்பாரா என்ன ? சுமார் பத்து நாட்கள் முன்புவரை தனது உதவியாளர்களுடன் இன்பனுக்காக கதையை கூர் தீட்டி வந்த மாரி செல்வராஜ், தேர்தல் முடிவுகள் மாறியபின்னர் தனது மனசையும் மாற்றிக்கொண்டாராம்.
தனுஷை வைத்து அவர் இயக்கவுள்ள படத்துக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் மேல் காத்திருக்கவேண்டிய நிலையில்தான் இன்பன் படத்தை இயக்குவதாக இருந்தார். இப்போது அம்முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தனது ‘வாழை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
இந்த குட்டிக்கதையை குறும்படமாக எடுக்க விரும்புபவர்களுக்கு காப்பி ரைட்ஸ் இலவசம்.