இந்தியன் 3’ என்று ஒரு படம் இருப்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் மறந்திருந்த வேளையில் கடந்த அக்டோபர் 8ம் தேதியன்று லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ..சமரசம் இல்லாத மனநிலையுடன் சேனாதிபதி திரும்பிவிட்டார்.‘இந்தியன் 3:வார் மோட்’ மூலம் அந்த மறுவருகை தொடங்குகிறது என அறிவித்து படம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறது என தெரிவித்தது.
ஆனால் படத்துக்கு உயிர் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அது இன்னும் கோமா ஸ்டேஜைத் தாண்டவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
இந்தியன் 2’, கேம் சேஞ்சர் ஆகிய மெகா தோல்விகளைத் தொடர்ந்து புதிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் இந்தியன் 3’யை எப்படியாவது திரைக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்று துடிக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
ஆனால் ஏற்கனவே பெருத்த நஷ்டத்தில் தள்ளாடி வரும் லைகா நிறுவனம் புதிய செலவுகள் எதுவுமின்றி படத்தை ரிலீஸ் செய்ய தயார் என்கிற மனநிலையுடன் இருக்க, ஷங்கரோ இன்னும் 20 முதல் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியே தீரவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்.
இவ்விரு தரப்பும் இப்படி எதிரெதிர் மனநிலையில் இருக்க கமலோ இவர்களை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தனது சண்டியர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.
இந்நிலையில்,படத்தின் அடுத்தகட்ட வேலைகள் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியனவற்றை முடிவு செய்ய எண்ணிய இயக்குநர் ஷங்கர், அதற்காக தயாரிப்பாளர் சுபாஸ்கரனை சந்திக்க விரும்பினாராம். ஆனால் சுபாஷ்கரன் தரப்பில் தொடர்ந்து நோ ரெஸ்பான்ஸ்.
கடந்தவாரம் நடைபெற்ற அனிருத் காவ்யாமாறன் திருமண வரவேற்புக்காக சென்னை வந்திருக்கிறார் சுபாஸ்கரன்.
அப்போதும் இயக்குநர் ஷங்கர் தரப்பிலிருந்து அவரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட மறுநாள்
காலை பத்துமணிக்கு மேல் சந்திக்கலாம் என்று சுபாஸ்கரன் தரப்பில் சொல்லப்பட்டதாம்.
அடுத்தநாள் காலை,ஷங்கர் குழுவினர் லைகா நிறுவனத்தைத் தொடர்புகொண்டு சுபாஸ்கரன் சாரை எப்போது சந்திக்கலாம்?எங்கே சந்திக்கலாம்? என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு ‘சார் அதிகாலை விமானத்திலேயே கிளம்பிவிட்டார்’ என்று பதில் வர இந்தியன் தாத்தாவை விட அதிக கோபத்தில் இருக்கிறாராம் ஷங்கர்.
இப்படியே இன்னும் ஒரு பத்து வருடம் கடந்துவிட்டால் கமலுக்கு வயதான கெட் அப் க்காக போட வேண்டிய மேக் அப் செலவுகள் மிச்சமாக வாய்ப்புண்டு.