ரஜினி 
சினிமா செய்திகள்

600 கோடியைத் தாண்ட மாட்டார் ஜெயிலர்… ஊதிப் பெருக்கப்படும் கலெக்‌ஷன் !

மிஸ்டர் முள்

இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் எட்டாத 1000 கோடி வசூலை அடையும் பேராசையுடன் விடாமல் விளம்பரங்களால் ஊதிப் பெருக்கப்படும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ அதன் முதல் பாகம் சம்பாதித்த 600 கோடியை எட்டுவதே சந்தேகம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

கடந்த 15ம் தேதியன்று ரிலீஸாகி முதல் வாரத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜெயிலர் 2 இதுவரை 477 கோடியை எட்டிவிட்டதாக கதை கட்டப்படுகிறது. இதை ஒட்டி நமது யூடியூப் உண்மை விளம்பிகள் இப்படம் இன்னும் ஒரு வாரத்தில் 1000 கோடி அடிக்கும் என்று மனசாட்சி இல்லாமல் கதைத்து வருகிறார்கள்.

ஆனால் நிஜநிலவரம் அது இல்லை என்கிறார்கள் நடுநிலையாகப் பேசும் சில விநியோகஸ்தர்கள். படத்தின் ரிப்போர்ட் ஓரளவு ஓ.கே என்று உள்ள நிலையில் தமிழக திரையரங்கு வசூல் 125 முதல் 130 கோடி என்பதுதான் நிஜ நிலவரமாம். உள்ளூர் வசூல் விவரங்களிலேயே பல தில்லாலங்கடி வேலைகள் செய்யப்படும் நிலையில் வெளிநாட்டு வசூல் கதைகளை சொல்லவும் வேண்டுமா? அவ்வகையில் 300 கோடிக்கும் மேல் என்று சொல்லப்படும் வெளிநாட்டு வசூல் 200 கோடிக்கும் உள்ளேதான் இருக்கும் என்கிறார்கள்.

தற்போது பல திரையரங்குகளில் வசூல் வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில் இப்படம் இன்னும் ஒரு பத்து நாட்களில் இன்னுமொரு 100 கோடி வசூலித்தால் அதுவே பெரிய விசயம் என்கிறார்கள்.

ஆக ஜெயிலர் 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என்பதெல்லாம் சாத்தியமில்லாத சமாச்சாரம். அதன் முதல் பாகமான ஜெயிலர் வசூல் 600 கோடி என்று சொல்லப்பட்ட நிலையில் இப்படம் அதைவிட குறைவாகவே கலெக்ட் செய்யும் என்பதுதான் நிஜநிலவரம்.

அதுசரி, முதல் பாகம் நிஜமாகவே 600 கோடி கலெக்ட் செய்ததா என்றால் அது சகலகலா மாறன்களுக்கே வெளிச்சம்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram