விஜய்யின் இறுதித் திரைப்படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
ஜூலை 23ஆம் தேதி இந்தியாவிலும், ஜூலை 24 ஆம் தேதி வெளிநாடுகளிலும் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகிறது.
இந்தியாவில் இன்னும் முன்பதிவு தொடங்காத நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட்ட நாடுகளில் டிக்கெட் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்தில் முன்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில் உள்ள 'யோர்க் சினிமாஸ்' நிறுவனம் முதல் 24 மணி நேரத்திற்கு வி.ஐ.பி. உறுப்பினர்களுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் டிக்கெட் முன்பதிவு செய்து, பட வெளியீட்டில் ஏற்பட்ட தாமதத்தால் பலர் பாதிக்கப்பட்டனர்.
பணத்தைத் திரும்பப் பெற காத்திருக்கும் ரசிகர்களுக்கே முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சில தியேட்டர்கள் அறிவித்துள்ளன. அதன்பிறகே மற்றவர்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில திரையரங்குகளில் ஆன்லைன் முன்பதிவு இல்லாமல் நேரடியாக திரையரங்கில் மட்டுமே டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் நடித்த கடைசித் திரைப்படம் என்பதால், அதன் முதல் நாள் வசூல் புதிய சாதனையைப் படைக்கும் எனத் திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.