ஜூனியர் என் டி ஆர் முருகன் படம் 
சினிமா செய்திகள்

முருகன் வட இந்தியரா...? சர்ச்சையில் சிக்கிய திரைப்பட வாசகம்!

Staff Writer

முருகனைப் பற்றி தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் இயக்குநர் திரிவிக்ரம் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாகிவருகிறது.

இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பில் "Born in the North. Forged in the Heartland. Worshipped in the South." என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இதுதான் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் இதைக் கண்டித்து கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

த.வா.க. தலைவர் வேல்முருகனும் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

”தமிழர் பண்பாட்டு மரபிலும், சங்க இலக்கியங்களிலும், முருகப்பெருமான் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகவும், தமிழரின் வாழ்வியல், மொழி, பண்பாடு ஆகியவற்றோடு ஒன்றிணைந்த தெய்வமாகவும் போற்றப்படுகிறார். 

இந்த வாசகங்கள் முருகப்பெருமானைக் குறிப்பதாக இருந்தால், அது தமிழர் மரபையும் வரலாற்றுப் பார்வையையும் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

கலைப் படைப்புகளுக்கு படைப்புச் சுதந்திரம் உண்டு. ஆனால், அந்த சுதந்திரம் ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, மத உணர்வுகள் மற்றும் அடையாளங்களை மாற்றியமைக்கும் உரிமையாக மாறக்கூடாது. குறிப்பாக, பல்வேறு மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ள பொருளில், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான விளம்பர வாசகங்களைத் தவிர்க்க வேண்டும்.

எனவே, இந்த வாசகங்கள் முருகப் பெருமானைக் குறிப்பதா? இல்லையா? என்பதை திரைப்படக் குழுவினர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். முருகப் பெருமானை குறிப்பதாக இருந்தால், தமிழர் மரபுக்கு முரணாகப் புரிந்து கொள்ளப்படும் இந்த வாசகத்தை திரும்பப் பெற்று, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உரிய விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும், வரலாற்று மரபும் யாராலும் மாற்றி எழுதப்பட முடியாது. அவற்றை மதிப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்பதைத் திரைப்படக் குழுவினருக்கு வலியுறுத்துகிறோம்.” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.