”இளையராஜா ஒரு வன தேவதை போன்றவர். ஒரு இயக்குநராக நீங்கள் எதைக் கேட்டாலும் உங்கள் எதிர்பார்ப்பை விட கொஞ்சம் அதிகமாகவே கொடுப்பவர். எனவே இங்கே இருக்கிற இயக்குநர்கள் ஒருமுறையாவது அவருடன் இணைந்து பணியாற்றிவிடுங்கள். எதிர்காலத்தில், இப்படி ஒரு டெக்னீஷியன் ஒருவர் இருந்தார் என்று சொன்னால் நம்பக்கூட மாட்டார்கள். அவருடன் பணியாற்றக்கூடிய அனுபவம் அப்படிப்பட்டது.”
ராஜாவின் பயோபிக் பட தொடக்க விழாவில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பேசியது, இது.
கடந்த மே 14 அன்று ‘அன்னக்கிளி’ 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த நிலையில் துவங்கிய இளையராஜா கொண்டாட்டம் அடுத்த இரு வாரங்களில் அவரது 83வது பிறந்தநாளும் வந்துவிட்ட நிலையில் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. சமூகவலைதளங்கள் முழுக்க அய்யா போதும்யா நம்ம ராசைய்யாவுக்கு ஜலதோஷம் பிடிச்சிக்கப்போகுது’ என்று கையெடுத்துக் கும்பிடும் அளவுக்கு ராஜபுராணங்கள் நதியின் பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் கடந்தகாலங்களில் ராஜாவை மட்டம் தட்டி எழுதப்பட்ட விமர்சனங்கள் , அவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்மங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டு பகிரப்படுகின்றன.
இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில் மிகவும் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டிய விசயம் 50 ஆண்டுகள் தாண்டியும் ராஜா இன்னும் இன்னும் பிசியாக, அதிலும் பல முன்னணி இயக்குநர்கள்ன் படங்களுக்கு இசைத்துக்கொண்டிருப்பது.
தியாகராஜன் குமாரராஜா சொன்னது போல பல முன்னணி இயக்குநர்கள் பல முன்னணி இயக்குநர்கள் ‘ அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’ என்று பாடியபடி ராஜாவைத் தேடி வர ஆரம்பித்திருக்கிறார்கள். வெற்றிமாறனைத் தொடர்ந்து அப்படி முதல்படி எடுத்துவைத்தவர் சாட்சாத் தியாகராஜன் குமாரராஜாவேதான். தனது ‘மாடர்ன் டைம்ஸ்’ வெப் தொடருக்காக ராஜாவிடம் சென்றவர், அடுத்து தான் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கும் ராஜாவிடமே சென்றிருக்கிறார்.
அடுத்த வரவு மீண்டும் பால்கி. ராஜாவின் வெறிகொண்ட ரசிகரான பால்கியின் பெரும்பாலான இந்திப்படங்களுக்கு இசையமைத்தவர் நம்ம ராஜாதான் என்றாலும் அவர் முதல்முதலாக இயக்கும் தமிழ்ப்படத்துக்கு எட்டுப்பாடல்களை தயார் செய்துகொண்டிருக்கிறார் ராஜா என்பது சிலீர் செய்தி.
மற்றுமொரு புதுவரவு கார்த்திக் சுப்பாராஜ். இதுவரை தான் இயக்கிய 9 படங்களுக்கு வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய கார்த்திக் சுப்பாராஜ் தனது 10வது படத்துக்கு ராஜாவிடம் வந்து சேர்ந்திருக்கிறார்.
இதையும் தாண்டிய இன்னொரு இன்ப அதிர்ச்சி வரவு ‘மஞ்சணத்தி’ மாரி செல்வராஜ்.’ ராஜாவின் இசையில் படம் இயக்கவேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அவரது இசையைக்கேட்டுதான் திரைத்துறைக்கே வந்தேன்’ என்று நெகிழ்கிற மாரி செல்வராஜ் படத்தின் டிசைனுக்கு பயன்படுத்தும் ‘மஞ்சணத்தி’ எழுத்துகளையே ராஜாவின் கையால் எழுதி வாங்கி பயன்படுத்தியிருக்கிறார்.
இனி பா.ரஞ்சித்தும் வந்துட்டார்னா ராஜாவோட ரெகார்டிங் தியேட்டர் வாசல்ல ‘ஹவுஸ்ஃபுல். போயிட்டு அடுத்த வருஷம் வாங்க’ என்றொரு போர்டை மாட்டிவிடலாம்.