உதயநிதி ஸ்டாலின் - மாரிசெல்வராஜ் 
சினிமா செய்திகள்

‘மீண்டும் ஒரு முக்கிய படைப்பு’- மாரிக்கு உதயநிதி வாழ்த்து!

Staff Writer

இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றொரு முக்கிய படைப்பைத் தந்திருப்பதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தில் நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி, மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் இன்று (அக். 17) வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு படக்குழுவினர் நேற்றிரவு சிறப்புக் காட்சி திரையிட்டுள்ளனர்.

பைசன் திரைப்படத்தை பார்த்த பிறகு உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி செதுக்கி இருக்கிறார்.

படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.

பைசன் - காளமாடன் வெல்லட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.