சமீபகாலமாக, எடுக்கப்படுகிற படத்தை விட ரிலீஸுக்கு முன்னர் அதற்கு கொடுக்கப்படுகிற பில்ட் அப்கள்தான் தாங்கமுடியாதவைகளாக இருக்கின்றன. இந்த மூக்குத்தி அம்மன் பார்ட் 2 தொடர்பாக கொடுத்த பேட்டி ஒன்றில் படத்தின் 20 நிமிட க்ளைமாக்ஸ் காட்சிக்காக ஒரு வருட காலம் வியர்வை சிந்தி உழைத்ததாக இயக்குநர் சுந்தர்.சி உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.
அப்போ படம் நிச்சயம் ஒரு காவியமாக வந்திருக்கும் என்றுதானே நினைக்கத்தோன்றும்? ஆனால் நிஜநிலவரமோ என்னம்மா எங்களை இப்பிடி சோதிச்சிட்டியேம்மா என்று அம்மனுக்கு சம்மன் அனுப்பவேண்டிய நிலை.
போலீஸ் கான்ஸ்டபிள் நயன்தாரா கனவில் அடிக்கடி சில அமானுஷ்ய சம்பவங்கள் தோன்றி தொந்தரவு செய்கின்றன. அவரை மயிலாஞ்சி என்ற ஊருக்கு செல்லும்படி அசரீரி கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவரே வலுக்கட்டாயமாக மயிலாஞ்சி ஊருக்கு பணி மாற்றம் வாங்கிக் கொண்டு செல்கிறார். இந்நிலையில் அவரை அழிக்க சில சாத்தான் சக்திகள் முயல்கின்றன. சாதாரண கான்ஸ்டபிள் நயன்தாரா உண்மையில் மூக்குத்தி அம்மன் வடிவானவர். அவரை பழித்தீர்க்கவே 2000 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் சாத்தான் சக்தியை கொண்ட ரெஜினா மற்றும் அவரது காதலன் தீவீரமாக முயல்கின்றனர். அம்மன் உருவான நயன்தாராவும் சாத்தான் சக்தி பெற்ற ரெஜினாவும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகிறது. அப்போது ஒரு பிரளயம் வெடிக்கிறது. படம் பார்க்கிற நமக்கோ நெஞ்சு வலிக்கிறது.
2000 வருடக் காத்திருப்பு பழிவாங்கள் கதை என்கிற பெயரில் சுந்தர்.சி. நிஜமாக பழி வாங்குவது படம் பார்க்க வந்த ரசிகர்களைத்தான். எதற்கெடுத்தாலும் அந்த 12 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது… என்று படம் முழுக்க வெற்று பில்ட் அப்கள்தான்.
இப்படி ஒரு உப்புசப்பில்லாத கதையில் நடிக்க நயன்தாரா எப்படி ஒத்துக்கொண்டார் என்பது ஆச்சர்யம். முதல் பாதியில் கான்ஸ்டபிளாக வரும்போதும் இரண்டாவது பாதியில் அம்மனாக வரும்போதும் அவர் காட்டும் ஒரே எக்ஸ்பிரஷன் ‘என்னத்துக்குடா இந்த படத்துல கமிட் ஆனோம் என்பதுதான்.
இவர் போதாதென்று நடிகை சிநேகாவும் குஷ்புவும் இன்னும் இரு அம்மன்களாக வந்து ஒரு ஆவேசப்பாடலுக்கு ஆடித்தீர்த்து நம்மை வெறுப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறார்கள். வில்லியாக வரும் ரெஜினா அவரது காதலனாக வரும் துனியா விஜய் காட்சிகளெல்லாம் ஏமிரா இதி ரகம்.
ஹிப்ஹாப் ஆதியின் இசை கதையை மட்டுமல்ல நம்மையும் கோமா ஸ்டேஜுக்கு கொண்டு சென்றுவிடுகிறது.
படத்தின் ஒரே சிறிய ஆறுதல் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு. அதையும் கூட ஆர்வக்கோளாறான கிராஃபிக்ஸ் காட்சிகளால் சேதாரம் செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் பட துவக்கத்தில் சில அமானுஷ்யக் காட்சிகளால் அவதிப்படும் நயன் தாராவின் நிலைதான் படம் பார்க்கிற ரசிகர்களுக்கும்.
மூக்குத்தி அம்மன் என்று பெயர் வைத்து விட்டு படம் முழுக்க வலிக்க வலிக்க காதுகுத்துகிறார்கள்.