சினிமா செய்திகள்

முறுக்கிய மீசையை நறுக்கிய ’டோரதி’!

Staff Writer

ரிலீஸான மூன்றாவது வாரத்தில் இன்னும் அதிக திரையரங்குகள் பெற்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது கார்த்திக் சுப்பாராஜின் ‘டோரதி’. தரமான படங்களை கொஞ்சம் தாமதமாகவேனும் தமிழ் ரசிகர்கள் ஆரத்தழுவிக்கொள்வார்கள் என்பதற்கு இப்படத்தின் வெற்றி இன்னொரு அத்தாட்சி.

இசைஞானி இளையராஜாவின் முத்திரைப் பாடல்களுடன், படத்தின் கதைக்களத்துக்கு பரிவட்டம் கட்டிய பின்னணி இசையுடன், செப்டெம்பர் 25ம் தேதியன்று ரிலீஸானது டோரதி. இப்படத்துடன் ரிலீஸான மிகச் சுமாரான மசாலா படமான ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசையை முறுக்கு’ படம் முதல் வாரம் நல்ல வசூலை வாரிக்கொண்டிருக்க, டோரதி சுமாரான வசூலுடன் அப்படத்தை விட பின் தங்கியே இருந்தது.

டோரதி சொல்ல வந்த மனிதநேயமிக்க கருத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாத சில ஜென்மங்கள் படம் குறித்து நெகடிவ்வான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் ‘ பிலீவ் இன் ஆடியன்ஸ்’ என்று மக்கள் மீது தான் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை மட்டும் திரும்பத்திரும்ப பதிவிட்டபடியே இருந்தார்.

அவரது நம்பிக்கை பொய்க்காமல் டோரதிக்கு எதிராக முறுக்கப்பட்ட ஆண்திமிர் என்கிற மீசை நறுக்கப்பட்டு, ரிலீஸான மூன்றாவது வாரத்தில் வசூலிலும் மக்கள் பாராட்டுகளோடும் சரித்திரம் படைக்கத் துவங்கியுள்ளது.

படம் துவங்கிய நாளிலிருந்து இப்படத்தின் ஆன்மா இளையராஜாதான் என்று அவரை பக்திப்பரவசத்தோடு கொண்டாடிக்கொண்டிருந்த கார்த்திக் சுப்பாராஜ், நேற்று ராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்து சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்து வணங்கி ஆசிபெற, ராஜாவும் குறும்போடு, ‘இன்னும் பல வெற்றிகள் குவியட்டும்’ என்று வாழ்த்தினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram