மலையாளர் இயக்குநர் டாக்டர் பிஜூகுமார் தாமோதரன் இயக்கியுள்ள 'பாப்பா புக்கா’ என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் ஒருவர்.
சமூக பிரச்னைகளை மையப்படுத்தி திரைப்படங்களை எடுப்பதில் புகழ்பெற்றவர் மலையாள இயக்குநர் பிஜூகுமார் தாமேதரன்.
தற்போது அவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாப்பா புக்கா’ (Papa Buka) என்ற பப்புவா நியூ கினியா நாட்டு திரைப்படம் முதல் முறையாக 98ஆவது ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது.
பாப்புவா நியூ கினியா நாட்டின் 50 சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், அந்நாட்டு திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை பப்புவா நியூ கினியா நாட்டின் தயாரிப்பாளர் நோலீன் தெளலாவுடன் இணைந்து இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களான அக்ஷய் குமார் பரிஜா, இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் பிரகாஷ் பரே ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பா. ரஞ்சித் இது தொடர்பாக தனது சமூக ஊடகப்பக்கத்தில்,” இணை தயாரிப்பாளர்களில் ஒருவராக, நானும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக இந்த பப்புவா நியூ கினி – இந்தியா இணை தயாரிப்பில் பங்கெடுத்திருப்பது எனக்கு பெரும் பெருமை.
இந்தக் கதையை உலக மேடைக்கு கொண்டு செல்லும் படைப்பாளர்களுடன் நிற்கும் வாய்ப்பு கிடைத்ததில், நான் மிகவும் பாக்கியசாலியாக உணர்கிறேன். 'பாப்பா புக்கா' பட குழுவின் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். அவர்கள் இன்னும் பல விருதுகளை வென்று, இரு நாடுகளுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்." என்று பதிவிட்டிருக்கிறார்.