சினிமா செய்திகள்

’ரன்’ ரீ ரிலீஸ் ஃபன்… ரஜினி, கமலை வம்பிழுக்கும் லிங்குசாமி

Staff Writer

பட ரிலீஸுக்கு சில தினங்கள் முன்பு புரமோஷன் என்கிற பெயரில் சினிமாக்காரர்கள் அடித்துவிடுகிற அந்தப் படங்களை விட பயங்கர சுவாரசியமாக இருந்துவரும் நிலையில், தனது ‘ரன்’ பட ரீ ரிலீஸுக்காக யூடியூப் சேனல்களில் இயக்குநர் லிங்குசாமி அடித்துவிடுகிற கதைகள் சோஷியல் மீடியாக்களில் ‘அடடே’ போட வைக்கின்றன. அதிலும் குறிப்பாக அவர் ரஜினியையும், கமலையும் வம்பிழுத்திருப்பது அவர்களது ரசிகர் வட்டாரத்தை சூடாக்கியுள்ளது.

2010ல் வெளியான பையாவுக்குப் பிறகு அய்யா லிங்குசாமிக்கு வெற்றி வசப்படவில்லை. அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2’ தெலுங்குப்படமான வாரியர் ஆகிய நான்கு படங்களுமே படுதோல்வி. அதனால் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக அடுத்து படம் இயக்கும் வாய்ப்பின்றி தவித்துவரும் லிங்கு இடையில் அஞ்சான் படத்தை ரீ ரிலீஸ் செய்தார். சூர்யாவுடன் ஒரு செல்ஃபி எடுக்க முடிந்ததைத் தாண்டி அதனால் எந்தப் பலனும் இல்லை.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவர் இம்முறை வரும் வெள்ளியன்று தனது ரன் படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார். இப்பட புரமோஷனுக்காக அனைத்து யூடியூப் சானல்களுக்கும் மணிக்கணக்கில் பேட்டி அளித்திருக்கிறார் லிங்கு. அப்பேட்டிகளில் அவர் அவிழ்த்துவிடும் கதைகள் சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகின்றன.

குறிப்பாக ரஜினி கமல் குறித்து அவர் நிறைய பேசியிருக்கிறார். ரஜினியின் ‘பாபா’ படம் ரிலீஸாவதை முன்னிட்டு திரையுலக ஜாம்பவான்கள் பலரே தங்கள் படங்களை வெளியிடத் தயங்கியபோது அப்படத்தை ரன் எப்படி அடித்து நொறுக்கியது என்பதை பெருமிதம் பொங்கக் கூறுகிறார் லிங்கு.

கமலை வைத்து உத்தம வில்லன் தயாரித்ததால் தன் நிறுவனம் எப்படி தெருவுக்கு வந்தது என்பதை ஏற்கனவே பல பேட்டிகளில் கூறியிருக்கும் லிங்கு இம்முறை ‘த்ரிஷ்யம்’ படத்தை தன்னை வாங்கவிடாமல் கமல் செய்த சதியையும் அம்பலப்படுத்திருக்கிறார்.

கமலை வச்சு உத்தம வில்லன் பார்ட்2 எடுத்தீங்கன்னா எல்லா பிரச்சினையும் முடிவுக்கு வந்துடும். ட்ரை பண்ணுங்க லிங்குசாமி சார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram