நடிகர் சூர்யா - இயக்குநர் பாலா 
சினிமா செய்திகள்

'என் வாழ்க்கையை மாற்றிய போன் கால்’ – இயக்குநர் பாலா குறித்து சூர்யா நெகிழ்ச்சி!

Staff Writer

”இரண்டாயிரத்தில் பாலாவிடமிருந்து போன் கால் வரவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கை கிடையாது.” என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கால திரைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் சிவக்குமார் இயக்குநர் பாலாவுக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கினார். இதையடுத்து பாலா குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கும் நடிகர் சூர்யா, "இரண்டாயிரத்தில், நெய்காரன்பட்டியில் ஷூட்டிங் அப்போ ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலுக்குப் பிறகு வாழ்க்கையில் எல்லாமே மாறிடுச்சு.

சேது படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நடிகர் நடிக்கமுடியுமா? இயக்குநர் இப்படி இயக்க முடியுமானு 100 நாள் எனக்குள்ள சேது படத்தோட தாக்கம் இருந்தது. அடுத்த படத்தை உன்னை வச்சு பண்றேன்னு சொன்ன பாலா சார் வார்த்தை எல்லாத்தையும் மாத்துச்சு. பிதாமகன் ஷூட்டிங்ல பாலா சார்கூட ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை கவனித்தேன்.

2000த்தில் எனக்கு ஒரு போன் கால் வரவில்லை என்றால் இந்த வாழ்க்கை எனக்குக் கிடையாது. நந்தா பார்த்துவிட்டு கெளதம் காக்க காக்க படத்துக்கு அழைத்தார். அதன் பிறகு சஞ்சய் ராமசாமி கேரக்டரில் நடிக்க முருகதாஸ் சார் கூப்பிட்டார். இதற்கெல்லாம் காரணம் பாலா அண்ணன்தான்.

வணங்கான் மிக முக்கியமான படமாக இருக்கும். உறவுகளுக்கு பாலா அண்ணன் மதிப்பு கொடுப்பார். அவங்களோட அறம், கோபம் என பல விஷயங்களை அண்ணன் படத்தில் பார்க்கலாம். அண்ணன் என்பது வார்த்தை இல்ல, உறவு. நிரந்தரமான இந்த அண்ணன் தம்பி உறவைக் கொடுத்த அண்ணனுக்கு நன்றி. என்னுடைய பேரன்பும் மரியாதையும் இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு அண்ணா." என்று சூர்யா பேசினார்.

பின்னர் பேசிய இயக்குநர் பாலா, சூர்யாவோடு பணியாற்றும்போது ஒரு நடிகரோடு பணியாற்றுவது போல அல்லாமல் தன் தம்பியோடு பணியாற்றுவது போல் இருக்கும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சூர்யா வருத்தப்படுவார் என்ற காரணத்துக்காகவே சூர்யாவுக்கு முன்பாக தான் புகைப்பிடிப்பதில்லை எனத் தெரிவித்த பாலா, ஒரு தம்பியாக இருந்தால் மட்டுமே இப்படி வருத்தப்பட முடியும் எனவும் குறிப்பிட்டார்.