தனுஷை வைத்து ‘வாத்தி’ படம் இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரிகாருவின் இரண்டாவது தமிழ்ப்படம் இந்த ’விஸ்வநாதன் அன் சன்ஸ்’.
ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு கோல்ட் மெடல் வென்றுகொடுத்த விளையாட்டு வீரர் மாபெரும் தொழில் அதிபர் சூர்யா. 42 வயதாகியும் திருமணப் பிடிப்பு இல்லாமல் இருக்கிறார். அம்மா ராதிகா சும்மா இருப்பார்களா ? கல்யாணம் பண்ணி எனக்கு வாரிசைக் கொடு என்று சதா அடம்பிடிக்கிறார். அடிக்கடி வெளிநாடு செல்லும் சூர்யா ஒருமுறை கையில் குழந்தையோடு வீடு திரும்புகிறார். வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தை. முதலில் குழந்தையை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் ராதிகா பின்னர் கொஞ்சத் தொடங்கியவுடன் அக்குழந்தைக்கு எலும்பு பாதிப்பு நோய் இருப்பது தெரிய வருகிறது.
மருத்துவ விதிகளின்படி வாடகைத்தாய் ரகசியமாக வைக்கப்படவேண்டிய நிலையில் குழந்தையின் சிகிச்சைக்காக தாயைத்தேடி ஓடும் சூர்யா அது 20 வயதே ஆன மமிதா பைஜு எனக் கண்டறிந்து அழைத்து வருகிறார்.
குழந்தையின் சிகிச்சைக்காக வந்த மமிதாவுக்கு சூர்யாவின் ஸ்மார்ட்னெஸ் பிடித்துவிட என்னைக்காதலி, கல்யாணம் பண்ணிக்கோ என்று அடம்பிடிக்க… அடுத்து என்ன நடந்தது என்பதுதான் ‘வி அ ச’.
இந்த சுவாரசியமான திருப்பமெல்லாம் இடைவேளைக்கு முன்பே வந்துவிட அடுத்த ஒரு மணிநேரம் ஜல்லி அடித்து சுபமாக முடித்து வைக்கிறார் வெங்கி.
படத்தின் டாப் ஸ்கோரர் நிச்சயம் மமிதா பைஜூதான். சின்னச்சின்ன குறும்புகளால் கொள்ளைகொள்கிறார். மிடுக்கான தொழில் அதிபர் வேடத்தில் சூர்யாவும் அசத்துகிறார்.
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும், ஜி.வி ப்ரகாஷின் ஒளிப்பதிவும் படத்துக்கு பக்கா பலங்கள். மொத்தத்தில் விஸ்வநாதன் அன் சன்ஸ்… முதல் பாதி ஜாலி ஃபன்ஸ்… இரண்டாவது பாதி நம்ம முதுகில் டின்ஸ்.