பாக்யராஜ், சேரன் 
சினிமா செய்திகள்

கதைப்பஞ்சாயத்துகளுக்கு சேரனாவது நடுநிலையாக நடந்துகொள்வாரா ?

Staff Writer

மொத்தம் 400 உறுப்பினர்களே கொண்ட, 800க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் கொண்ட தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இயக்குநர் சேரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிறன்று நடந்த இத்தேர்தலில் பாக்யராஜ் அணி, நம்ம பாக்யராஜ் அணி என்ற இரு பெயர்களில் சேரன் அணியும், வி.சி குகநாதன் அணியும் போட்டியிட்டனர். உறுப்பினர்கள் சிலரை தகுதி நீக்கம் செய்தது உள்ளிட்ட காரணங்களால் சிறுசிறு சலப்புகளுடன் நடந்து முடிந்த தேர்தலில் சேரன் அணி வெற்றி பெற்றது.

சேரன் தலைவராகவும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் செயலாளராகவும் இயக்குநர் ஆர். சுந்தரராஜன் பொருளாளராகவும், இயக்குநர் சமுத்திரக்கனி, பாடலாசிரியர் சிநேகன் துணைத்தலைவர்களாகவும் பாடலாசிரியர் முத்துலிங்கம், இயக்குநர்கள் பாஸ்கர் சக்தி,ரவிமரியா, வி.பிரபாகர் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2005ல் வெளிவந்த ‘தவமாய் தவமிருந்து’ வரை தமிழ் சினிமா தவமிருந்து பெற்ற இயக்குநர் என்று கொண்டாடப்பட்ட சேரன் அடுத்து தொடர்ந்து தந்த சொதப்பலான படங்களால் ‘அய்யா டாக்டர் ராமதாஸின்’ வாழ்க்கை வரலாற்றை இயக்கும் அளவிற்குச் சென்றார்.

ஓய்வு காலத்தில், தற்போது அவருக்குக் கிடைத்திருக்கிற பொக்கிஷ வாய்ப்பு இந்த தலைவர் பதவி. கடந்த காலங்களில் கதைத் திருட்டு தொடர்பான பஞ்சாயத்துகள் நடந்தபோதெல்லாம் நீதி,நியாயத்தை விட வலியவர்களுக்கு ஆதரவான தீர்ப்புகளையே நாட்டாமைகள் வழங்கினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மன்னர் சேரனாவது பழைய நடைமுறைகளை ஒழித்து நிஜமான எழுத்தாளர்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram