சினிமா செய்திகள்

கொல்லங்குடி கருப்பாயி 99 ஆம் வயதில் மறைவு!

Staff Writer

பிரபல நாட்டுப்புறப் பாடகரும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் தன் 99ஆவது வயதில் இன்று காலமானார். 

மதுரையை அடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பாயி, இயல்பிலேயே நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிவந்தார். 1980,90-களில் தமிழகத்தில் அறிவொளி எழுத்தறிவு இயக்கம் அரசால் தொடங்கப்பட்டபோது அதன் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஊர் ஊராகப் போய் பாடல்களைப் பாடி தனக்கென தனி இரசிகளை ஈர்த்தவர். 

அம்மையாரின் பாட்டுத் திறனை அறிந்த திரைப்பட இயக்குநர் பாண்டியராஜன், ஆண்பாவம் திரைப்படத்தில் இவரை நடிக்கவைத்தார். அதில் பாடல்களைப் பாடியபடி பாண்டியராஜனுக்குப் பாட்டியாக நடித்து கருப்பாயி அம்மாள் அசத்தியிருந்தார். 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய அம்மாள், கோபாலா கோபாலா, ஆயுசு நூறு உட்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

இவருடைய கலைத்துறைப் பங்களிப்புக்காக 1993இல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.