நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் 
சினிமா

எங்கே போனது "இதயம்" முரளிகள் இனம்?

மிஸ்டர் முள்

இன்றைய 2கே கிட்ஸ்களின் செயல்பாடுகளை விமர்சிக்கிற எவர் ஒருவரையும் ‘பூமர் அங்கிள்’ என்றொரு கமெண்டை அடித்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் பூமர் அங்கிள் என்பவர்கள் பூமிக்கு பாரம்.

கடந்த வாரம் ரிலீஸான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘டிராகன்’ ஆகிய முழுக்க முழுக்க 2கே கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படங்கள் குறித்த ஒரு பூமர் அங்கிளின் ஆதங்கம்தான் இக்கட்டுரை.

இப்படி 2 கே கிட்ஸ்களைக் குறிவைத்து எடுக்கப்படுகிற 90 சதவிகிதப் படங்கள் கலாசாரத்தைக் கொத்துக்கறி போடுவதையும், காதல் என்று நம்பப்படுகிற சமாச்சாரங்களுக்கு இறுதி மரியாதை செய்வதையும் தங்களது முதல்கடமையாகக் கொண்டிருக்க அப்பணிகளை இவ்விரு படங்களும் மிகக் கச்சிதமாக செய்து முடித்திருக்கின்றன. மட்டுமின்றி இரு படங்களுமே தியேட்டர்களில் கொண்டாடித் தீர்க்கப்படுகின்றன.

தனுஷ் இயக்கியுள்ள, அவரது அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நி.எ.எ. கோ’ படத்தின் கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம்.

நாயகன் பிரபுவுக்கும் அவரது பள்ளிக்கால தோழி ப்ரீத்திக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. பிரபுவுக்கு சில தினங்கள் முன்னர்தான் அவரது காதலி நிலாவோடு பிரேக் அப் ஆகியிருக்கிறது.

‘மேட்டர்’ முடிஞ்சதும் என்னக் கழட்டி விட்டுட்டல்ல?’ என்று ஆவேசம் கொண்ட நிலாவோ அரவிந்தைத் திருமணம் செய்யத் தயாராக இருக்கிறாள். நிலாவிடமிருந்து அழைப்பிதழ் வந்ததால் அந்த திருமணத்துக்குச் செல்லும் பிரபு நிலாவை மறக்க முடியாத ஃபீலிங்கில் இருந்தபடியே நிலாவின் தோழி ஒருத்தியைக் காதலிக்கிறான்.

இதே திருமணத்துக்கு வந்திருக்கும் பிரபுவின் நண்பன் ராஜேஷ், அவனது நண்பன் முகேஷின் காதலி ஷ்ரியாவைக் காதலிக்கிறான்.

இடைவேளைக்குப்பின், பிரபு தன்னை இன்னும் மறக்கவில்லை என்பதை அறிந்த நிலா, தனக்கு தாலி கட்டப்படுவதற்கு சில நிமிடங்கள் முன் பிரபுவை நோக்கி ஓட, அவர்கள் ஏற்கனவே ஒரு தடவை பிரேக் அப் ஆனவர்கள் தானே இன்னொரு முறை ஆகாமலா போய்விடும் என்று பின்னாலேயே தாலியும் கையுமாய் மாப்பிள்ளை ஓட, நண்பன் ராஜேஷ் அவனது நண்பனின் காதலியிடம் லவ்வை சொன்னால் என்ன தப்பு என்று அவரும் ஓட…

பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வைத்தியம் பார்க்கச் சென்ற விசுவின் கதை ஞாபகம் வருகிறதா? ஆனா சாமி சத்தியமா இது அந்தப் படத்தோட கதையேதாங்க.

அடுத்து, நம்மை நோக்கி ஓடிவந்திருக்கும் ‘டிராகன்’ இன்னும் கொஞ்சம் ஆபத்தான மிருகம்.

நாயகன் ப்ரதீப், வேலூர் தனியார் பள்ளியில் கோல்டு மெடலிஸ்ட். பிஞ்சிலே பழுத்தால்தானே 2கே கிட்ஸ்?. கோல்ட் மெடல் வாங்கிய கையோடு காதலியிடம் ‘லவ் யூ’ சொல்ல அவளோ ‘இந்த சாஃப்ட் பாய்ஸ் எல்லாம் நோ யூஸ். ரக்கட் பாய்தான் என் சாய்ஸ்’ என்று சொல்ல, பயபுள்ள உடைந்துபோய்விடுகிறான்.

கல்லூரிக்குள் நுழையும்போதே அடிதடி குடியின் அத்தாரிட்டியாகி ரக்கட் பாயாக மாறி 48 அரியர்ஸ் வைக்கிறான். வாயில் சர்வசதா நேரமும் சிகரெட். கல்லூரியின் மாடியில் காதலியின் மடியில் ஜல்சா. காதலி தனது இடுப்பில் ‘டிராகன்’ டாட்டு போட்டு அதை ரசிகர்களுக்கு காட்டுவதெல்லாம் செம ஹீட்டு.

ஷாக்கைக் குறைங்க. இன்னும் ஏராள அதிர்ச்சிகள் படம் முழுக்க இருக்கின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் படிக்கிற காலத்தில் ஒரு மாணவன் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்கிறான் ஹீரோ. இந்த டிராகனின் அட்ராசிட்டிகள் பத்தாதென்று அவரது மானசீக வாரிசு என்கிற பெயரில் ‘குட்டி டிராகன்’ ஒருவரும் வந்து ரணகளம் செய்கிறார்.

டிராகன் லவ் பண்ணிய கல்லூரி புரஃபஸர் அனுபமாவை இவரும் லவ் பண்ணும் காட்சிகளும் உண்டு.

அதாவது இப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சொல்ல வருவது இதுதான்… ‘ப்ரோ... படிக்கிறப்ப தப்பித்தவறி கூட புக்கை டச் பண்ணாம அடிதடி பண்ணி கெத்தா இருக்கணும்.. படிப்பை முடிச்சதும் ஃபிராடு பண்ணியாவது டாப்பா வந்துடணும்…

படத்தோட கடைசி சீன்ல நல்வவனாயிட்ட மாதிரி லைட்டா சீன் போட்டா போதும்...

பிரைட் கேர்ள லவ்வராக்கி, ரிச் கேர்ள் கூட ரொமான்ஸ் பண்ணி, குட் கேர்ள்கூட செட்டிலாகி.. இப்பிடி மூணு ஃபிகரை உஷார் பண்ணிடலாம்'.

இந்த இரு படங்களையும் அடுத்தடுத்த காட்சிகளாக தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியேறியபோது, தொடாமலே காதல், பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல் என்று 80, 90 களில் காதலுக்கு கோட்டை கட்டிய படங்கள், காதலுக்கு மரியாதை செய்த படங்கள் குறித்த நினைவுகள் ஏனோ தற்செயலாக வந்துபோயின.

‘ஒரு தலை ராகம்’ தொடங்கி ‘இதயம்’ வரை பல படங்களில் காதலனும் காதலியும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொண்டதில்லை என்பதையெல்லாம் இந்த 2கே கிட்ஸ் நம்புவார்களா?

இந்த நினைவுகளை அசைபோடுவது போலவே சமீபத்தில் ஒரு படத்துக்கு ‘இதயம் முரளி’ என்றுகூட பெயர் சூட்டியிருந்தார்கள். முன்ன ஒரு காலத்தில் டைனோசர்கள் இருந்தன என்பதுபோல முன்ன ஒரு காலத்தில் இந்த இதயம் முரளிகள் இருந்தார்கள் என்பதுதானே நிதர்சனம்.

படக்காட்சி ஒன்றில் வடிவேலு, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன் ஆகிய மூவரும் மூக்குமுட்டக் குடித்திருப்பார்கள். போதையின் உச்சத்தில் செருப்பு ஒன்றைக் கையிலெடுத்து ‘இந்தாங்க மாமா சிக்கன் லெக் பீஸு. சாப்பிடுங்க’ என்று ஆர்.சுந்தர்ராஜனிடம் வடிவேலு நீட்ட, ‘டேய் அது செருப்புடா. இந்த மாமனுக்கு மரியாதையே இல்லையாடா?’ என்று அழுகிற குரலில் ஆர்.சு. கேட்பார்.

இப்போது இந்த 2கே கிட்ஸ்களுக்காக படம் எடுக்கும் தனுஷ், அஸ்வத் போன்ற இயக்குநர்களை நோக்கி பூமர் அங்கிள்கள் கேட்க விரும்புவதும் இதைத்தான்.

‘தம்பிகளா காதலுக்குன்னு ஒரு மரியாதையே இல்லையா?’

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram