ரஞ்சித், சுரேஷ் காமாட்சி 
சினிமா

திரைப்பட விருதுகள்… ரஞ்சித் உட்பட திரையுலகினர் விமர்சனம்!

Staff Writer

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை அறிவித்துள்ள நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

விருது அறிவிப்பு என்றாலே சர்ச்சைகள் இருக்கத்தான் செய்யும். அது இலக்கிய விருதாக இருந்தாலும், திரைப்பட விருதுகளாக இருந்தாலும் சரி.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட விருது அமைப்புகள் நேர்மையாக செயல்படுகிறதா இயக்குநர் பா. ரஞ்சித் உட்பட பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இயக்குநர் பா. ரஞ்சித்

தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

2014 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சி! அதில் மாநாடு படத்திற்கு இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த எடிட்டருக்கான விருது பிரவீன் கே.எல்., சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது ரிச்சர்ட் எம். நாதன் வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.

அதேசமயம் 2019 இல் வெளியான மிக மிக அவசரம் படம் தேர்வாளர்களின் பார்வையில் படாமல் போனது ஏனோ?! சமூகம் சார்ந்து பெண் போலீசாரின் அவஸ்தையை கருணையோடு அணுகிய படம் கண்ணை மறைத்துவிட்டது போலும். ஒருவேளை தமிழக அரசு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வந்திருந்தால் பார்வைக்கு கிடைத்து விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். இப்படி பல வருடங்களாகக் கிடப்பில் போட்டு மொத்தமாக வழங்குவதால் கூட கண்ணில் படாமல் போயிருக்கலாம். நல்ல படங்கள் இப்படித்தான் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. சமூகம் சார்ந்த ஒரு நல் முயற்சியை விருதுப்பட்டியலில் விடுபட வைத்த தேர்வுக்குழுவினருக்கும்.. தமிழக அரசுக்கும் என் வாழ்த்துகள்!

திரைவிமர்சகர் தயாளன்

கடந்த 25 ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த உலகத் தரம் வாய்ந்த சினிமா "மேற்குத் தொடர்ச்சி மலை". தமிழ்நாட்டு அரசு வெறும் இவண்ட் மேனஜ்மெண்ட் அரசாகவும், சோசியல் மீடியா அரசாகவும் இருக்கிறது. காலம் குறித்து வைத்துக் கொள்ளும்.