நேர்காணல்: ஷாஜி சென்
எழுத்து: தா. பிரகாஷ்
எஸ்.பி.பி. போன்று பாடுவார்; ஜாகிர் உசேன் போல் தபேலா வாசிப்பார்; விவேக் மாதிரி சிரிக்க வைப்பார். இவை அனைத்தையும் ஒரே சமயத்தில் செய்து வியக்கவும் வைப்பவர் ஸ்டாண்ட் அப் காமெடியனான அலெக்சாண்டர் பாபு.
வெளிநாட்டில் மென்பொறியாளராக பணியாற்றிய அவரின் வாழ்க்கை பயணம் சுவாரஸ்யமானது.
சமீபத்தில், ’அன்பா’ என்ற ஓடிடி-யை தொடங்கியுள்ள அவரிடம் அந்திமழைடிவி யூட்யூப் சானலுக்காக எழுத்தாளரும் இசை விமர்சகருமான ஷாஜி சென் நடத்திய உரையாடலில் இருந்து சிலபகுதிகள் இங்கே:
“என்னுடைய அப்பா – அம்மா இருவருமே ஆசிரியர்கள். அப்பா தமிழாசிரியர். அவரிடம் தான் தமிழ் படித்தேன். நான் தான் எங்கள் வீட்டில் கடைக்குட்டி.
சொந்த ஊர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆண்டாவூரணி என்ற கிராமம். ஊரிலிருந்த தேவாலயத்தில் என்னுடைய அப்பா ஆர்மோனியம், தபேலா எல்லாம் வாசிப்பார். அதனால், எனக்கும் அந்த வாத்திய கருவிகளை வாசிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. தபேலா தான் முதலில் வாசித்த இசைக்கருவி.
பதினோராம் வகுப்பு விடுமுறையில் அண்ணன் வீட்டிற்கு சென்னை வந்தேன். பக்கத்து வீட்டில் தபேலா மாஸ்டர் ஒருவர் இருந்தார். அவரிடம் அண்ணன் அனுப்பிவிட்டார். அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது, தபேலா கற்றுக் கொள்வதற்கென்று பாடம் இருக்கிறதென்று. ஒரு மாதம்தான் அங்கு இருந்ததால் பெரியதாக கற்றுக் கொள்ள முடியவில்லை.
கிண்டி பொறியியல் கல்லூரியில் கணினிப்பொறியியல் படித்துவிட்டு, மேல் படிப்பிற்கு அமெரிக்கா சென்றேன். கூடவே தபேலாவையும் எடுத்து சென்றேன். படிப்பை விடவும் தபேலா கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது.
செயிண்ட் லூயிஸ் நகரத்தில் அவ்வப்போது கச்சேரிகள் நடக்கும். அப்படியொரு சமயத்தில் தான் ஜாகீர் உசேனை முதல் முறைடாக பார்த்தேன். அவரைப் போல ஆகவேண்டும் என முடியெல்லாம் நீளமாக வளர்த்தேன்.
பிறகு, கலிபோர்னியாவுக்கு வேலைக்கு சென்றேன். அங்கிருந்த இந்துஸ்தானி ஸ்கூலில் ஜாகிர் உசேனின் நிகழ்ச்சி அடிக்கடி நடக்கும். மீண்டும் அவரின் நிகழ்ச்சியைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் தபேலா கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. இருந்தாலும், பிரபல தபேலா மேதையான ஸ்வபன் சௌத்ரியிடம் தபேலா கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தபேலாவுக்கு பிறகு பாடல் கற்றுக் கொள்ள நினைத்தேன். ஆனால், தொழில்முறை பாடகராக முடியுமா என்ற அச்சம் இருந்து. அதனால் நடிகர் ஆகலாம் என முடிவெடுத்தேன். அதற்கு என்னுடைய மனைவியும் ஒத்துழைத்தார். 37 வயதில் வேலையிலிருந்து பிரேக் எடுத்தேன். அதற்கு மூன்று வருடம் பணத்தை சேமித்தோம். நமக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்வதுதானே வாழ்க்கை? அதை நோக்கிப் பயணிக்க முடிவு செய்தேன்.
விவேக், கிரேஸி மோகன் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், கிரேஸி மோகன் குழுவினரிடம் சேர்ந்து பயணிக்க விரும்பினேன். அவர்கள் குழுவினரிடம் எல்லாம் பேசினேன். பிறகு, வினோதினி வைத்தியநாதன் இயக்கத்தில் இரண்டு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த சமயத்தில் யூடியூப் பிரபலமாகத் தொடங்கியது. ஸ்டாண்ட் அப் காமெடியில் எஸ்.ஏ.அரவிந்த், கார்த்திக் இருவரும் கலக்கிக் கொண்டிருந்தார்கள். அரவிந்த் எனக்கு பெரிய உத்வேகமாக இருந்தார்.
இதற்கிடையே, ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்கு ஆடிசன் சென்றேன். அதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது ’ஏவம்’(Evam Entertainment Private Limited) என்ற அமைப்பு ஒரு பயிற்சி கொடுத்தது. அந்த பயிற்சியின் வழியாகத்தான் ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆனேன். அந்த அமைப்பின் மேடையில்தான் என்னுடைய முதல் நிகழ்ச்சி நடந்தது. எனக்கு தபேலாவும் பாடல் பாடவும் தெரியும் என்பதால் அதையும் ஸ்டாண்ட் அப் காமெடிக்குள் கொண்டு வந்தேன்.
கிறிஸ்துவத்தையும் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களையும் சேர்த்து ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து. இருந்தாலும் ஹாரிஸை ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அது ஒரு சின்ன வருத்தத்தைக் கொடுத்தது. பிறகு எனக்கு பிடித்த ரெட்ரோ பாடல்களை நகைச்சுவை கலந்து பாடினேன். அப்படித்தான், நாகூர் அனிபா, டி.எம்.எஸ். மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி. பாடலை பாடினேன்.
என்னுடைய ஸ்டாண்ட் அப் காமெடி தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்க காரணம் வியாபாரம் மட்டும்தான். தொலைக்காட்சியில் வேண்டுமானால் தமிழில் காமெடி பண்ணலாம். நேரில் அதற்கான வரவேற்பு குறைவு. ஸ்கிரிப்ட் எழுதும் போதே எந்த வார்த்தையை தமிழில் சொல்ல வேண்டும் எதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என எழுதிவிடுவேன். தொடக்கத்தில் ரசிகர்களுக்கு ஏற்ற காமெடிதான் எழுதினேன். பிறகு நண்பர்களின் ஆலோசனையால் என்னுடைய வாழ்க்கையைப் பேச ஆரம்பித்தேன்.
கலை வீரியம் மிக்கது. இதன் மூலமாக மனிதர்களின் இதயங்களை வருட முடியும். கலை வழியாக மனமாற்றத்தை ஏற்படுத்திட முடியும். அதேபோல், யூடியூப் போன்ற சோஷியல் மீடியாக்கள் வந்ததால்தான் அலெக்ஸ் இன்றைக்குப் பேட்டிக் கொடுக்க முடிகிறது. என்னுடைய வீடியோக்களை யூடியூப்பில் பார்த்தவர்கள்தான் என்னுடைய நிகழ்ச்சியை நேரில் பார்க்க வந்தனர்.
‘அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ முடிந்த பிறகு படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆபீஸ் போட்டு கதைகளையெல்லாம் கேட்க ஆரம்பித்தேன். கதாநாயகனாக நடிக்கக் கேட்டார்கள். ஆனால் கதைகள் எதுவும் சரிவராததால் நடிக்கவில்லை. மாதவன் நடித்த மாறா கதை பிடித்திருந்ததால் அப்படத்தில் நடித்தேன். அதற்கு முன்னர் நஞ்சுபுரம் என்ற படத்தில் நடித்துள்ளேன். படம் நடிப்பது ரொம்ப சிரமம். கேமிரா முன்னாடி நடிப்பது கொடுமையானது. டப்பிங் பேசுவது அதைவிட சிரமமாகத் தோன்றியது. ஆனால் அது மிக அருமையான அனுபவமாக அமைந்திருந்தது.
ஜெய்பீம் படத்தில், மணிகண்டன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஞானவேல் கேட்டார். அப்போது, ஏற்கெனவே ஒத்துக்கொண்ட நாடகங்களுக்கான ஒத்திகை பணி சென்று கொண்டிருந்ததால் ‘சனி, ஞாயிறு மட்டும் வரட்டுமா’ என்று கேட்டேன். ‘மூன்று மாதங்கள் முழுசாக வந்துவிட வேண்டும். இருளர் மக்களுடனே இருக்க வேண்டும்’ என்றார். அது முடியாமல் போய்விட்டது. அந்த கதாபாத்திரத்தில் மணிகண்டன் பிரமாதமாக நடித்திருந்தார். அவரளவுக்கு என்னால் பண்னியிருக்க முடியுமான்னு தோணலை.
கொரோனாவுக்கு பிறகு தியேட்டர் பணிகளைத் தள்ளி வைத்துவிட்டேன். இப்போது,
அலெக்ஸ்பீரியன்ஸ் ஷோவில் அரசியல் விஷயங்களையும் பேச ஆரம்பித்து விட்டேன். என்ன.. கைது ஆகிவிடாமல் பாத்து பேசணும்!” என்கிறார் அலெக்ஸ் அவருக்கே உரிய புன்னகையுடன்.
நேர்காணலை முழுமையாகக் காண: