இன்றைய பரபரப்பான இணைய உலகில் எத்தனையோ அந்தரங்க வீடியோக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஆபத்தைப் படமாக்கி பாடம் சொல்லித் தந்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். சமீபத்தில் வெளிவந்த சைபர் க்ரைம் த்ரில்லரான ‘லென்ஸ்’ படத்தின் இயக்குநர் இவர். படத்தின் ஹீரோ ப்ளஸ் தயாரிப்பு என சகலமும் இவர்தான். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியதும் இல்லை. அவரை ‘அந்திமழை’க்காக சந்தித்தோம்.
வானகரத்தில் இருக்கிறது அவரது வீடு. உள்ளே நுழைந்ததுமே, “என்ன அப்படி பார்க்கிறீங்க? படத்துல நீங்க பார்த்த அதே வீடுதான். முப்பது நாள் ஷூட்டிங்ல இருபது நாள் என் வீட்டுலயே எடுத்துட்டேன். மீதி பத்து நாள்தான் மூணாறு” என உற்சாகமாக வரவேற்றுகிறார். “இந்தப் படத்துக்காக நிறைய கஷ்டங்கள் பட்டுட்டேன். இப்போதான் சந்தோஷமா இருக்கு. எதிர்பார்த்ததைவிட செம ரெஸ்பான்ஸ்” என மகிழ்ந்தவர், சினிமாவுக்குள் வந்ததைப் பற்றிச்சொன்னார்.
“எனக்கு சொந்த ஊர் பாலக்காடு பக்கம் எழுவந்தலானு ஒரு கிராமம். அப்பா ஆவடியில வேலை பார்த்ததால சென்னை வந்தோம். ஸ்கூல் படிச்சது இங்கதான். அப்புறம் காலேஜ்க்கு பாலக்காடு போயிட்டேன். அப்படியே எம்.சி.ஏ. படிச்சேன். காலேஜ் படிக்கும் போதே காதல். நானும் சிந்தும் ஒரே காலேஜ். 1998ல் கல்யாணம் பண்ணினோம். அதுக்குப் பிறகு 2000ல் அமெரிக்காவில் வேலை கிடைச்சு அங்க போயிட்டோம். பையன் பொறந்தான். சொந்த வீடு, கார்னு ஜாலியா செட்டிலானேன். ஆனா, ஒரு பாயிண்ட்க்கு பிறகு இவ்வளவுதானா வாழ்க்கைனு தோணிடுச்சு. அப்போதான் ஏதாவது செய்யணும் முடிவெடுத்தேன். ஸ்கூல் நாடகங்கள்ல ஹீரோ வேஷம் போட்டதால நடிப்பு பக்கம் கவனம் போச்சு.
உடனே, வாஷிங்டன்ல இருந்த ஜே.டி.காபார்ன் தொடங்கிய ஆக்டிங் ஸ்கூல்ல சேர்ந்தேன். அவர்தான் ஆர்ட்டை எப்படி பார்க்கணும் என்னை திருப்பிவிட்டார். அனுபவங்கள் பெறணும்ன்னா நிறைய படிக்கணும்னு சொன்னார்.
அதுக்குப்பிறகுதான் புத்தகங்கள் வாசிக்கவே ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷம் அவரோட இருந்தேன். அடுத்து, என்னால அங்க இருக்க முடியலை. 2006ல் சென்னை திரும்பிட்டேன்” என விறுவிறுப்பாக டைட்டில் கார்டு போடும் போதே ஜெயப்பிரகாஷின் செல்போன் அலறுகிறது. பாராட்டை பெற்றுவிட்டு தொடர்கிறார்.
“லென்ஸ் படத்துல என் நண்பனா நடிச்ச ராஜூதான் இங்க வந்ததும் எனக்கு முதல்ல அறிமுகமானான். நானும், அவனும் போட்டோ கொடுக்க ஆபீஸ் ஆபீஸா ஏறி இறங்கினோம். அதுக்கு பலனா ஷாம் ஹீரோவா நடிச்ச ‘இன்பா’ படத்துல மாப்பிள்ளை கேரக்டர் கிடைச்சது. அடுத்து, ‘முரண்’ படத்துல சேரன் சாருக்கு நண்பன், ‘உருமி’ படத்துல வில்லன், ‘என்னை அறிந்தால்’ படத்துல அஜீத் ஃப்ரண்ட்டுனு சில படங்கள்ல தலைகாட்டினேன். வாய்ப்புகள் பெரிசா அமையலை. சரி நமக்காக நாமே ஏதாவது பண்ணவோம்னுதான் இந்தப் படத்தை எடுத்தேன்.
இந்தப் படத்தோட ஐடியா என் குருநாதர் ஜே.டி.காபார்ன்கிட்ட ஸ்கைப்ல பேசிட்டு இருக்கும் போது கிடைச்சது. ஆன்லைன்ல உங்க முன்னாடி ஒருத்தன் தற்கொலை செஞ்சா உங்களால என்ன பண்ண முடியும்?னு அவர்ட்ட விளையாட்டா கேட்டேன். அது ஒரு ஐடியாவா உருமாறிடுச்சு. ஆனா, அதுக்கான வலுவான காரணம் எதுவும் என் கையில இல்ல. நெட்ல தேடினப்போ அமந்தா டாட் என்கிற பெண்ணின் வீடியோவை பார்த்தேன். அந்த யூ டியூப் வீடியோ என்னை ரொம்ப பாதிச்சது. அதுதான் எனக்கு தூண்டுதல். ஃபேஸ்புக்ல பழகின ஃப்ரண்ட் ஒருத்தனால அந்த பொண்ணோட வீடியோ வெளியாகி ரொம்ப கஷ்டப்பட்டிருக்கு. அங்கிருந்து வேற ஸ்கூலுக்குப் போன பிறகும் அது தொடர, வார்த்தைகளால எழுதிக்காட்டி தற்கொலை பண்ணிடுச்சு. அதை அப்படியே இந்தப் படத்துல காட்டியிருக்கேன். அவ்வளவுதான்.
நான் யார்கிட்டயும் உதவி இயக்குநரா இருந்ததில்லை. அதனால, இதுக்காக ஸ்கிரீன் ப்ளே, டயலாக் ரைட்டிங், ஸ்கிரிப்ட்னு நெட்ல நிறைய படிச்சேன். அப்புறம், திரைப்பட விழாக்கள்ல கலந்துகிட்டது, நடிகனா இருந்ததுனு எல்லாம் நம்பிக்கை தந்துச்சு. என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது தொண்ணூறு சதவீதம் டேபிள்ல நாம் என்ன எழுதுறோம். அப்படிங்கிறதுதான். நிறைய பேர் ஸ்கிரிப்ட்டே இல்லாம ஷூட்டிங் போவாங்க. ஆனா, நான் விளக்கமா என்னப் பண்ணப் போறோம்னு எழுதி வச்சிடுவேன். அதை படிக்கும் போது நம்பிக்கை வந்திடும். கதை மேல இருக்குற நம்பிக்கையிலதான் நானே இயக்கணும் நினைச்சேன். அதனாலதான் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரும் வந்தார். மற்றவர்களும் வந்தாங்க. இந்தப் படத்துக் காக நிறைய வொர்க் பண்ணினேன். இதை எழுதி முடிச்சிட்டு போலீஸ், பெண்கள்னு பலர்கிட்ட படிக்கக் கொடுத்தேன். அப்புறம்தான் ஷூட்டிங்கே போனேன். அந்த ஃபீட்பேக் எல்லாம் படத்துல இருக்கும்” என்கிறார் அழுத்தமாக!
“ஆரம்பத்துல பாதிக்கப்பட்ட மொட்டை மனிதன் கேரக்டரை நான்தான் பண்றதா இருந்துச்சு. ஆனா, நான் நடிச்ச அரவிந்த் கேரக்டருக்கு ஆள் கிடைக்கலை. முதல்ல, நாடகக்குழுவைச் சேர்ந்த ஒரு நண்பர் நடிக்கிறதா இருந்தது. அவர்கிட்ட கேரக்டரைச் சொன்னதும் போன் கூட எடுக்காம ஒதுங்கி ஓடிட்டார். அதனால, நானே நடிக்க வேண்டியதாகிடுச்சு. பிறகு, மொட்டை கேரக்டரை ஆனந்த்சாமி பண்ணினார்” என்கிறார் சிரித்தபடி.
“அடுத்து தயாரிப்பாளர் தேடி அலைஞ்சேன். யாரும் சிக்கலை. அதனால நானே தயாரிக்க முடிவெடுத்தேன். நிலம், கார்னு எல்லாத்தையும் வித்தேன். கிட்டத்தட்ட அறுபது லட்ச ரூபாய் செலவாச்சு. என் மனைவி சிந்துவே தயாரிப்பு எல்லாம் பார்த்துகிட்டாங்க. ஆனாலும், இவ்வளவு பட்ஜெட்ல முடிக்க முடிஞ்சதுன்னா அதுக்கு காரணம் எஸ்.ஆர்.கதிர்தான். என் நண்பர் சித்தார்த் விபின்தான் முதல் பட ஸ்கிரிப்ட்க்கு கதிர் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருப்பார்னு சொன்னார். கதிர்கிட்ட கதையை சொன்னதும், இன்ட்ரஸ்ட்டாகி மூணு மாசத்துல தொடங்கிடுவியா?னு கேட்டார். யெஸ்னு சொன்னேன். ஆனா, பணம் கையில இல்ல. அப்புறம் ரெடி பண்ணினேன். 2015 ஆகஸ்ட்ல முடிச்சு சென்சார் வாங்கிட்டேன்” என்றவரிடம் ஏன் இவ்வளவு தாமதம்? என்றோம். “விநியோகஸ்தர்கள் யாரும் வெளியிட முன்வரலை” என்கிறார் வருத்தமாக!
“ஆனா, கேரளாவுல லால் ஜோஸ்னு ஒரு பெரிய இயக்குநர் கம் விநியோகஸ்தர் போன வருஷம் ஜூன் மாசமே வெளியிட்டார். அங்க செம வரவேற்பு கிடைச்சது. தமிழ்ல படம் எடுத்தாலும் கேரளாவுல இங்கிலீஷ் வெர்ஷன்ல படம் வெளியாச்சு. இங்கிலீஷ் படத்துக்கு நண்பர் சித்தார்த் விபின் இசை அமைச்சிருக்கார். தமிழுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை.
இதுக்கிடையில திரைவிழாக்களுக்கு எடுத்துட்டு போனேன். நிறைய விருதுகள் வாங்கியது. சிறந்த அறிமுக இயக்குநருக்கான 19வது கொல்லாபுடி ஸ்ரீநிவாஸ் விருது, லோனாவலா இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல்ல சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதைக்கான விருதுகள், ஜாக்ரான் திரைப்பட விழாவுல சிறந்த இயக்குநர் விருதுனு அஞ்சு விருதுகள் கிடைச்சது. ஆனா, அதுக்கப்புறமும் யாரும் பார்க்கலை. அப்போதான் வெற்றிமாறன் சாரை சந்திக்கிற வாய்ப்பு அமைஞ்சது. அவர்தான் படம் நல்லாயிருக்கு. வெயிட் பண்ணுங்கனு நம்பிக்கை தந்தார். அப்புறம், மினி ஸ்டூடியோ வினோத் வெளியிட முன்வந்தார். வெற்றிமாறன் சார் நானே பிரசன்ட் பண்றேன்னார். அவர் இல்லைன்னா இது சாத்தியமாகி இருக்காது.
இங்க குறைவான தியேட்டர்கள்லதான் ஓடுது. ஆனா, ஹவுஸ்ஃபுல்னு சொல்றாங்க. எனக்கு அதுபோதும். இப்போ, அடுத்தப் படத்துக்கான திரைக்கதையை நம்பிக்கையோடு செதுக்கிட்டு இருக்கேன். அதுக்கு தயாரிப்பாளர் கிடைக்கணும். இனி, என்னால தயாரிக்க முடியாது” என்கிறார் நிறைவான குரலில்!
ஜூன், 2017.