திரை நேர்காணல்

“இந்த படம் பற்றி தயவு செய்து யாராவது ஒருவர் விளக்க முடியுமா?”

தா.பிரகாஷ்

தமிழில் இலக்கியத்தில் மட்டுமே சாத்தியப்பட்டு வந்த ‘மேஜிக்கல் ரியலிசம்‘ குதிரைவால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் சாத்தியப்பட்டிருக்கிறது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை படத்தின் இயக்குநர்கள் மனோஜ் லயனல் ஜேசன், ஷ்யாம் சுந்தர் மற்றும் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ராஜேஷுடம் அந்திமழைக்காக கேட்டோம். அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல் பின்வருமாறு.

குதிரைவால் படத்திற்கான கதை எப்படி உருவாகியது?

ராஜேஷ்: சின்ன பசங்களுக்கு சொல்வது மாதிரியான கதை இது. சேட்டை செய்யும்

பசங்களை ‘சரியான வால்' என்று சொல்லுவோம் இல்லையா! அப்படி ஒருவனுக்கு வால் முளைத்தால் என்ன ஆகும் என்பதை சொல்ல நினைத்தேன். சின்னச்சின்ன அரசியல் தொடர்பான உரையாடலை நிகழ்த்த கேலிச் சித்திர வடிவம் தேவைப்பட்டது. கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்குள்ளும் ஒரு கேலிச் சித்திரத் தன்மை இருக்கும்.

நான் இடதுசாரி பின்புலத்திலிருந்து வந்தவன் என்பதால், கேலிச் சித்திரம் என்ற வடிவத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் சொல்லாமல், சமூகத்தின் கூட்டு மன உணர்வுக்கு (Collective consiciousness) வெளியே சென்று கதையைச் சொல்லலாம் என முடிவெடுத்தேன்.

தமிழ் இலக்கியத்தின் வெவ்வேறு இயக்கங்களுடனும் இந்த படத்தின் கதை தொடர்புடையது. உலக அளவில் நடந்த விவாதங்களை தமிழ் இலக்கியம் உள்வாங்கியிருக்கிறது. அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவத்துவம் போன்றவை எல்லாம் இங்கு எப்படி உள்வாங்கப்பட்டு வளர்ந்திருக்கிறது என்பதை கதை உருவாக்கத்திற்காக விவாதித்தோம்.

இலக்கியத்தில் எப்பொழுதோ நடந்த கோட்பாட்டு விவாதத்தை, தமிழ்  சினிமாவில் இப்பொழுதாவது பேசுவோம் என முடிவெடுத்தேன். படக்குழுவிடமும் இந்த எண்ண ஓட்டம் இருந்ததால், குதிரைவால் சாத்தியமானது.

மனோஜ் லயனல் ஜேசன்: நான் வேறு ஒரு படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் தான் ராஜேஷ் எங்கள் குழுவுடன் அறிமுகமானார். அவரின் தீவிரமான வாசிப்புப் பழக்கம், எங்களிடமும் தொற்றிக் கொண்டது. கதைகளை எப்படி திரைக்கதையாக மாற்றுவது என்பதை அடிக்கடி விவாதிப்போம். அப்படியான ஒரு சமயத்தில் தான் குதிரைவால் கதையை ராஜேஷ்

சொன்னார். அந்த கதையை ஒரு கமர்சியல் திரைப்படமாக எடுக்க முடியும் என நம்பினோம். கனவு, வால் முளைத்த மனிதன், வால் இல்லாத குதிரை என்பது கதைக்கு ஒரு சுவாரஸ்யத்தைக் கொடுக்கும் என்பதால் அந்த நம்பிக்கை உண்டாகியது.

இப்படி ஒரு கதையைக் கேட்டதும் பா.ரஞ்சித் என்ன சொன்னார்?

ராஜேஷ்: படத்தின் கதையை ஒரு ஆடியோ ட்ரைலர் மாதிரி உருவாக்கியிருந்தோம். அதை ராகவன் என்ற நண்பரின் மூலம் பா.ரஞ்சித் சாரின் இணை இயக்குநர் ஜென்னியிடம் கொடுத்தோம். ஒருநாள் அவரிடம் முழுக்கதையும் சொன்னோம். ரஞ்சித்தும் அந்த ஆடியோவை கேட்டிருக்கிறார். கபாலி, காலா படத்தை அவர் இயக்கிக் கொண்டிருந்த நேரம் அது. திடீரென்று ஒரு நாள் அழைத்தார். கதையைச் சொன்னோம். நவீன இலக்கியத்தை உள்வாங்கக் கூடியவர் என்பதால், படத்தின் கதையைப் புரிந்து கொண்டார். அவர் ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் சொன்னார், ‘படத்தில் நாம் பேசுகிற அரசியலுக்கு எதிரா எந்த விஷயங்களும் இருக்கக் கூடாது,' என்றார்.

அதேபோல், இந்த படத்தை இயக்குவதற்கு இணை தயாரிப்பாளர்கள் யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். அவரும் நிறையத் தயாரிப்பாளர்களிடம் எங்களை அனுப்பி வைத்தார். இந்த படத்தை எடுப்பதற்கு நிறைய ஆர்வம் காட்டினார்.

மனோஜ் லயனல் ஜேசன்: ரஞ்சித் கதை கேட்ட பிறகும் ஆறு மாதங்கள் ஆனது. அந்த சமயத்தில் என்னுடைய தம்பியின் நண்பர் விக்னேஷ் சுந்தரேசன் என்பவரைச் சந்தித்தேன். அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும், சிங்கப்பூரை சேர்ந்த தொழில்முனைவோர். அவரிடம் படத்தைத் தயாரிக்கிறீர்களா என்று கேட்டோம். அவரும் ஒத்துக் கொண்டார். அப்படித்தான் யாழி ஃபிலிம்ஸ் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் எழுதப்பட்ட கதைக்கும், இப்போது திரையில் பார்க்கும் கதைக்கும் இடையில் ஏதேனும் மாற்றங்கள் நடந்ததா?

ஷ்யாம் சுந்தர்: படப்பிடிப்புக்குச் சென்ற சமயத்தில் ஸ்கிரிப்டில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. படத்தொகுப்பு சமயத்தில் தான் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தது. படத்தின் கதை ‘நான் & லீனியர்' தான் என்றாலும், அதை இன்னும் ‘நான்&லீனியர்' கதையாக மாற்றினோம். அப்படித்தான் குதிரைவால் திரைப்படத்தின் இறுதி வடிவம் கிடைத்தது.

எம்.ஜி.ஆரை ஒரு குறியீடாகக் காண்பிக்கக் காரணம் என்ன?

ராஜேஷ்: படம் முழுவதுமே குறியீடுகளால் ஆனது. அப்படி ஒரு குறியீடாக வருபவர் தான் எம்.ஜி.ஆர். அவர் ஏன் துருக்கி தொப்பி அணிந்தார்? ஏன் கருப்பு கண்ணாடி போட்டார்? என்பதெல்லாம் இங்கு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. கருணாநிதி மஞ்சள் துண்டுக்கு ஏன் மாறினார்? வைகோ ஏன் கருப்புத் துண்டிலிருந்து பச்சை துண்டுக்கு மாறி, பிறகு ஏன் கருப்புத் துண்டுக்கு மாறினார் என்பதெல்லாம் பிம்ப அரசியலோடு தொடர்புடையது.

மக்களின் உரையாடல் என்பதே ஒரு குறியீட்டுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் ஒரு குறியீட்டுடன் தான் மக்களிடம் செல்கின்றனர். இதையெல்லாம் விவாதத்துக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று எண்ணினேன். அதற்கு சில மேலைத்தேய தத்துவ மரபுகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நான்கைந்து அடுக்குகளாக முன்வைக்கப்பட்டுள்ளார். இதற்கு எம்.எஸ்.எஸ் பாண்டியன் எழுதிய பிம்பச்சிறை புத்தகத்தை உரையாடலுக்கு எடுத்துக் கொண்டேன்.

நடிகர்களையும், படக்குழுவையும் பற்றி?

மனோஜ் லயனல் ஜேசன்: இணை இயக்குநராக பணியாற்றிய சதீஷ் ராஜா படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். நான், ஷியாம் சுந்தர், ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார், எடிட்டர் கிரிதரன் எல்லோரும் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து நண்பர்கள் என்பதால், குழுவாக சேர்ந்து செயல்படுவதில் ரொம்பவே இணக்கம் இருந்தது.

ஷ்யாம் சுந்தர்: கலையரசன் மெட்ராஸ் படத்தில் நடித்து முடித்த சமயத்தில் நாங்கள் ஒரு படம் இயக்குவதற்கான வேலையில் இருந்தோம். அந்த படத்தின் ஆடிஷனுக்கு கலையரசன் வந்திருந்தார். ஆனால் அந்தப் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது. பிறகு அவருடன் தொடர்பில் இல்லை. ரஞ்சித் சாரிடம் கதையை சொல்லும் போது, யாரை இந்த படத்தில் நடிக்க வைப்பது என யோசித்தபோது தான் கலையரசன் யோசனை வந்தது.

ராஜேஷ்: கலையரசனிடம் கதை சொன்னோம். கொஞ்சம் கூட இடைவெளி எடுத்துக் கொள்ளாமல் ஆர்வமாகக் கதையைக் கேட்டார். கதையில் நாயகனுக்கு அந்தளவிற்கு ஸ்கோப் இருந்தது.

(குறுக்கிடுகிறார் மனோஜ்)

மனோஜ் லயனல் ஜேசன்: சரவணன் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சவால் நிறைந்தது. ஆனாலும்

சிறப்பாக நடித்தார் கலையரசன். பெரிய நடிகர்களுடன் சேர்ந்து எப்படி பணியாற்ற முடியும் என பயந்து கொண்டு இருந்தோம். ஆனால் கலையரசன் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நடித்தார்.

படப்பிடிப்பிற்கான இடத்தை எப்படித் தேர்வு செய்தீர்கள்? எத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடந்தது?

ராஜேஷ்: படத்தில் வரும் மலைப்பிரதேசம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை. நான் பிறந்து வளர்ந்த அங்குதான். என்னுடைய பள்ளிப் பருவத்தின் நினைவுகளைப் படத்தில் கொண்டுவர முயன்றுள்ளேன். அப்போது பார்த்த நிலப்பரப்புகள் எல்லாம் இப்போது மாறிவிட்டது.

மனோஜ் லயனல் ஜேசன்: கல்வராயன் மலை போன்ற லொக்கேஷனை நான் பார்த்ததேயில்லை. அந்த நிலப்பகுதியை அப்படியே படம்பிடித்தார் ஒளிப்பதிவாளர்.

படத்தின் வசனங்கள் பற்றி ?

ராஜேஷ்: தன்னுடைய படங்களில் வசனம் எழுதுவதை மணிரத்னம் முக்கியமானதாகப் பார்ப்பார். அவருடைய படங்களில் நாயகன் காதலை வித்தியாசமாக

சொல்வார். ஒரு விஷயத்தை வேறு மாதிரி எப்படி சொல்லலாம் என்பதற்கான ஓர் உதாரணமாக அவருடைய வசனங்கள் உள்ளன.

தமிழ் பைபிள், நவீன கவிதைகள் இந்த படத்திற்கு வசனங்கள் எழுதுவதற்கு உதவியாக இருந்தது. வசனங்களில் நிறையக் கவிஞர்களின் வரிகளை மிகைப்படுத்தியோ அல்லது குறை மதிப்பீட்டுடனோ பயன்படுத்தி இருக்கிறேன்.

குதிரைவால் மேஜிக்கல் ரியலிசம் படம் என்பதால் போஸ்ட் புரொடக்‌ஷன் எப்படி இருந்தது?

மனோஜ் லயனல் ஜேசன்: படத்தொகுப்பு மட்டும் கிட்டதட்ட ஒருவருடம் நடந்தது.

(குறுக்கிடுகிறார் ஷ்யாம் சுந்தர்)

ஷ்யாம் சுந்தர்: படம் இரண்டு எடிட்டிங் லேபிற்கு சென்று வந்தது. அவர்கள் எடிட் செய்யவில்லை. பிறகு நாங்களே எடிட் செய்யலாம் என முடிவெடுத்தோம். அதற்கே ஆறேழு மாதங்கள் ஆகிவிட்டது.

(குறுக்கிடுகிறார் மனோஜ்)

மனோஜ் லயனல் ஜேசன்: படத்தை பெரும்பாலும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் யாரும் பார்ப்பதில்லை என்ற எண்ணம் எங்களுக்குள் இருந்தது. அதனால் படத்தின் அளவைக் குறைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் படத்தைச் செதுக்கினோம். மொத்த படக்குழுவும் எடிட்டிங்கில் உட்காருவார்கள். படம் பார்க்கும் ஒவ்வொருவரிடம் கருத்துக் கேட்டு, அதற்கு ஏற்றார் போல் சில விஷயங்களையும் மாற்றியிருக்கிறோம்.

நிறைய திரைப்பட விழாக்களில் குதிரைவால் திரையிடப்பட்டிருக்கிறது? அங்கு கிடைத்த எதிர்வினைகள்?

ஷ்யாம் சுந்தர்: பெர்லின் கிரிட்டிக் வீக்ஸில் தான் முதன்முதலில் குதிரைவால் திரையிடப்பட்டது. மும்பை சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, இரண்டு இடத்திலும் தியேட்டரில் படம் திரையிடப்படவில்லை. ஆன்லைனில் தான் திரையிடப்பட்டது.

மனோஜ் லயனல் ஜேசன்: பெர்லின் கிரிட்டிக் வீக்ஸில் குதிரைவால் தேர்வானதும் மிகப் பெரிய விஷயம். படம் பற்றி நிறைய விமர்சனங்கள் எழுதியிருந்தார்கள்.

ஷ்யாம் சுந்தர்: பிரேசிலில் ஒரு விழாவில் திரையிடப்பட்டது. அங்கு எழுதப்பட்ட விமர்சன தலைப்பு ஒன்றில், ‘இந்த படம் பற்றி தயவு செய்து யாராவது ஒருவர் விளக்க முடியுமா?‘ என எழுதியிருந்தார்கள் (சிரிக்கிறார்). அவர்கள் படத்தை வேறு எதனுடனோ தொடர்புப் படுத்தி எழுதியிருந்தார்கள். எனக்கு இன்று வரை அந்த விமர்சனம் புரியவேயில்லை. அவர்கள் புரிந்து கொண்ட விதத்திலிருந்து படம் பற்றிய விமர்சனத்தை எழுதியிருக்கிறார்கள்.

ராஜேஷ்: பிரேசில் லத்தின் அமெரிக்க நாடு என்பதால் படம் அவர்களுக்குப் புரிந்திருக்கும். குதிரைவால் லத்தின் அமெரிக்காவுடன் தொடர்புடையது.

சிக்மண்ட் பிராய்டின் புகைப்படங்கள் அங்குள்ள பார்கள் மற்றும் சில பொது இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.

மனோஜ் லயனல் ஜேசன்: கேரளாவில் நடந்த  சர்வதேச திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது. முதல் முறையாக எங்களின் படம் அப்போது தான் தியேட்டரில் திரையிடப்பட்டது. அங்கு கிடைத்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் படத்தை திரையரங்கில் வெளியிடலாம் என முடிவெடுத்தோம்.

படம் பார்த்தவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்?

மனோஜ் லயனல் ஜேசன்: சமூகவலைத்தளத்தில் நடக்கும் விவாதங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனித்து வருகிறோம். படம் நல்லாருக்குனு  சொல்றவங்களும் இருக்கிறார்கள். திட்டி எழுதறவங்களும் இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி படம் ஒரு உரையாடலை நிகழ்த்தியிருக்கிறது.

ராஜேஷ்: குதிரைவால் நல்ல வசூலைப் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் யாருக்கும் கொடுக்கவில்லை. ஆனால், இதுவரை வந்த சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட  கதைசொல்லல் முறையைக் கொடுப்பது என்பதில் உறுதியாக இருந்தோம்.

சினிமா குறித்து ஏற்கெனவே மக்களுக்கு இருக்கும் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த படத்தையும் பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்ற கோபத்தின் காரணமாகவே சில கடுமையான எதிர்வினையாற்றியுள்ளனர். இவ்வளவு திட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை.

சினிமாவில் எதாவது புதியதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம்தான் அடிப்படை. நேர்மறையான விமர்சனத்தை விட எதிர்மறையான விமர்சனத்தை அதிகம் கவனித்து வருகிறேன்.

ஏப்ரல், 2022