விவேக் பிரசன்னா
விவேக் பிரசன்னா 
திரை நேர்காணல்

"ஓ... நீங்கதான் வில்லன் கேரக்டர் பண்றீங்களா?'

தா.பிரகாஷ்

நடிகனாக அல்லாமல் கதாபாத்திரமாக மனதில் நிற்பவர். சேலத்துக்காரராக இருந்தாலும் எல்லா வட்டார வழக்கும் இவர் நாக்கில் நடனம் ஆடும். படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் விவேக் பிரசன்னாவிடம் பேசினோம்.

‘சொந்த ஊர் சேலம் பக்கம், சின்னனூர். படித்ததெல்லாம் அரசுப் பள்ளி, தமிழ் வழியில். அப்பா வழக்கறிஞர், அம்மா நர்ஸ். இரண்டு சகோதரர்கள். நான் கடைக்குட்டி.

நடிகர் ரகுவரன், இயக்குநர் பாலுமகேந்திரா ஆகிய இருவரும்தான் நான் சினிமாவுக்கு வரக் காரணம். அவர்களை நேரில் பார்க்க நினைத்தேன். ரகுவரனை கடைசிவரை பார்க்க முடியவில்லை. அவர் இறந்தபோது, அவரின் உடலைப் பார்க்க மனமில்லாமல் வீட்டிலேயே அழுது கொண்டிருந்தேன். ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பதற்கு முன்னர் ரகுவரனை மனதில் நினைத்துக் கொள்வேன்.

நான் இதழியல் படிக்கத்தான் சென்னை வந்தேன்.  கல்லூரி இரண்டாம் ஆண்டில் சொந்தமாக காமிரா வாங்கிவிட்டேன். புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினேன். ஒளிப்பதிவாளர் கனவு, கல்லூரி முடிக்கையில் மரமாக வளர்ந்து நின்றது.

பின்னர், ராஜீவ் மேனனின் 'மைண்ட் ஸ்கிரீன் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு ஆறு மாதப் படிப்பு முடித்தேன்.

முதலில் பாலுமகேந்திரா சாரிடம் சேரச் சென்றேன். நடக்கவில்லை. பின்னர் ஒருமுறை, அவருடன் போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டேன். அடுத்து, திரு, கே.வி.ஆனந்த், பி.சி. ஸ்ரீராம் இப்படி பலரிடமும் வாய்ப்புக்காக அலைந்தேன்.

அந்த சமயத்தில், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படம் வெளியாகியிருந்தது. அதன் ஒளிப்பதிவாளர் சித்தார்த் ராமசாமி சார்.

அவருக்கு பேஸ்புக் மூலம் மேசேஜ் அனுப்பினேன். உடனே பதில் வந்தது. போன் நம்பரைக் அனுப்பி, ஒரு ஸ்டுடியோவுக்கு வரச் சொன்னார். நேரில் சென்று எடுத்த புகைப்படங்களைக் காட்டினேன். தற்காலிகமாக சேர்ந்துகொள்ள சொன்னார். நான், விஜய் கார்த்தி கண்ணன் (ஜெயிலர் ஒளிப்பதிவாளர்), மாதேஷ் மாணிக்கம் (டாணாக்காரன் ஒளிப்பதிவாளர்) ஆகிய மூவரும் அவரிடம் பணியாற்றினோம்.

பாக்யராஜ், அரவாண், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உட்பட்ட படங்களில் வேலை பார்த்துவிட்டு, விளம்பரப் படங்கள் இயக்க வெளியே வந்துவிட்டேன்.

உதவி ஒளிப்பதிவாளர் வாழ்க்கை மூன்று வருடங்களை விழுங்கியிருந்தது. அப்போது, விஜய் கார்த்தி கண்ணன் ஒரு குறும்படம் எடுக்க இருந்தார். அவருக்கு உதவ நானும் சில நண்பர்களும் சென்றோம். அந்த குறும்படத்தில், ஒரு சின்ன காட்சியில் நடித்திருந்தேன். வசனம் கூட கிடையாது. அந்தக் குறும்படத்தைப் பார்த்த இயக்குநர் ரத்னகுமார், அவர் எழுதி வைத்திருந்த  குறும்படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.

அந்த குறும்படம் (மது) வெளிவந்தது. என்னுடைய கதாபாத்திரம் பெரிதும் பாராட்டப்பட்டதால், நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன. ஆர்வம் நடிப்புப் பக்கம் திரும்பியது.

இடையே, ஒரு சின்ன பட்ஜெட் படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானேன். அது நடக்கவில்லை. அப்போது, மது குறும்படத்தை பார்த்த விஜய்சேதுபதி, ரத்னகுமாரிடம் என் கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். விஜய் சேதுபதியின் அந்த பாராட்டால், எனக்குள் ஊடாடிக் கொண்டிருந்த நடிப்பா, ஒளிப்பதிவா என்ற குழப்பம் முடிவுக்கு வந்தது. நடிப்பை முழுமையாகத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.

மது குறும்படம் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிமுகமானார். ஆனாலும், ‘இறைவி' படத்துக்கான ஆடிசன் போது ஐந்நூறு பேரில் நானும் ஒருவனாக கலந்துகொண்டு தேர்வானேன்.

ஆனால், அதற்கு முன்னரே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாநகரம்' படத்தில் நடித்தேன். அதன் பிறகு ‘ஜில் ஜங் ஜக்'. எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய ‘சேதுபதி'படத்தில் நடித்தேன்.

சேதுபதி படத்தில் நடிப்பதற்கு முன்னர் காமெடி ஒன்று நடந்தது. அந்த படத்துக் கான அறிவிப்பு வந்ததும், அடிக்கடி இயக்குநர் அருண்குமார் அலுவலகத்து சென்று போட்டோ கொடுத்துவிட்டு வருவேன்.

ஒருநாள்  அருண்குமாரிடமிருந்து அழைப்பு. ‘போட்டோவை பார்த்துட்டுத்தான் கூப்பிடுகிறார்' என்று போனேன். நேரில்

 சென்றால், போட்டோ கொடுத்திருந்த அலுவலகம் மூடியிருந்தது. அங்கிருந்த வாட்ச் மேன் என்னவென்று விசாரித்தார். விவரத்தைச் சொன்னேன். 'சேதுபதி பட ஆபீஸ் மேலே பா' என்றார்.

அப்போதுதான் தெரிந்தது, நான் மூன்று மாதமாக போட்டோ கொடுத்த அலுவலகம், அருண்குமார் என்ற பெயரிலிருந்த வேறொருவரின் அலுவலகம் என்று.

சேதுபதி படத்துக்குப் பிறகு கோடம்பாக்கத்தில் பலரும் என்னைப் பாராட்டினார்கள். நிறைய அழைப்புகள் வரத் தொடங்கின. அப்படி வந்தது விக்ரம் வேதா. அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா மேடம்,  சூரரைப் போற்று படத்துக்கான கதை எழுத தொடங்கியபோது, மேயாத மான் பார்த்திருக்கிறார். அப்போதே என்னை செபஸ்டின் கதாபாத்திரத்துக்கு டிக்கடித்துள்ளார். அந்த படத்துக்கு முதலில் கம்மிட்டான நடிகர் நான்தான்.

சூரரைப் போற்றுப் படத்துக்காக உடல் எடையைக் குறைத்து, முடியை ஒட்டவெட்டியதும், கதாபாத்திரத்துக்கான மிடுக்கு தானாக வந்தது. அந்த படத்தில், ‘ஜெயிச்சுட்டோம் மாறா' என்ற ஒரு வசனம், என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

சேலத்துக்கென்று தனித்த பேச்சு வழக்கு எதுவும் இல்லை. அது பெரிய ப்ளஸ். எனக்கு கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில் போன்ற வட்டார வழக்குகளில் பேசி நடிக்க ஆசை.

நாகர்கோவில் பேச்சு வழக்கிற்காகவே வதந்தியில் இணைந்தேன். அந்த ஊர்காரர் மாதிரியே பேசுவதற்கு இருபதுநாள் பயிற்சி எடுத்தேன். ஏதாவது ஒரு வசனம் பேச வரவில்லை என்றால், எழுத்தாளர் மீரான் மைதினை பேசி அனுப்பச் சொல்வேன். அவர் பேசுவதுபோல நானும் பேசிப் பார்ப்பேன். தொடர் வெளியானதும் அதற்கான பாராட்டு கிடைத்தது.

ரஜினி சாரைப் பார்த்து வளர்ந்தவன். ஒரு ஃப்ரேமிலாவது அவருடன் இருக்க ஆசைப்பட்டேன். அது ‘பேட்டை' படத்தில் நிறைவேறியது. அவர் மீதான பிரமிப்பு நீங்குவதற்குள், மீண்டும் ரஜினி சாருடன் லால் சலாமில் நடித்துள்ளேன்.

படத்தில் எனக்கு ரஜினிசாருடனான காட்சிகள் குறைவு. இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில், ‘நீங்க என்ன பண்றீங்க... ஓ.... நீங்கதான் வில்லன் கேரக்டர் பண்றீங்களா' என ரஜினி சார் கலாய்த்துக் கொண்டிருப்பார். படம் வெளிவந்த பிறகு நிச்சயம் என்னுடைய கதாபாத்திரம் பேசப்படும்.

ஐந்து நிமிட ரோல் என்றாலும், அது நம் தலையெழுத்தை மாற்றிவிடும் என்பதால், இதுவரை கதை கேட்டு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்ததில்லை. தேதி இல்லாத காரணத்தால் சில படங்களில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது.

பெரிய இயக்குநர்களுக்கு என் பெயர் தெரியவில்லை என்றாலும், நான் நடித்த கதாபாத்திரங்களின் பெயரை நினைவில் வைத்துள்ளனர்,' என திருப்தியுடன் முடிக்கிறார் விவேக் பிரசன்னா.