திரை நேர்காணல்

ஹீரோ ஆக வேண்டும் என்று சென்னை வந்தேன்!

ப்ரியன்

ழுக்க முழுக்க சாதி எதிர்ப்பு மனநிலை கொண்டவன். அந்த எண்ணத்துல எடுக்கப்பட்ட படம்தான் என்னோட ‘மத யானைக் கூட்டம்'. ஆனா அதை சாதியைத் தூக்கிப்பிடிக்கிற படமா கொஞ்சப் பேர் புரிஞ்சிக்கிட்டாங்க. அதுல மிகப்பெரிய வருத்தம் எனக்கு. ஆனா இந்த ‘ராவணக் கோட்டம்' படத்துல சாதிங்குற ஒரு வார்த்தை கூட கிடையாது' எடிட்டிங் பணிகளில் மும்முரமாக இருந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் ‘அந்திமழை‘க்காக நிதானமாக பேசத் துவங்குகிறார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் இவர் இயக்கிய முதல் படமான ‘மதயானைக் கூட்டம்' வெளியாகி 9 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், அவரது இரண்டாவது படைப்பு ‘ராவணக்கோட்டம்' மே மாத ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. கோடம்பாக்கத்தின் பாதி நட்சத்திரங்களை துபாய்க்கு தூக்கிக்கொண்டுபோய் ஆடியோ ரிலீஸ் நடத்திவிட்டு திரும்பியிருக்கிறது படக்குழு.

‘என்னோட சொந்த ஊர் பரமக்குடி. ஊர்ப்பாசத்தை மீறி, கமல் சாரோட பரம ரசிகன். அவரோட ‘தேவர் மகன்‘ படம்தான் என்னை சினிமாவுக்கு இழுத்துச்சி. வெட்கத்தை விட்டு சொல்லணும்னா,அவர் மாதிரியே ஹீரோவாகணும்னுதான் சென்னைக்கே வந்தேன். ஆனா மக்களோட அதிர்ஷ்டம், நான் சினிமா கத்துக் கிட்ட பாலுமகேந்திரா சார் மூலமா அந்த எண்ணம் அடியோட மாறி, நாம இயக்குனராதான் ஆகணும்னு மனசை மாத்திக்கிட்டேன்.

அதையும் மீறி நண்பர் வெற்றிமாறனுக்காக ‘பொல்லாதவன்‘லயும், நண்பர் முத்தையாவுக்காக ‘கொடி வீரன்'லயும் நடிச்சேன். அப்புறமும் நடிக்கிறதுக்கு வரிசையா வாய்ப்புகள் வந்தாலும், அத்தனையும் ஒரே டைப் கேரக்டர்களா இருந்ததால, அதை முழுமையா தவிர்த்தா தான் டைரக்‌ஷன்ல கவனம் செலுத்த முடியும்னு தோணிச்சி.

ரெண்டாவது படம் ரிலீஸாகுறதுக்குள்ள 10 வருஷம் ஆயிடுச்சேன்னு எல்லாரும் கேக்குறாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் ‘மதயானைக் கூட்டம்' படத்தை ரொம்ப சின்சியரா, சாதி உணர்வுகளை தட்டிக்கேக்குற படமாத்தான் கொண்டு வந்தேன். பெரும்பாலானவங்களுக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. தமிழ் சினிமாவுல எனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தையும் கொடுத்துச்சி. ஆனா ஒரு சின்ன வட்டாரம் அது ஜாதிப் பெருமையைப் பேசுற படம்னு கொச்சைப்படுத்தினாங்க. அதே ஆளுங்க அந்தப்படம் தியேட்டர்ல ரொம்ப சுமாரா வசூல் பண்ணுனதாவும் பிரச்சாரம் பண்ணுனாங்க.

அடுத்து அட்டக்கத்தி தினேஷை வச்சி ‘தேரும் போரும்‘னு ஒரு படம் ஆரம்பிச்சேன். சில நடைமுறைச் சிக்கல்களால படம் நிற்கவே மறுபடியும் வெற்றிமாறன் கூட ‘ஆடுகளம்‘ வேலை செய்ய ஆரம்பிச்சி அதுல 3 வருஷம் ஓடிடுச்சி. வெற்றிக்கும் எனக்கும் பாலுமகேந்திரா சார்கிட்ட வேலை பார்த்த நாட்கள்ல இருந்தே நல்ல புரிதல் உண்டு. மனசுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் அவர். ‘ஆடுகளம்‘ படத்துக்கு நான் செஞ்ச பங்களிப்பை அவர் அளவுக்கு வேற யாரும் இவ்வளவு வெளிப்படையா பேசியிருப்பாங்களான்னு தெரியாது.

அடுத்து ஆரம்பிச்சதுதான் இந்த ‘ராவணக்கோட்டம்‘. சுருக்கமா சொல்லணும்னா கருவேல மர அரசியல் பேசுற படம் இது. 1957ல் ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே உள்ள தூவல் என்கிற கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை, இன்றைய அரசியல், கார்ப்பரேட்காரர்களுடன் தொடர்புபடுத்தி கதை பண்ணியிருக்கேன்.. வெயிலும் கடுமையான வறட்சியும் வாட்டியெடுக்குற ஒரு நிலப்பரப்பில் கருவேல மரங்கள் உருவாக்கிய புழுக்கத்தைப் பேசுற படம் இது.

இந்த கிராமத்து கதைக்குள்ள சாந்தனுவைக் கொண்டு வந்தப்ப என்னோட உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் இவர் செட் ஆவாராங்குற சந்தேகம் இருந்தது. ஆனா ஒன்றிரண்டு சந்திப்புகள்லயே அவர் இந்தக் கதைக்காக தன்னை அர்ப்பணிக்க தயாரா இருக்கார்ங்குறதை புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு அது மட்டுமே போதும். அல்ட்ரா மாடர்ன் மாநகர பின்னணியில வளர்ந்த அவரை ராமநாதபுரம் கிராமங்களுக்கு அழைச்சிட்டுப்போய் அந்த மக்களோட பழகவிட்டேன். அந்த ஊர் பசங்களோட நெருக்கமா பழகி, உற்சாகமா கபடி கத்துக்கிட்டார். ரொம்ப மெனக்கெட்டு தன்னோட தோற்றத்தை மாத்தி ஒரு பக்கா பட்டிக்காட்டானாவே மாறினார். சர்வ நிச்சயமா இதுவரை பார்க்காத சாந்தனுவை இந்த ராவணக்கோட்டத்துல பாப்பீங்க.

அதே மாதிரி, இந்தப்படத்துக்கு கதாநாயகி தேடுறப்ப எத்தனை பேரை பரிசீலனை பண்ணினோம் என்கிற எண்ணிக்கையைக் கூட சொல்ல முடியாது. கடைசியிலதான் கயல் ஆனந்தி வந்து சேர்ந்தார். அப்பவும் ஒரு சிக்கல். ஷூட்டிங் நடக்குதா, அது எந்த ஊர்ல நடக்குதுன்னு ஒருமுறை கூட எட்டிப்பார்க்காத தயாரிப்பாளர் கண்ணன் ரவி சாருக்கு ஆனந்தியை செலக்ட் பண்ணினது புடிக்கலை. கிராமத்துப் பொண்ணா அவங்க செட் ஆகவே மாட்டாங்கன்னு அடம்பிடிச்சார். ஆனா படத்தோட சில காட்சிகளைப் பார்த்தவர் ‘அடடா தவறா கணிச்சுட்டேனே‘ன்னு வருத்தப்பட்டார்.

படம் தொடங்கி 4 வருடத்துக்கு மேல ஆனதுனால, தயாரிப்பாளருக்கும் எனக்கும் இடையில பயங்கர சண்டை, சொன்ன பட்ஜெட்டை விட பல மடங்கு செலவு இழுத்து வச்சுட்டேன்னு தொடங்கி ஏகப்பட்ட செய்திகள். பட்ஜெட் அதிகமானதென்னவோ உண்மைதான். ஆனா அதுக்கான காரணங்கள் வேற. முதல் காரணம் கொரோனா 2 சீஸன்களாலயும் மிக அதிகமா பாதிக்கப்பட்டவங்கன்னா அது நாங்கதான்.

அடுத்து படப்பிடிப்பு நடந்த இடங்கள்ல நாங்க சந்திச்ச உள்ளூர் பிரச்னைகள் சிலதை வெளிப்படையா பகிர்ந்துக்க முடியாது. இன்னொரு பக்கம் ராமநாதபுரம் ஏரியா சீதோஷ்ண நிலவரம். வெயில் தீயாய் காயுற பூமியைக் காட்டவேண்டி ஷூட்டிங் ஸ்பாட்ல போய் இறங்குனா எங்க போதாத காலம் மழை கொட்டோகொட்டுன்னு கொட்டுது.

இந்த மாதிரியான காரணங்களாலதான் படம் ரொம்ப தாமதமாயிடுச்சி. இப்ப படம் தயாராகி, தயாரிப்பாளர் பார்த்து, தடபுடலா துபாய்ல ஆடியோ ரிலீஸ் ஃபங்சன் வைக்கிற அளவுக்கு உற்சாகமாயிட்டார். தாமதமா வந்தாலும் தரமா வந்து சேர்ந்திருக்கோம்கற நம்பிக்கை மனசு முழுக்க இருக்கு‘ உற்சாகமாக முடிக்கிறார் விக்ரம் சுகுமாரன்.

ஏப்ரல், 2023