விமர்சனம்

அன்பே டயானா - விமர்சனம்… ஜமா இயக்குநரின் மஜா

மிஸ்டர் முள்

இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வசூல் ரீதியாக தோற்றாலும் ரசனையான ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட படம் ‘ஜமா’

அந்த ஜமாவுக்கு ஒரு கமா வைத்துவிட்டு ஒரு ஜாதி மணம் வீசும் காதல் கதையுடன் கதையின் நாயகனாகவும் வந்து சேர்ந்திருக்கிறார் பாரி இளவழகன்.

பெரம்பூர் ஏரியாவையும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக் கொண்டு நகர்கிறது கதை.

சிருமாமில்லா சீதா கிருஷ்ணா என்கிற சி.எஸ்.கே. ரோஜாவின் மூத்த பிள்ளை. ரோஜா மிகுந்த ஜாதி அபிமானம் கொண்ட தெலுங்கம்மா. தன் பிள்ளைகளும் உறவினர்களும் சொந்த ஜாதியில் தான் மணம் புரிய வேண்டும் என்று அடம்பிடிப்பவர். மகன் சி.எஸ்.கே.வோ அதே ஏரியாவைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியக் கண்மணியான ரம்யா என்கிற மேஜிக்கை லாஜிக் இல்லாமல் ஒருதலையாய்க் காதலிக்கிறார்.

இவர்கள் காதல் என்ன ஆச்சு. திருமதி ரோஜாகாரு இந்தக் காதலை ஏற்றுக்கொண்டாரா என்று ஏற்ற இறக்கங்களோடு போகிறது திரைக்கதை.

பாரி இளவழகனும் ரம்யா ரங்கநாதனும் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி. பல வாரிசு நடிகர்களின் சொதப்பலான நடிப்புகளுக்கு மத்தியில் தமிழ் சினிமாவுக்கு சிறப்பானதோர் இளைய நட்சத்திரமாக வந்து சேர்ந்திருக்கிறார் பாரி. கயாடு லோகர் ஒழிக. ரம்யா வாழ்க.

பாரியின் நண்பனாக வந்து வினோத தமிழ் பேசும் ‘பரிதாபங்கள்’ கோபிக்கு அநேக பரிதாபங்கள். க்ளைமேக்ஸில் இவர் இன்னொரு கதாநாயகனாக மாறுவதெல்லாம் என்ன கொடுமை சரவணா இதுவேதான்.

நாயகனின் பெற்றோராக வரும் ரோஜா, சேட்டனின் நடிப்பு அசத்தல். ஆனாலும் இவ்வளவு தெலுங்கு வசனங்கள் தேவையா மிஸ்டர் டைரக்டருகாரு?

கேலிஸ்ட் ஷெல்லியின் ஒளிப்பதிவும், பரத் சங்கரின் இசையும் படத்துக்கு தக்க பக்க பலங்கள்.

நாயகி ரம்யாவின் உடைகள் மனதைக் கொள்ளை அடிக்கின்றன. காஸ்ட்யூமர் பெயரை தனியாகத் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. முகவரி அனுப்பினால் மணக்க மணக்க பூங்கொத்து அனுப்புகிறோம்.

இது முழுக்க முழுக்க மசாலாப்படம்தான் என்றாலும்,… ’நான் கஷ்டப்பட்டு நின்ன காலத்துல எனக்கு ஒரு மாவுக்கடை வச்சித்தந்து உதவுனது நம்ம ஜாதிக்காரங்கதான்’ என்று மம்மிகாரு ரோஜா சொன்னவுடன்,

’அந்தக் கடையில மாவு வாங்குனவங்கள்லாம் எந்த ஜாதிக்காரன்னு உனக்குத் தெரியுமா?’ என்று ரோஜா கடை மாவையே எடுத்து பாரி மசாலா தோசை சுடுகிறபோது நம்மை மறந்து கைதட்டிவிடுவோம்.

மொத்தத்தில் படம் ஜமா டைரக்டரின் மஜா.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram