தயாரிப்பாளர் கிட்ட கதை சொல்றப்ப ‘சார் இது தமிழ் சினிமாவுல யாருமே தொட்டுப்பார்க்காத கதை சார்’னு டைரக்டர் அவர் தலைமேல அடிச்சு சத்தியம் பண்ணியிருப்பார். ஏன்னா கதை நடக்கிறதே தலையில இருக்கிற முடி சம்பந்தமான சமாச்சாரம்தான்.
முடிய வச்சு கதையா ? சஸ்பென்ஸை வளர்க்காம முடிச்சை அவுத்துவிடுங்க பாஸ்.
இந்திய பெண்களின் நீளமான, கருமையான, அடர்த்தியான தலைமுடிக்கு சர்வதேச சந்தையில் மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. இந்தத் தலைமுடி வியாபாரத்தின் பின்னணியில் பல கோடி ரூபாய் புழங்குகிறது.
இந்த வியாபாரத்தில் எதிரெதிர் கேங்காக செயல்படுபவர்கள் ஏ.வெங்கடேஷ், அருள் சங்கர். இதில் ஏ.வெங்கடேஷின் விசுவாசமான டிரைவர் லிவிங்ஸ்டனின் மகன்தான் கதாநாயகன் வெற்றி. ஒருமுறை லிவிங்ஸ்டன் ஏற்றிச் செல்லும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள முடி பார்சல்களை ஒரு கும்பல் கடத்தி அவரையும் கொன்றுவிட வெற்றி வில்லன்களை விரட்டிப் பிடித்து எப்படி பழி வாங்கினார் என்பதுதான் கதை.
முடி சமாச்சாரக் கதை என்பதால் சிக்கல்கள் இல்லாமல் எப்படி ? இயக்குநர் தீரன் அருண்குமார் கதையில் பத்து நிமிடத்துக்கு ஒருமுறை அடுத்தடுத்த முடிச்சுகளைப் போட்டுக்கொண்டேயிருக்கிறார்.
நடுவிலே நாயகி பிரியலயாவுடன் ஒரு மினி காதல் டிராக்கும் இருக்கிறது.
தமிழ் சினிமாவின் பல ஆச்சர்யங்களுல் ஒன்று இந்த கதாநாயகன் வெற்றி சொல்லிக்கொள்ளும்படி ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்காமல் அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து நடித்து வருவது. ஒரு லிமிட்டுக்கு மேல் எந்த எக்ஸ்பிரஷனும் கொடுக்கமாட்டேன் என்று வழக்கமாய் அடம்பிடிப்பது இப்படத்திலும் தொடர்கிறது. அதற்கு கொஞ்சம் ஆறுதலாய் நாயகி பிரியலயா சில கியூட்டான எக்ஸ்பிரஷன்கள் கொடுக்கிறார்.
வில்லன்கள் ஏரியாவும் அவர்களுக்குள் நடக்கும் தொழில் மோதல்களும் பார்த்துப் பார்த்து சலித்த அரதப் பழசு. அக்கூட்டத்தில் புதுமுக வில்லன் அஜித் விக்னேஷ் சற்று கவன் ஈர்க்கிறார்.
சந்தோஷ்குமார் வீராசாமியின் ஒளிப்பதிவு ஓ.கே.ரகம்.
இசை கவாஸ்கர் அவினாஷ். எவ்வளவு யோசித்துப்பார்த்தாலும் படத்தில் ஏதாவது இசைத்தாரா என்பது ஞாபகத்துக்கு வரவே இல்லை.
சத்யராஜை ஹீரோவாக வைத்து ஏற்கனவே ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற சுமாரான படத்தைக் கொடுத்த தீரன் அருண்குமாருக்கு இது இரண்டாவது படம். மணிரத்தின் ’உயிரே’ போல் இப்படத்துக்கு அதே ஸ்டைலில் தமிழில் பெயர் வைத்திருந்தால் கவன ஈர்ப்பாவது கிடைத்திருக்கும்.
பிளாக் கோல்ட்… இடியாப்பச் சிக்கல் கதைகளுக்கு நடுவே ஒரு முடியாப்பச் சிக்கல்.