‘இரவுக்கு ஆயிரம் கண்கள்','கண்ணை நம்பாதே' போன்ற படங்களை இயக்கிய மு.மாறன் – ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பிளாக்மெயில்’ நீண்ட இழுபறிக்குப் பின்னர் வெளியாகியிருக்கிறது. படம் எப்படி வந்துள்ளது என்று பார்ப்போம்.
கோயம்புத்தூரில் கூரியர் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் (மணி) முக்கியமான கூரியர் ஒன்றை திருடு போக விடுகிறார். இதனால், அவரது காதலி தேஜு அஸ்வினியை (ரேகா) ஜி.வி.யின் முதலாளியான வேட்டை முத்துக்குமார் கடத்தி செல்கிறார். இன்னொரு பக்கம், கோவையின் பெரிய தொழிலதிபரான ஸ்ரீகாந்தின் - பிந்துமாதவியின் ஒரே மகள் சுற்றுலா போன இடத்தில் காணாமல் போகிறார். கடத்தி செல்லப்பட்ட ஹீரோயினும், காணாமல் போன சிறுமியும் எப்படி மீட்கப்பட்டார்கள்? இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது படத்தின் மீதிக்கதை.
ஜி.வி. – தேஜு அஸ்வினி காதலோடு படம் தொடங்குகிறது. முதல் பாதி க்ரைம் த்ரில்லர் ஜானரில் ஓரளவு விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ஏகப்பட்ட திடீர் ட்விஸ்டுகள் நம்மை பிளாக்மெயில் செய்கின்றன.
ஒரு சாதாரண இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜி.வி. காதலியை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற தவிப்பிலும், அதற்காக போடும் திட்டங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அவர்.
நாயகியாக நடித்திருக்கும் தேஜு அஸ்வினிக்கு குறைவான காட்சிகள். அதுவும் காதல் காட்சிகள் மட்டுமே. மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரீகாந்த், காத்திரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் கதாபாத்திர உருவாக்கமும் கவனிக்க வைக்கிறது. தனது மனைவி பிளாக் மெயில் செய்யப்படுவது தெரிந்தாலும் அதை முதிர்ச்சியாகக் கையாண்டிருப்பார். லிங்கா, வேட்டை முத்துக்குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஓரளவு கவனிக்கவும் வைக்கின்றனர். ஜி.வியின் நண்பராக நடித்துள்ளார் ரமேஷ் திலக். பெரிய அளவுக்கு அவரின் கதாபாத்திரம் கவனம் ஈர்க்கவில்லை. இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஷாஜி, ஹரி பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். த்ரில்லர் கதைக்கேற்ற பின்னணி இசையை கொடுத்துள்ளார். பாடல்கள் எதுவும் அசைபோட வைக்கவில்லை. ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது.
போதைப் பொருள் கடத்தல், ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டுவது, திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம், பழிவாங்கல் என ஏகப்பட்ட எதிர்மறை விஷயங்கள் கதைக்குள் உள்ளன. எதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. அதேபோல், படத்தில் வரும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் சப்பென்று உள்ளன. ரெடின் கிங்ஸ்லின் டைமிங் காமெடி மட்டும் ஓகே ரகம்.
பிளாக் மெயில் என்ற எதிர்மறை விஷயத்தை கொஞ்சம் புதுசாக சொல்லியிருக்கலாம். கதை, திரைக்கதை, மேக்கிங் இதில் ஏதேனும் ஒன்று ‘சூப்பர்’ டிக் வாங்கும் அளவுக்கு இருந்தால் கூட, இந்த வாரம் வெளியாகும் 8 படங்களில் ‘பிளாக்மெயில்’ கொஞ்சம் முந்தியிருக்கும்!