விமர்சனம்

ப்ளாஸ்ட்…திரை விமர்சனம்…அர்ஜுனுக்கு ரிடையர்மென்ட் கொடுக்கலாமா ?

Staff Writer

வயது 63. 1981ல் முதல் படம் தொடங்கி இந்த 45 ஆண்டுகளில் நடித்திருப்பது 160க்கும் மேற்பட்ட படங்கள். இயக்கி நடித்தது 12 படங்கள். பெரும்பாலும் ஆக்‌ஷன் படங்கள். ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் கதைச் சுருக்கம் இவ்வளவுதான்.

வெரைட்டியான பாத்திரங்கள் நடிப்பவர்களை விட ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு சினிமாவில் ஆயுசு கம்மி. சீக்கிரமே திகட்ட ஆரம்பித்து ரிடையர்மெண்டும் வாங்கிவிடுவார்கள். அர்ஜுனுக்கு இந்த ப்ளாஸ்ட் ரிடையர்மெண்டா அல்லது நல்ல செட்டில்மெண்டா என்று பார்ப்போம்.

அப்பா, அம்மா, சித்தப்பா, மகள் என்று கராத்தே குடும்பம். சமூகநலனில் அக்கறை கொண்ட அர்ஜூன் இளம் வயதிலேயே தன் மகளிடம், ‘நம்ம கண்ணு முன்னால அநியாயம் நடந்தா அது யாருக்கு நடந்தாலும் தட்டிக்கேக்கணும்’ என்று வளர்க்கிறார். அந்தக் குட்டிப்பொண்ணு வளர்ந்து பிரீத்தி முகுந்தனாக துவக்க காட்சிகளில் தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கிறார். மகள் என்னடா இப்படி ரவுடியாக வளர்கிறாரே என்று அம்மா அபிராமி கவலை கொள்ள அர்ஜூன் மகளை தொடர்ந்து சப்போர்ட் செய்கிறார்.

ஒரு முழுநீள ஆக்‌ஷன் கதை இது போதாதே?

இன்னொரு டிராக்கில் மலைப் பிரதேசம் ஒன்றில் இருக்கும் 7000 கோடி மதிப்புள்ள கனிம வளத்தை எடுக்க கார்ப்பரேட் முதலாளி ஜான் கொக்கேன் முயற்சிக்கிறார். அதற்காக 1000 கோடி ரூபாயை அமைச்சர் ஒருவருக்கு அளிப்பதற்காக அர்ஜுன் சிதம்பரத்திடம் அந்த வேலையைக் கொடுக்கிறார். ஆனால், ஒரு விபத்தில் அவர் காயமடைந்து போலீஸில் சிக்குகிறார். அங்கிருந்து தப்பித்து காலில் பட்ட குண்டடிக்காக அடியாள் ஒருவரை மருந்து வாங்க அனுப்புகிறார். அந்த அடியாள் ப்ரித்தி முகுந்தனின் செயினைப் பறிக்க முயற்சிக்க, அங்கு ஆரம்பமாகிறது அதிரிபுதிரி ஆக்‌ஷன்.

படத்தின் முதல் சபாஷ் அறிமுக இயக்குநர் சுபாஷ்.கே.ராஜுவுக்குத்தான். அர்ஜூன் தான் ஹீரோ என்றாலும் நாயகி பிரீத்தி முகுந்தனுக்கு அதிக ஆக்‌ஷன் காட்சிகள் கொடுத்ததோடு அதை ரசிக்கும்படியும் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

இடையில் அவ்வப்போது சில கதாநாயகிகள் சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும் இப்படத்தில் பிரீத்தி முகுந்தன் அல்டிமேட். ஒரு ஃப்ளைட் பிடித்து ஹைதராபாத் போய் விஜயசாந்தியிடம் ஆசி வாங்கிவிட்டு ஆக்‌ஷன் படங்களை மொத்த குத்தகைக்கு எடுக்கலாம்.

அர்ஜூனின் குடும்பம் பாவமானவர்கள் என்று நினைத்து வில்லன் கோஷ்டி உள்ளே நுழைந்து மொத்தக் குடும்பத்திடமும் அடிவாங்கும் இடைவேளைக் காட்சி செம. வழக்கமான அம்மா கதாபாத்திரம்தான் அபிராமிக்கு என நாம் நினைக்கும்போது அதே இடைவேளையில் ஒரு டுவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர்.

அர்ஜுன் இன்னும் செம ஃபிட்டாகவே இருக்கிறார். அதற்காக ப்ளாஸ்ட் 2, 3 என்று ஜனங்களை சோதிக்கக்கூடாது.

படத்தின் இன்னொரு ஹீரோ ஸ்டண்ட் இயக்குனர் பீனிக்ஸ் பிரபு. கதை பாதி ஆக்‌ஷன் மீதி என்று திரைக்கதை இருக்கும் நிலையில் விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

இசை ரவி பஸ்ரூர். புதுமை என்கிற பெயரில் ஆக்‌ஷன் காட்சிகளில் வீணை வாசிப்பதில் தொடங்கி என்னென்னமோ செய்கிறார். நல்லவேளை படத்தில் ஒரு துண்டுப்பாடல் கூட இல்லை. ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர் பிரதீப் ராகவ் ஆகியோரது பணியும் அபாரம்.

பரபரவென செல்லும் கதையில் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி மட்டும் சோதனை. அர்ஜூன் அண்ட் ஃபேமிலி வில்லன் கோஷ்டியினரை கொத்தவால் சாவடி ஃபைட் ரேஞ்சில் டீல் பண்ணியிருக்கவேண்டாம்.

மொத்தத்தில் ப்ளாஸ்ட் ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு ஃபுல் மீல்ஸ்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram