விமர்சனம்

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வேற லெவலா? -விமர்சனம்!

தா.பிரகாஷ்

ஆர்யா தயாரிப்பு, கோவிந்தா பாடல் சர்ச்சை, படக்குழுவின் தொடர் புரோமோஷன் என ஏகப்பட்ட விளம்பரத்துடன் வெளியாகியிருக்கிறது சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.

ஹிட்ச்காக் இருதயராஜ்.. பேரே கிலியா இருக்குதுல்ல.... இது ஒரு பேயோட பேரு. அதுவும் சினிமா தயாரிப்பாளர் பேய். திரைப்படங்களை கிழித்து தொங்கவிடும் விமர்சகர்களைக் குறிவைத்து தன்னுடைய பாழடைந்த தியேட்டருக்கு வரவழைத்து, பேய் படத்துக்குள் கதாபாத்திரங்களாக்கி கொல்லுகிறது இந்த பேய். இந்த வேடத்தில் நடித்திருக்கிறார் செல்வராகவன். (பேய் சாரே... இந்த விமர்சனத்தில் ஏதும் கோபம் வந்தால் கண்டுக்காம விட்டுடுங்க!)

இந்த பேயின் வலையில் யூடியூபரான கிஸாவும் (சந்தானம்) அவரது குடும்பத்தினரும், காதலியும் மாட்டிக் கொள்கின்றனர். எப்படி வெளியே வருகிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.

சினிமா விமர்சகர்களை பழிவாங்கும் பேய், திரைக்குள் சென்று மாட்டிக் கொள்ளும் பிரதான கதாபாத்திரங்கள் என சுவாரஸ்யமான ஒன்லைனரை எடுத்துக் கொண்டு காமெடியும், திகிலும் நிறைந்த திரைப்படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த்.

முழுப்படமும் சந்தானம் – மொட்டை ராஜேந்திரனை சுற்றியே வருகிறது. இவர்கள் கூட்டணியில் வரும் சில காமெடிகளுக்கு வாய்விட்டு சிரிக்காமல் இருக்க முடியாது. மொட்டை ராஜேந்திரனின் டவுசருக்குள் இருந்து எலி வெளியே வரும் காட்சி, சப்டைட்டில் தொடர்பாக வரும் காட்சி அட்டகாசம். அதேபோல், கவுதம் மேனனின் மேனரிசத்தை, கஸ்தூரியின் அலட்டல் குணத்தை கிண்டல் செய்யும் காட்சிகளில் சிரிப்பு உறுதி.

படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை என்றாலும் திரைக்கதை பேய் போல் அலைகிறது. சந்தானம், மொட்டை ராஜேந்திரன் கதாபாத்திரங்கள் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் தேறவில்லை. இரண்டாம் பாதியில் இழுஇழுவென இழுத்து வைத்திருக்கிறார்கள். படம் முடிந்து விட்டது என்று நாம் நினைக்கும்போது, அது நீண்டுகொண்டே போகிறது. குறிப்பாக நிழல்கள் ரவி பாத்ரூம் காட்சி, மர்ம டைரியை யார் எடுப்பது என்பது தொடர்பான காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கின்றன.

ப்ரோ, சிக்கம் போன்ற வார்த்தைகளை சலிக்காமல் சொல்லி சலிப்பை ஏற்படுத்துவதோடு, லொள்ளு சபா மாதிரியே எல்லாவற்றையும் கிண்டல் செய்து காமெடி பண்ணுகிறார் சந்தானம்.

சந்தானம், கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, கீதிகா திவாரி, செல்வராகவன், லொள்ளு சபா மாறன் என படத்தில் நடித்துள்ள அனைவரும் ஒரு காமெடி படத்துக்கு எது தேவையோ அதை கொடுத்திருக்கின்றனர்.

ஆஃப்ரோவின் பின்னணி இசை ஓகே ரகம். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் கலர்ஃபுல்லான காட்சிகள் ஈர்க்கின்றன. சிஜியில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பேய் படத்துக்கு உண்டான பாழடைந்த பங்களா வீடு, பேய் தியேட்டர் போன்றவற்றைக் கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன் தத்ரூபமாகக் கொண்டுவந்துள்ளார்.

படத்தின் திரைக்கதை பலவீனமாக இருந்தாலும் வாய்விட்டுச் சிரிக்கவும் திகில் அடையச் செய்யும் காட்சிகளும் இருப்பதால் ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ பார்த்து மகிழலாம்!