இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படமா அல்லது ஃபேமிலி டிராமாவா அல்லது க்ரைம் த்ரில்லரா? என்ற எதிர்பார்ப்பை ‘டிஎன்ஏ’ என்ற தலைப்பும் டிரெய்லரும் ஏற்படுத்தி இருந்தன.
நாயகன் ஆனந்துக்கும் (அதர்வா) நாயகி திவ்யாவுக்கும் (நிமிஷா) திருமணம் நடக்கிறது. குழந்தையும் பிறக்கிறது. ஆனால், அந்த சந்தோஷம் நிலைக்கும் முன், அந்த குழந்தை தன்னுடையது இல்லை என்கிறார் நிமிஷா. அதன்பின் என்ன நடந்தது, குழந்தை கிடைத்ததா இல்லையா, அதற்கான பின்னணி என்ன என்பதே? டிஎன்ஏ படத்தின் கதை.
குழந்தைக் கடத்தல் என்ற சென்சிடிவ்வான ஏரியாவுக்குள் காதல், குடும்பம், மருத்துவ மோசடி என ஏராளமான விஷயங்களை பேசியிருக்கிறார் இயக்குநர் நெசல்சன் வெங்கடேசன். ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு மெனக்கெடல்கள். உதாரணத்துக்கு நாயகி நிமிஷாவுக்கு, Borderline Personality Disorder (BPD) என்ற கோளாறு இருக்கும். இது ஒருவகையான மனக்கோளாறு என போகிற போக்கில் சொல்லிவிட்டு போயிருக்கலாம். ஆனால், BPD என்றால் என்ன, அந்த கோளாறு இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என காட்சிப்படுத்தியுள்ளார்.
மனிதர்களின் கண்களில் மட்டுமல்ல, தொழில்நுட்பத்தின் கண்களிலும் மண்ணைத் தூவி, குழந்தைகளைக் கடத்தும் வில்லன் தொழில்நுட்பத்திலும், தொடர்பிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். இப்படி இருப்பவரால் மட்டுமே, இப்படியான குற்றங்களை தடயங்கள் இல்லாமல் செய்து முடிக்க முடியும் என்பதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக இவரின் கேரக்டர் எழுதப்பட்டுள்ளது.
இதில், சோடைபோன ஒரே கேரக்டர் அதர்வாவுடையதுதான். இவரின் கதாபாத்திரம் எப்படி என்பதை உணர்த்தவே, இயக்குநருக்கு முதல் முப்பது நிமிடம் தேவைப்படுகிறது. கழட்டிவிட்ட காதலியை நினைத்து யாராவது இப்படி ஏங்குவார்களா என்ற மனநிலை பெருகிவிட்ட காலத்தில், அதர்வாவுக்கு வைக்கப்பட்ட பின்கதை ஏனோ…? போதை மறுவாழ்வு மையம் தொடர்பான காட்சிகளை அப்படியே வெட்டியிருக்கலாம். இருந்தாலும் இடைவேளைக்கு முன்பும், அதன் பின்னரும் அதர்வாவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. குழந்தையைத் தொலைத்த கையறு நிலை, மனைவியை ஆறுதல்படுத்த முடியாத தவிப்பு என இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்கிறார் அதர்வா.
நிமிஷா கேரக்டராகவே வாழ்ந்துள்ளார் எனலாம். படபடப்பை, சட்டென உணர்ச்சி வயப்படுவதை, வெகுளித்தனத்தை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கு அடுத்து, பாலாஜி சக்திவேல் நடிப்பில் அசத்தியுள்ளார். ‘மனுஷன் என்னமா நடிக்குறாருயா...’ என ஆச்சரியப்பட வைக்கிறார். மருத்துவமனைகளில் குழந்தைகளைக் கடத்துபவராக நடித்திருக்கும் பாட்டி மிரட்டியிருக்கிறார். போலீஸ் விசாரணையில் அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் அப்படியொரு வரவேற்பு. இவர்களுடன் சேத்தன், ரித்விகா, ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்தின் மிக முக்கியமான காட்சி, குழந்தையை எப்படி கடத்தினார்கள் என்பதுதான். அந்த காட்சியில் எந்த புதுமையோ, நுணுக்கங்களோ இல்லாமல் பின்னணி குரலிலும், விறுவிறு காட்சிகளாலும் குழப்பி இருக்கிறார்கள். அதோடு, இன்குபேட்டர் உள்ள அறை எந்தளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். அங்கு நடக்கும் குற்றத்தை போகிற போக்கில் சொன்னால் எப்படி?
குழந்தையை மீட்கும் தந்தையின் கதைதான் படம் என்றாலும், படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு வசனம் வரும். “தப்பு செஞ்சவங்க யாரும் தப்பிக்கிறதில்ல… தண்டனை காலம்தான் தள்ளிப்போகிறது” என்று வில்லன் பேசுவது, படத்துக்கு மற்றொரு கோணத்தைக் கொடுக்கிறது. இப்படியொரு நறுக் வசனத்துக்காகவே எழுத்தாளர் அதிஷாவை பாராட்டலாம்!
ஐந்து மியூசிக் டைரக்டர்ஸ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர். ’ஆஹா ஓஹோ’ என்ற ரகத்தில் இல்லையென்றாலும் பாடல்கள் ஓகே. பின்னணி இசை ஜிப்ரான்.
பலகாட்சிகளில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் முத்திரை பதிக்கிறார்.
டாஸ்மாக் பாடல், குத்து சாங், முதல் முப்பது நிமிடம் காட்சிகளை நீக்கிவிட்டு, திரைக்கதையை இன்னும் கொஞ்சம் பெப் ஏற்றியிருக்கலாம்.
குழந்தை யாருடையது என செய்த டிஎன்ஏ சோதனையை இயக்குநர் கதைக்கும் பண்ணியிருக்கலாமே பாஸ்…!