திரெளபதி 2 
விமர்சனம்

திரெளபதி 2 – திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

பொன்னியின் செல்வன், யாத்திசை போன்ற திரைப்படங்களின் வரிசையில் வரலாற்றுப் புனைவு கலந்த திரைப்படமாக வெளியாகியிருக்கிறது திரெளபதி 2.

பாமகவின் செளமியா அன்புமணி, பாஜகவின் எச். ராஜா, அண்ணாமலை ஆகியோரின் வரவேற்போடு இன்று வெளியாகியுள்ள திரெளதி 2 எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.

விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலம் என்னும் ஊரில், அந்த கிராமத்துக்கு சொந்தமானவரின் நிலம் திடீரென வக்ஃப் வாரியத்துக்கு சொந்தம் என அறிவிக்கப்படுகிறது. அதை எதிர்த்து நாயகன் ரிச்சர்டு ரிஷியும் அந்த ஊர்க்கார்களும் ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுக்கின்றனர். அதை வெளிநாட்டில் இருக்கும் அந்த ஊரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பார்க்கிறார். உடனே அவர் ஊரில் உள்ள பாழடைந்த இந்து கோயிலை புனரமைக்க உதவுவதாக கூறி, தனது மகள் ரக்ஷனா இந்துசூடனை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார். நாயகன் – நாயகி இருவரும் அந்த பாழடைந்த கோயிலுக்கு செல்ல, கதையும் 13ஆம் நூற்றாண்டுக்கு செல்கிறது. அப்போது, தமிழ்நாட்டின் வடபகுதியை ஆண்ட வல்லாளர்கள் டெல்லி சுல்தானின் கொடுமைகளை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை படம் பேசுகிறது.

வடதமிழ்நாட்டை குறிப்பாக திருவண்ணாமலை பகுதியை ஆட்சி செய்த மூன்றாம் வீர வல்லாளனின் வாழ்க்கையை தான் இயக்குர் மோகன் ஜி திரைப்படமாக எடுத்துள்ளார். 13ஆம் நூற்றாண்டில் நடந்த ஓரிரு உண்மை சம்பவங்களை படம் காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லி சுல்தான் வல்லாளனை சிறைபிடித்து அவரின் தோலை உரித்து தொங்கவிட்டதை படம் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. இதன்மூலம் இஸ்லாமிய மன்னர்கள் மீது வண்டி வண்டியாக காழ்ப்பை கொட்டியிருக்கிறார். வரலாற்றைப் பதிவு செய்வது என்பது வேறு; அதைக் கொண்டு வன்மத்தை விதைப்பது என்பது வேறு என்கிற நோக்கிலேயே இப்படத்தை அணுக வேண்டியிருக்கிறது.

வக்ஃபு வாரியத்துக்கு எதிரான விஷத்தை விதைப்பது, குலத்தொழிலை நியாயப்படுத்துவது, இஸ்லாமிய மன்னர்கள் பெண் பித்தர்களாகவும், மனித மாமிசம் சாப்பிடுபவர்களாகவும் சித்தரித்திருப்பது இயக்குநரின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

வீரசிம்மனாக நடித்திருக்கும் சரிச்சர்ட் ரிஷி ஓரளவு வீரமிக்க தளபதியாக நடித்திருந்தாலும், அவரின் கதாபாத்திரம் மனதில் பதியவில்லை. ரக்சனா இந்துசூடன், திரௌபதி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தகாலத்து அரண்மனை நாயகியாக மின்னுகிறார். வல்லாளனாக வரும் நட்டி என்ற நட்ராஜ், சம்புவராயராக வரும் வேலராமமூர்த்தி கதாபாத்திரங்களும் அழுத்தமாக இல்லை. படத்தில் எந்த கதாபாத்திரமும் அழுத்தமாக இல்லை. படத்தின் திரைக்கதையிலும் சுவாரஸ்யமில்லை. வல்லாளன் படை மதுரை சுல்தான் கோட்டையை முற்றுகையிட்டு போர் புரிவது, பெரும் படை கொண்ட டெல்லி சுல்தானை ஏதுமற்ற வீரசிம்மன் எளிதாக வீழ்த்துவது போன்றவை ஏதே தெரு சண்டை போல் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் பலம் என்று சொன்னால் ஒளிப்பதிவையும், கலை இயக்கத்தையும் இசையையும் சொல்லலாம். இசை - ஜிப்ரான், ஒளிப்பதிவு - பிலிப் கே. சுந்தர்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்கும் இந்த படத்துக்கு சென்சார் போர்டு எந்த ஆட்சேபனையும் இன்றி சான்றிதழ் கொடுத்திருக்கிறது. இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் எப்படியான வரவேற்பை கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.