”ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்” என்ற வாலியின் வரிகளை நினைவுபடுத்துகிறது உதய் கார்த்தி – சுபிக்ஷா நடிப்பில் வெளிவந்துள்ள ஃபேமிலி படம். படம் பேர் சொல்வதுபோல் இது குடும்பத்துடன் போய்ப் பார்க்கிற படமா என்று பார்ப்போம்.
ஒரே குடும்பத்தில் வெவ்வேறு ஆசைகள் கொண்ட மூன்று அண்ணன் தம்பிகள். இதில் கடைக்குட்டியான படத்தின் நாயகன் உதய் கார்த்திக்கு (தமிழ்) சினிமாவில் இயக்குநராக ஆசை. இதனால் அவரும் அவரின் குடும்பத்தினரும் சந்திக்கும் இன்ப துன்பங்களே படத்தின் மீதிக் கதை.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி சினிமாவில் ஜெயிக்கிறார் என்பதை காதல், காமெடி கலந்த ஜானரில் எடுத்துள்ளார் இயக்குநர் செல்வா குமார் திருமாறன். பரபரப்போ, அதிரடி திருப்பங்களோ இல்லாத சுமாரான திரைக்கதை. முதல் பாதி ஃபீல் குட்டாக இருந்தாலும் இரண்டாம் பாதி தள்ளாடுகிறது.
நாயகனாக நடித்துள்ள உதய் கார்த்தி காட்சிக்கு ஏற்ற உணர்வுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். நாயகி சுபிக்ஷாவுக்குகாட்சிகள் குறைவு என்றாலும், வரும் காட்சிகளில் கவர்கிறார். நாயகனுக்கு அண்ணனாக வருகிறார் விவேக் பிரசன்னா. படத்தில் இவர் இரண்டாவது நாயகன் என்று சொல்லலாம். இவரின் கேரக்டரே கதையின் போக்கை மாற்றுகிறது. அம்மாவாக வரும் ஸ்ரீஜா ரவி, நிஜ அம்மாக்களை நினைவுபடுத்துகிறார். பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரமும் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் அனிவீயின் இசை. பின்னணி இசையும் பாடலிலும் கவனம் ஈர்க்கின்றன. மெய்யேந்திரன் ஒளிப்பதிவு, சுதர்ஷன் எடிட்டிங் சூப்பர்.
டெக்னிக்கல் டீம் ஸ்ட்ராங்காக இருந்த அளவுக்கு கிரியேட்டிவ் டீம் இல்லை. படம் எந்த உணர்வுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை. குறும்படமாக எடுத்திருக்க வேண்டிய கதையை இழுஇழு என இழுத்து வைத்திருக்கிறார்கள்.
‘ஃபேமலி படம்’ என ஆங்கிலத்தில் தலைப்பை வைத்த இயக்குநர், படத்தில் எடுக்கும் படத்துக்கும் தமிழில் பெயர் வைக்கவில்லை.
குடும்பம் உறுதுணையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற உந்துதலைக் கொடுத்திருக்க வேண்டிய ஃபேமிலி படம், சற்று தடுமாறுகிறது.