குட் டே திரைப்படம் 
விமர்சனம்

குட் டே: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

‘இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக் கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலருக்குப் போலவே நாளை மற்றுமொரு நாளே!’ – ஜி. நாகராஜனின் கவித்துவ வரிகளோடு தொடங்குகிறது ‘குட் டே’ திரைப்படம்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், ஒரு மனிதனின் ஒருநாள் வாழ்க்கையைப் பேசுகிறது.

விரும்பியதை படிக்க முடியாத விரக்தி, கடமைக்குக் கல்யாணம், நோய்வாய்ப்பட்ட பெண் குழந்தை, தவறு செய்த மேலாளரை தட்டிக்கேட்க முடியாத நிலை, அம்மாவின் மருந்து செலவுக்கு பணம் அனுப்பினால் கோபித்துக் கொள்ளும் மனைவி, இல்லாத வாசலுக்கு முறைவாசல் செய்ய பணம் கேட்கும் ஹவுஸ் ஓனர், ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் அசிங்கப்படுத்தும் நண்பன். இப்படியான பல அவமானங்களையும் கையறு நிலையையும் கழுதைபோன்று சுமக்கும் நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம் (சாந்தகுமார்), சம்பள நாள் இரவு மது அருந்துகிறார். அந்த போதை ஆரம்பத்தில் அவருக்கு ஆனந்தத்தைக் கொடுத்தாலும், அந்த ஆனந்தமே அடுத்த சில மணி நேரங்களில் அவரை சிக்கலில் சிக்க வைக்கிறது. தெளிய விடாமல் குடித்துக் கொண்டு ஏகப்பட்ட பிரச்சனைகளை விலைக்கு வாங்குகிறார். இதற்கிடையே ஒரு குழந்தை காணாமல் போகிறது. அதை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் காவல்துறைக்கு, நாயகனையும் கண்டு பிடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இறுதியில் நாயகனின் போதை அவரை எங்கு கொண்டு நிறுத்துகிறது? காணாமல் குழந்தை மீட்கப்பட்டதா? என்பதை ஓர் இரவு பயணமாக சொல்வதே குட் டே.

வாழ்வின் துயரங்களை அடை காத்திருக்கும் ஒருவர் குடிபோதையில் கொட்டித் தீர்ப்பதை இயக்குநர் அரவிந்தன் அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். கார்த்திக் நேத்தாவின் அடர்த்தியான வாழ்க்கை அனுபவங்கள் சுவாரஸ்யமான திரைப்படத்துக்கு உண்டான கதாபாத்திரங்களை, எதிர்பாராத திருப்பங்களை, நெஞ்சைப் பிசையும் துயரங்களைக் கொண்டுள்ளது.

தாளாத துயரத்தை மதுபோதை எப்படி ஆட்கொள்கிறது, இதனால் அவன் அப்படி தன்னுடைய சுயத்தை இழக்கிறான் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் பிரித்திவிராஜ் ராமலிங்கம். படம் முழுக்க அவர்தான். போதை ஏறிய உடல் மொழி, கொழகொழவென இல்லாத வசன உச்சரிப்பு மூலம் தனது மனக்குமுறலை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இவரின் கல்லூரி தோழியாக நடித்திருக்கும் மைனா நந்தினி குறைந்த காட்சிகளே வந்தாலும் காட்சிகளுக்கு ஏற்ற உணர்வுகளைக் கச்சிதமாக வெளிக்காட்டியுள்ளார். இவரின் கணவராக ஆடுகளம் முருகதாஸ் அதகளப்படுத்தி இருக்கிறார். இவர் வரும் காட்சிகளில் சிரிப்பு உறுதி. அதேபோல் கார்த்திக் நேத்தா ஒரு காட்சியில் வருவார், சினிமாவில் இதுவரை பார்த்திராத அட்டகாசமான காட்சி. இந்த ஒரு காட்சிக்காகவே இந்த படத்தை பாராட்டித் தீர்க்கலாம்.

ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் காளி வெங்கட், தையல்காரராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்பவராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அறிவுரை சொல்பவராக நடித்திருக்கும் போஸ் வெங்கட், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விஜய் முருகன் ஆகியோர் நாயகனின் பயணத்தில் கவனம் ஈர்க்கும் மனிதர்களாகக் கடந்து போகிறார்கள்.

இறுதிக்காட்சியில் வேலராமமூர்த்திக்கும் பிரித்திவிராஜுக்கும் இடையே நடக்கும் உரையாடல் நெகிழ்ச்சியாக இருந்தாலும், நடு இரவில் பிணத்தை புதைப்பது போன்று காட்டியிருப்பார்கள். திருப்பூரில் இப்படித்தான் நடக்குமா?

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் எளிமை என்றாலும், திரைக்கதைக்கும், காட்சிகளுக்கும் கூடுதல் வலிமையை கொடுத்திருக்கின்றன. ’அம்புலியே ஆராரோ’, ‘மின்மினியே ராசாத்தி’ பாடல்கள் உருக வைக்கின்றன.

இரவில் நடக்கும் கதைக்கு ஏற்ற ஒளிப்பதையும் படத்தொகுப்பையும் செய்துள்ளனர் மதனும் குணதேவ்வும்.

‘அழு... அழு நல்லா அழு... செத்த பிறகா அழப்போறம்’ என்பது வசனங்கள் படத்துக்கு கச்சிதம். கதைக்கேற்ற வசனம் எழுதியுள்ளார் கார்த்திக் நேத்தா.

குடி ஏற்படுத்தும் இழிவுகளைப் படம் பேசுவதாக தெரிந்தாலும் அதிலிருந்து ஏன் மீள வேண்டும் என்பதையும் படம் அழுத்தமாகப் பேசுவதால் ‘குட் டே’ படத்துக்கு ’வெரி வெரி குட்’ போடலாம்!