தன்னோட சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் பேனர்ல நயன்தாரா கதாநாயகனாகவும் கவின் கதாநாயகியாகவும் நடிச்சிருக்க ரொமாண்டிக் காமெடிப்படம்தான் இந்த ஹாய்.
ரொமாண்டிக் காமெடியேதானான்னு நிச்சயம் ஒரு சந்தேகம் உங்களுக்கு வரும். வாங்க அதுக்கு முன்னாடி கதையைப் பார்க்கலாம்.
கவின் காதலைப் பொறுத்தவரை ஒரு ராசியில்லா ராஜா. தொட்டில்ல குழந்தையா இருந்த காலத்துலருந்து தொடர்ந்து லவ் ஃபெயிலியர்ஸ். மனசு வெறுத்துப்போய் ஊரை விட்டு சென்னக்கு ஓடி வந்துடுறார். இன்னொரு டிராக்குல தாய்மாமனோட லவ் டார்ச்சர் தாங்காம நயன்தாராவும் மஞ்சப்பையில ஒரு அரிவாளை மட்டும் எடுத்துட்டு சென்னைக்கு ஓடி வந்துடுறாங்க. திரைக்கதைப்படி ரெண்டுபேருக்கும் பொதுவான நண்பர்கள் சென்னையில இருந்த வகையில ரெண்டுபேரும் ஒரே இடத்துல தங்கி இருக்காங்க. கவினுக்கு நயன் மேல காதல் இருந்தாலும் சொல்லாம இருக்காரு.
நயனோட அப்பா பிரபு. கவினோட அப்பா பாக்கியராஜ். இந்த ரெண்டு குடும்பங்களும் ஒரு கட்டத்துல பிள்ளைங்களை தேடி சென்னைக்கு வர,,, எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் கொடுக்குறாங்க நயனும் கவினும்… அப்புறம் கதை என்னாச்சு… படம் பார்த்த நாம என்னவானோங்குறது சம்பவமே.
மற்ற உறவினர்கள் கூட்டத்துல எழுத்தாளர் நம்ம பாக்யம் சங்கரும் பளிச்சுன்னு ஒரு கேரக்டர்ல வர்றார்.
நயன் கதாநாயகன், கவின் கதாநாயகின்னு சொன்னது காமெடிக்காக இல்லை. கேரக்டர்களையே அப்படித்தான் அமைச்சிருக்காங்க. கவினை பல காட்சிகள்ல அழ வச்சி ரசிக்கிறாங்க நயன்.
இந்த ஜோடியைப்பார்த்தவுடன் மூத்த பெண்ணோட சின்னப்பையனுக்கு காதல் மாதிரியான கதைன்னு நினைச்சி ஏமாற வேண்டாம். கதைப்படி நயனுக்கு கவினை விட வயசு கம்மிதான். சொந்தப் படம் எடுத்துட்டு ஒரு பத்து வயசை கம்மி பண்ணக்கூட முடியலைன்னா எப்பிடி?
பாக்கியராஜுக்கு ஜோடி ராதிகா சரத்குமார்.[என்னம்மா இப்பிடி எல்லாப்படத்துலயும் இருக்கீங்களேம்மா?]
பிரபுக்கு ஜோடி சுஹாசினி மணிரத்னம். இந்த ஜோடிக்கு ஒரு படுபயங்கரமான காமெடி கதை வச்சிருக்காங்க. அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டோம்.
ஒரு பிரச்சினைன்னவுடனே எல்லாருமே சென்னைக்கு ஓடி வந்தா எப்படி? கொஞ்சப் பேராவது தாம்பரம் செங்கல்பட்டுன்னு போக்கூடாதான்னு ஒரு காமெடி படத்துல இருக்கு.அதைத்தாண்டி படத்துல ஒரு காமெடியாவது இருக்கான்னு சென்னை முழுக்க தேடுனாலும் கிடைக்காத டிராஜடிதான் இந்தப்படம். அப்புறம் ரொமான்ஸ்… அது எடிட்டிங்ல போயிடுச்சி போல.
பாடலாசிரியர்னு அறியப்படுற விஷ்ணு எடவன் எழுதி இயக்கியிருக்கார். கவின் மாதிரியே இவருக்கு காமெடியும் வரல. டைரக்ஷனும் வரலை. எல்லாக் காட்சிகளுமே ரொம்ப செயற்கையா இருக்கு.
மொத்தத்தில் ஹாய் ரொம்ப ரொம்ப சுமார் ஹை !