விமர்சனம்

'29' படம் எப்படி இருக்கு?

மிஸ்டர் முள்

படத்தின் தலைப்பு குறித்து எவ்வித குழப்பத்துக்கும் ஆளாக வேண்டும். அது கதாநாயகனின் வயது. ’29 வயசு ஆகியும் நான் யாரு எனக்கே தெரியலையே… லவ் பண்ண ஒரு பொண்ணு கூட கிடைக்கலையே’ என்கிற கதாநாயகனின் மனக்குமுறல்தான் கதையின் ஒன் லைன். ரொம்ப தின் லைனா இருக்கே என்று தோணுகிறது அல்லவா ? வெயிட்.

’மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களை இயக்கியுள்ள ரத்னகுமாரின் 4 வது படைப்பு. லோகேஷ் கனகராஜின் ஒரிஜினல் மூளை என்று திரையுலகத்தினரால் கிசுகிசுக்கப்படக்கூடிய இந்த ‘29’ படத்தின் தயாரிப்பாளர் சாட்சாத் லோகேஷேதான்.

இரண்டரை மணிநேரம் ஓடுகிற கதையின் 25 வார்த்தைச் சுருக்கம் இதுதான்…

29 வது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் விது ‘எனக்கொரு கேர்ள் ஃப்ரண்ட்’ இல்லையே ‘என்கிற விரக்தியில் இருக்கிறார். சில தினங்களிலேயே அவருடன் பணி செய்யும் ப்ரீத்தி அஸ்ரானியுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாகி, காதலில் நெருக்கம் ஏற்பட்டு காமமாகி, பின்னர் குழப்பங்கள் ஏற்பட்டு பிரேக் அப் ஆகி க்ளைமேக்ஸ் நெருங்கும்போது படம் பார்க்கிற நாம் என்னவாகிறோம் என்பதுதான் மேட்டர்.

நாயகன் விது கொஞ்சம் தனுஷ் சாயலுடன் முரட்டுத் தோற்றத்தில் இருக்கிறார். இன்னும் நாலைந்து படங்களில் கொஞ்சம் நடிக்கவும் பழகிவிடுவார். ‘அயோத்தி’ நாயகி ப்ரீத்தி அஷ்ரானி லுக்கிலும் நடிப்பிலும் குறை வைக்கவில்லை. விதுவின் அறை நண்பராக, படவாய்ப்பு கிடைக்காத உதவி இயக்குநராக வரும் வசந்த் அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார்.

ஒளிப்பதிவு மகேஷ் மாணிக்கம். நல்வரவு. இசை ஷான் ரோல்டன். கொஞ்சம் வித்தியாசமாக பாடல்கள் போடுகிறேன் என்கிற பெயரில் இம்சை செய்திருக்கிறார். பின்னணி இசையும் டிட்டோ.

படத்தின் துவக்கத்திலிருந்தே காட்சிகள் எதிலும் ஒன்ற முடியவில்லை. நாயகனும் அவரது அம்மாவும் பேசிக்கொள்ளாமல் இருப்பதற்கான காட்சிகளில் நம்மைக் கொல்லாமல் கொல்கிறார் ரத்னகுமார். மட்டுமன்றி, டேரிங் என நினைத்துக்கொண்டு, காதலுக்கு அவர் கொடுக்கிற வியாக்கியானங்களெல்லாம் செம போரிங்.

படத்தின் ஒரே ஒருப்படியான சமாசாரம். ஏரிகள் ஆக்கிரமிப்பில் கல்லூரிகள் கட்டப்பட்டிருப்பதை எதிர்த்து ஒரு ஆக்கிரமிப்பை நாயகன் அழகிய ஏரியாக மீட்டெடுப்பது.

மற்றபடி 29 படங்களை நோக்கிய ரத்னகுமாரின் 4 வது சுமார் படம் இது. பயணம் தொடரட்டும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram