விமர்சனம்

ஜனநாயகன் – விமர்சனம்… தட் நீங்க முதல்வராவே இருந்துருங்க விஜய் மொமண்ட் !

மிஸ்டர் முள்

உப்புமாவின் பக்குவம் சில சமயம் சொதப்பலாகிவிடுகிறபோது மம்மிகள் அதை கேசரியாக்கி குடும்ப உறுப்பினர்களை குதூகலப்படுத்திவிடுவார்கள்.

ஆனால் கேசரியை உப்புமாவாக்க முடியுமா ?

இயக்குநர் அ.வினோத்தால் அட்டகாசமாக அதை செய்ய முடிந்திருக்கிறது, தெலுங்குப்படமான ‘பகவந்த் கேசரி’யை ஜனநாயகனாக ரீமேக் செய்ததன் மூலம். படம் மூன்று மணி நேரம் மூன்று நிமிடங்கள் ஓடுகிறது என்கிறபோதே வினோத்தின் ஓவர் கான்ஃபிடன்ஸை புரிந்துகொள்ள முடியும்.

கதையின் துவக்கத்தில் விஜய் ஒரு கைதியாக இருக்கிறார். அங்கே படுபயங்கரமாக அவர் சண்டை செய்கிற வீரதீரபராக்கிரமத்தைப் பார்த்து அவரது ஃப்ளாஷ்பேக்கை ஆராயும் கவுதம் மேனன் தன் சொந்த ஜாமினில் அம்மாவைப் பார்க்க அனுமதிக்கிறார். அதனால் கவுதம் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட அவர்களுக்குள் ஒரு நல்ல புரிதல் ஏற்படுகிறது. அந்நிலையில் கவுதம் ஒரு விபத்தில் இறந்துவிட, பயந்த சுபாவ போபியோ கொண்ட, அவரது சின்னஞ்சிறு பெண் குழந்தையை ‘புலி மாதிரி‘ வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் வளரும்போது மமிதா பைஜூவாக வந்து நிற்கிறார்.

இன்னொரு பக்கம் ஆப்பிரிக்க நாடு ஒன்றை சுடுகாடு ஆக்கிவிட்டு இந்தியா திரும்பும் வில்லன் பாபி தியோல் இந்தியாவை பாகிஸ்தானுக்கு அடிமை நாடு ஆக்குகிறேன் என்று சூளுரைத்தபடி லட்சக்கணக்கான பொம்மைகள் மூலம் துப்பாக்கிகளை இந்தியாவுக்குள் கொண்டு வருகிறார்.

நாயகன் விஜய்க்கு ஒரு நாலைந்து ஃப்ளாஷ்பேக், வில்லனுக்கு இதுவரை ஒலக சினிமா காணாத கர்ணகொடூர ஃப்ளாஷ்பேக், இன்னொரு குட்டிவில்லன் பிரகாஷ்ராஜுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் என்று படம் பல பேக்குகளில் பயணிக்கிறது.

இடைவேளை சமயத்தில் மகள் மமிதா பைஜுவுக்கும் சர்வதேச பயங்கரவாதி வில்லனுக்கும் மத்தியில் ஒரு முடிச்சுப்போட்டு சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் ரசிகர்களைக் கடிச்சிப்போட்டு வைக்கிறார் இயக்குநர் வினோத்.

படத்தின் முக்கியமான இரு தூண்கள் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனும் ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசுவும். சத்யனின் ஒளிப்பதிவில் செம ஸ்டைலிஷாக இருக்கிறார் விஜய். வழக்கம்போல் நம்பமுடியவில்லை ரகம்தான் என்றாலும் சண்டைக்காட்சிகள் தூள் பறக்கின்றன. படத்தின் விறுவிறுப்புக்கு அனிருத் இன்னொரு நல்ல பக்க வாத்தியம். பாடல்களில் மட்டும் ரஜினிக்குப் போட்ட டியூன்களின் வாசனை சற்று தூக்கல்.

எடிட்டர் பிரதீப் இ.ராகவ் இயக்குநருடன் மல்லுக்கட்டி ஒரு அரைமணி நேரப்படத்தை டஸ்ட்பின்னுக்கு அனுப்பியிருந்தால் படம் பரபரவென இருந்திருக்கும்.

விஜய் வழக்கமான நடிப்பு. கடைசிப்படம் என்பதால் கூடுதலாக கொஞ்சம் முயற்சித்திருக்கிறார் என்று சொன்னாலும் தப்பில்லை. நாயகி என்று சொல்லக்கூடிய பூஜா ஹெக்டேவுக்கு படு டம்மி கேரக்டர். மமிதாவுக்கு நல்ல கேரக்டர். நல்ல நடிப்பு.

அரசியல்வாதிகளை துகிலுரிக்கிறேன் என்கிற போர்வையில் இயக்குநர் வினோத் வைத்திருக்கிற காட்சிகளில் அத்தனை செயற்கைத்தனம். ஏனென்றால் அவர் இயக்கியிருக்கிற படமே இன்னொரு அரசியல்வாதிக்கு தலைவர் இமேஜ் கொடுக்கிற படம்தானே ? படம் முழுக்க இருக்கிற பிரச்சார வாடை தாங்க முடியவில்லை.

ஆனால் ‘ மறுபடியும் மறுபடியும் நீங்க ரெண்டு கட்சிகளுமே கொள்ளையடிச்சிட்டே இருந்தா எப்படி ? மூணாவதா ஒருத்தருக்குக் கொள்ளையடிக்க வாய்ப்பு கொடுங்களேன்?’ என்று விஜய்க்கு வாய்ப்புக் கேட்டு மனம் திறந்ததை மட்டும் நிச்சயம் பாராட்டலாம்.

விஜய்க்கு இனியும் இப்படிப்பட்ட படங்கள் பாக்குற நிலைமைக்குப் பதில் பேசாம நீங்க முதல்வராவே இருந்திருங்க மொமண்ட்.

அ.வினோத் ‘சதுரங்க வேட்டை’ தொடங்கி ’தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ என்று கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கிக்கொண்டே வந்தவர் இந்த ஜனநாயகனில் மசாலா மன்னனாக படுகுழிக்குள் விழுந்திருக்கிறார்.

ஜனநாயகன் விஜய் ரசிகர்களுக்கு வேட்டை.

நல்ல பட ரசிகர்களுக்கு மொட்டை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram