விமர்சனம்

ஜோரா கைய தட்டுங்க: திரைவிமர்சனம்!

தா.பிரகாஷ்

சந்தானம், சூரி படங்களுக்குப் போட்டியாக வெளியாகி இருக்கிறது யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' திரைப்படம்.

தந்தை கற்றுக்கொடுத்த மேஜிக் தொழிலை அரைகுறையாகக் கற்றுக்கொண்டு பிழைப்பை ஓட்டுகிறார் நாயகன் யோகி பாபு. இப்படி இருப்பவரின் வாழ்க்கையில் இரண்டு மேஜிக் நடக்கின்றது. ஒன்று, ஆய்வு மாணவி ஒருவர் இவரை காதலிக்கத் தொடங்குவது, மற்றொன்று,போதை இளைஞர்கள் மூவர் காரணமே இல்லாமல் இவருக்கு எதிரி ஆவது. இதிலொரு இளைஞன், யோகிபாபுக்கு தெரிந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறான். அவனையும் அவனுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் தனது மேஜிக் திறமையைப் பயன்படுத்தி யோகி பாபு என்ன செய்கிறார்? அவர் வெற்றிகரமான மேஜிக் கலைஞராக ஆனாரா இல்லையா? என்பதுதான் ஜோரா கையை தட்டுங்க படத்தின் கதை.

படத்தின் டிரெய்லர் பார்த்தபோது இந்த படத்தில் யோகி பாபுவின் கேரக்டர் வித்தியாசமாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உண்டானது. அதை ஓரளவு படம் பூர்த்தி செய்திருந்தாலும், படத்தின் திரைக்கதை பளார் பளார் என்று அறைவிடுகிறது.

‘முதல் பாதி இப்படி இருந்தது… இரண்டாம் பாதி அப்படி இருந்தது…’ என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. முழு படமும் ஜோராக மொக்கை போடுகிறது. அந்தளவுக்கு உள்ளது படத்தின் திரைக்கதை.

அபூர்வசகோதரர்கள் அப்பு மாதிரி யோகி பாபு ஏதேனும் வித்தை காட்டுவார் என்று எதிர்பார்த்தால், வீட்டுக்கும் ரோட்டுக்கும் ரேம்ப் வாக் செய்கிறார்.

க்ரைம் த்ரில்லர் கதைக்குள் மேஜிக் என்ற விஷயத்தைக் கொண்டு வந்த இயக்குநர் திரைக்கதையை எத்தனை வருடங்கள் யோசித்து எழுதினார் என்று தெரியவில்லை. படத்தின் மேக்கிங், காட்சிகளுக்கு இடையேயான தொடர்ச்சி போன்ற பல விவகாரங்கள் சீரியல்களையே விஞ்சிவிடும் அளவுக்கு உள்ளது.

படத்தில் எஸ்.பி.யாக வரும் ஹரீஷ் பேரடி, விக் வைத்துக் கொண்டிகிறார். ஆனால், இறுதிக்காட்சியில் அந்த விக் அவர் தலையில் இல்லை. இஷ்டத்துக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். ஹீரோயினாக சாந்தி ராவ் ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து போகிறார்.

அஞ்சலி, நம்மவர் படங்களின் ஒளிப்பதிவாளரான மதுஅம்பாட் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இருந்தாலும் என்ன பயன்?

யோகி பாபு மாதிரியான நடிகர், படம் எடுக்க தயாரிப்பாளர், அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர் கிடைத்தும் இப்படியொரு படம் எடுத்தால் எப்படி?

மேஜிக் படத்தில் மேஜிக் இல்லை என்பதுதான் மேஜிக்.

(குறிப்பு: இந்த விமர்சனம் ஜோரா இல்லை என்றால் அதற்குப் படம் தான் காரணம்… விமர்சகர் இல்லை…)