சாதியைக் காரணம் காட்டி தன் மகளின் காதலுக்குத் தடைபோடும் ஓர் அம்மாவின் வறட்டு குணத்தால் நடந்தேறும் துயரச் சம்பவங்களே இந்த காயல்.
நாயகன் லிங்கேஷூம் (ஆதி தமிழ்) காயத்ரியும் (தேன்மொழி) காதலிக்கிறார்கள். காயத்ரியின் அப்பா (ஐசக்) போலீஸ் உயர் அதிகாரி. அவரின் அம்மா (அனுமோல்) ஹவுஸ் ஒய்ப். மகளின் காதலுக்கு அப்பா ஓகே சொல்ல, லிங்கேஷின் சாதியை காரணம் காட்டி அம்மா நோ சொல்கிறார். வேறுவழியின்றி அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் காயத்ரிக்கு, வாழ்வு நிலையற்றதாகிறது. இதற்கிடையே, காதலியைப் பிரிந்த லிங்கேஷ் வாழ்க்கை என்ன ஆனது? மகளைப் பலி கொடுத்த அனுமோல் மனம் திருந்தினாரா, இல்லையா? என்பதற்கு விட சொல்கிறது மீதிப்படம்.
இளையராஜாவின் பாடலுடன் இதமாக படம் தொடங்கினாலும், காயத்ரியின் இறப்பு பரபரப்பை கொண்டு வருகிறது. பின்னர், அவரின் இறப்புக்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்களை நான் லீனியராக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தமயந்தி.
மிக இயல்பாக நகரும் கதையில், இறுதிக்காட்சிக்கு முன்னர், லிங்கேஷூக்கும் ஸ்வாகதாவுக்கும் இடையேயான ஒரு ரொமாண்டிக் காட்சி நிச்சயம் சிலிர்க்க வைக்கும்.
துடிப்பான இளைஞராக வரும் லிங்கேஷ், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்துள்ளார். காதல் தோல்வியை மறைக்க சிடுசிடுவென இருக்கும் காட்சிகளாகட்டும், இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ள தயங்கும் காட்சிகளாகட்டும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
யமுனா என்ற கதாபாத்திரத்தில் அனுமோல் கச்சிதமாக நடித்துள்ளார். இளையராஜாவின் பாடலில் உருகும் காட்சியிலும் மகளின் இறப்பில் அழுது புலம்பும் காட்சிகளும் கவனம் ஈர்க்கிறார்.
ஜெனிலியாவை நினைவுபடுத்துகிறார் ஸ்வாகதா. எனர்ஜி குறையாத நடிப்பு அவருடையது. உளவியல் ஆலோசகராக வரும் ரமேஷ் திலக், அனுமோல் மகளாக நடித்திருக்கும் காயத்ரி ஆகியோரும் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறனர். அனுமோல் கணவராக வரும் ஐசக் கதாபாத்திரம் மட்டும் கதைக்கு ஒட்டவில்லை.
‘எத்தனையோ பொண்ணுங்க செத்து வாழ்றாங்க’, செத்துப் போறதும்.. காணாம போறதும் ஒண்ணுதான்… இதனால யாருக்கும் எந்த ப்ரயோசனமும் இல்ல’ என்பது போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
படத்தின் பெரிய பலமே ஒளிப்பதிவும், இசையும்தான். ஒளிப்பதிவாளர் கார்த்தி ட்ரோன் காட்சிகளை படம் முழுவதும் நிரப்பியிருக்கிறார். படம் முழுக்க அழகான காட்சிகள். ஜஸ்டினின் பாடல்கள் கேட்க அருமையாக இருந்தாலும், அதற்கேற்ற தருணங்கள் படத்தில் இல்லை.
காதல், சாதி, பயணம் போன்ற அம்சங்கள் அடங்கிய கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இன்றைய சமூகத்துக்குத் தேவையான கதை.
‘காயல்’ தூறலாக நம்மை நனைக்கிறது.