‘காலாகாலத்துல கல்யாணம் பண்ணலைனா’ என்ன நடக்கும்…? என்ற கேள்விக்கு கலாட்டாவான பதில் சொல்கிறது இந்த ’லவ் மேரேஜ்’!
திருமண வயதை தாண்டிய நாயகன் விக்ரம் பிரபுவுக்கு (ராமச்சந்திரன்) கோபிச்செட்டிபாளையத்தில் பெண் பார்க்கின்றனர். நிச்சயம் செய்வதற்காக பெண் வீட்டிற்கு செல்லும் நாயகன் வீட்டார், வண்டி பழுது காரணமாக ஓர் இரவு பெண் வீட்டில் தங்கும் நிலை ஏற்படுகிறது. அப்போது பார்த்து கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட, நாயகன் வீட்டார் அங்கேயே டேரா போடுகின்றனர். இந்த சமயத்தில், கட்டிக்கப்போகும் பெண்ணிடம் பேசிப் பழகி நெருக்கமாக நினைக்கிறார் விக்ரம் பிரபு. ஆனால், கதாநாயகியோ (மீனாக்ஷி தினேஷ்) தன்னுடைய காதலனுடன் ஓடிப்போகிறார். இதனால் மனமுடையும் விக்ரம் பிரபு என்ன முடிவு எடுக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
‘உங்க பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலயா…’ என்ற ’பொன்னான வரியை’ வைத்துக் கொண்டு ஒரு ஃபீல் குட் திரைக்கதையை எழுத முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சண்முக பிரியன்.
திருமணத்துக்கு குடும்பங்கள் எப்படி தயாராகின்றன என்பதை முதல் பாதியில் யதார்த்தத்தமாக காட்டியுள்ளனர். இரண்டாம் பாதியின் தொடக்கம் ‘யாரடி நீ மோகினி’ படத்தை நினைவுப்படுத்துகிறது. காரணம், மச்சினிச்சி செய்யும் சேட்டைகள்தான்! இறுதியில் என்ன ட்விஸ்ட் இருக்குமோ என யோசிக்கையில், ஏற்றுக் கொள்ளும்படியான முடிவோடு படம் முடிகிறது.
டாணாக்காரன் வெற்றிக்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள படம் இது. கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை இந்த படத்திலும் கொடுத்துள்ளார் அவர். காதல் காட்சிகளில் கச்சிதமான நடிப்பால் மிளிர்கிறார்.
நாயகிகளாக அறிமுகமாகியிருக்கும் சுஷ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ் நடிப்பில் கவர்கின்றனர். அவர்களை இன்னும் இயக்குநர் பயன்படுத்தி இருக்கலாம். விக்ரம் பிரபுவின் மாமாவாக நடித்துள்ள அருள் தாஸ் கதாபாத்திரம் அட்டகாசம். ’எங்கடா இவர் ஏழரையை கூட்டிடப் போறாரோ’ என பதைபதைக்க வைக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், கஜராஜ், கோடாங்கி வடிவேலு ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர். இருந்தாலும் துணை கதாபாத்திரங்களுக்கான எழுத்து கொஞ்சம் வீக்.
முப்பது வயதை கடந்தால் சொந்த சாதிக்காரன் கூட பெண் தரமாட்டான் என்பதையும், முப்பது வயதுக்கு மேல் திருமணம் செய்யாமல் இருக்கும் ஆண்கள் எதிர்கொள்ளும் அவமானங்களையும் திரையில் காட்டிய விதம் அருமை.
சாதியா இல்லை பெற்ற மகளா? என்கிற சூழலில் கதாநாயகியின் தந்தை மகள்தான் முக்கியம் என முடிவெடுக்கிறார். இதற்காக இயக்குநரை பாராட்டலாம்!
இடைவேளைக்கு பின்னரான தொய்வும் கொரோனா ஊரடங்கை காட்சிப்படுத்திய விதமும் படத்துக்கு பெரிய சறுக்கல் எனலாம். வசதிக்காக காட்சிகளை எடுக்காமல், கதை நிகழ்வும் காலம், சூழலுக்கு ஏற்ப காட்சிகள் இருந்தால்தானே கதையோடு ஒன்ற முடியும்…?
ஷான் ரோல்டன் படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல் மற்றும் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியுள்ளார். ஒரே படத்தில் அவரே இரண்டு மூன்று பாடல்கள் பாடுவதை தவிர்க்கலாம்.
கோபிச்செட்டிப்பாளையத்தையும் அங்குள்ள பாரம்பரிய வீட்டையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர். பரத் விக்ரமனின் எடிட்டிங்கும் ஓகே.
ஒட்டுமொத்தத்தில் இந்தப் படம் முப்பதைத் தாண்டியும் கல்யாணம் ஆகாத ஆண்களுக்கான சிவப்பு எச்சரிக்கை… அதாங்க ரெட் அலர்ட்!