விமர்சனம்

’ மா இன்ட்டி பங்காரம்’ விமர்சனம்… சமந்தாகாரு எலாவுன்னாரு?

மிஸ்டர் முள்

மகா லட்சுமி மாதிரி ஒரு மருமக வீட்டுக்கு வரணும்னு ஆசைப்படுற ஒரு குடும்பத்துக்கு மகா காளி அவதாரத்துல ஒரு பொண்ணு வந்து சேர்ந்தா ? அந்த காளி நம்ம சமந்தாவா இருந்தா ??

‘அந்திமழை’ நேயர்லு அந்தரிக்கி நமஸ்காரம்லு…

சமந்தாவின் சொந்தத் தயாரிப்பில் ஒரு முழு ஆக்‌ஷன் நாயகியாக அவர் அட்ராசிட்டி செய்திருக்கும் படம் இந்த ‘மா இன்ட்டி பாங்காரம்’ அதை தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்று டப்பிங்கும் செய்து வெளியிட்டிருப்பதால் , வெட்டியாக இருக்கும் சமயத்தில், அதற்கு குட்டியாக ஒரு விமர்சனமும் செய்ய வேண்டிய கடமை.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துகொண்டவரும் நேர்மையான அரசியல்வாதியுமான ஆனந்தின் மூத்த மகனை திருமணம் செய்து குடும்பத்துக்கு மருமகளாக செல்கிறார் சமந்தா. முதலில் அவரை உதாசீனம் செய்யும் குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொள்ளும் சமயம் சமந்தாவின் ஃப்ளாஷ்பேக் ஒன்று மொத்தக் குடும்பத்தையும் மரணபயத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அதுவரை குடும்ப் பெண்மணியாய் வலம் வந்த சமந்தா அந்த எதிரிகளை விஜயசாந்தி அவதாரமெடுத்து எப்படியெல்லாம் வெளுத்துக்கட்டுகிறார் என்பதுதான் எங்க வீட்டுத் தங்கம்.

சமந்தா ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரே நேரத்தில் 100 பேரை போட்டுத் தாக்குகிறார் என்று போகிற கதையில் லாஜிக் எல்லாம் தேட முடியுமா ? அப்படி தேடினால்தான் கிடைக்குமா? ஆனாலும் தீவிரவாதிகள் முகாமில் சமந்தா வளர்ந்தார். அங்குதான் சண்டைப்பயிற்சிகள் எல்லாம் எடுத்தார். அதே தீவிரவாதக் குழுவின் தலைவர் சமந்தாவின் மீது இருக்கும் காதல் வெறியால் அவரது மாமனார் குடும்பத்தையே நாசமாக்க ஒரு பெரும் கும்பலையே களம் இறக்குகிறார் என்பதெல்லாம் ஏமிரா இதி வகையறாதான்.

மணிரத்னம் படத்தின் ‘திருடா திருடா’ ஹீரோ ஆனந்த் சமந்தாவின் மாமனராக வர கவுதமி மாமியாராக வர பெயர் தெரியாத குடும்ப உறுப்பினர்கள் அவரவர் பங்களிப்பை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இசை நம்ம சந்தோஷ் நாராயணன். கேட்ட சம்பளத்தை விட சமந்தா கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்திருப்பார் போல. பின்னணி இசையில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் சிறப்பு.

‘கல்யாண வைபோகமே’, ‘ஓ பேபி’ போன்ற காமெடி ரொமான்ஸ் படங்களை இயக்கி தெலுங்கு சினிமாவின் முன்னணி பெண் இயக்குநராக வலம் வரும் நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்கியிருக்கிறார். இனி ஆக்‌ஷன் டிராக்கை அவாய்ட் செய்துவிட்டு ரொமான்ஸ் பாதைக்கு திரும்பவேண்டியது அவசியம்.

இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் போன்ற சமந்தாவின் தீவிர ரசிகர்கள் மட்டும் பார்க்கவேண்டிய படம் இது. மற்றவர்களுக்கு மண்ட பத்தரம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram