‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘3 BHK’ எனத் தொடர்ந்து நடுத்தர குடும்பங்களின் வலியையும் கனவுகளையும் பேசும் திரைப்படங்கள் வெளியாகி அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அந்த வரிசையில் மற்றுமொரு நடுத்தர குடும்பத்தின் கதையாக வெளியாகி இருக்கிறது ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம். படம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
சென்னையில் மனைவி விஜயலட்சுமி மற்றும் இரு குழந்தைகள் சகிதமாக வாழ்ந்து வருகிறார் நடிகர் முனீஷ்காந்த். ரூ. 15,000 சம்பளத்தில் சென்னையில் குடும்பம் நடத்த கஷ்டப்படுகிறார். ஆனால், அவரது மனைவி விஜியோ வரவுக்கு மீறி செலவுகளை இழுத்துவிட குடும்பத்தில் காசை மையப்படுத்தி எந்நேரமும் பிரச்சினைகளாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான சமயத்தில் இந்தக் குடும்பத்தில் ரூ. 1 கோடிக்கான செக் கிடைக்கிறது. பணம் கிடைத்த குதூகலத்தில் குடும்பம் ‘தாம் தூம்’ என செலவுகளுக்கு கணக்கு போட திடீரென தொலைந்து போகிறது அந்த செக். எப்படி அந்த செக் தொலைந்தது? முனீஷ்காந்த் குடும்பத்தின் நிலை என்ன? தொலைந்த செக் மீண்டும் கிடைத்ததா என்பதே ‘மிடில் கிளாஸ்’ படத்தின் கதை.
’மிடில் கிளாஸ்’ குடும்பஸ்தனாக சிறப்பாக அந்த கதாபாத்திரத்தை திரையில் பிரதிபலித்திருக்கிறார் நடிகர் முனீஷ்காந்த். மனைவியுடன் மல்லுக்கட்டுவதாகட்டும், பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பது என அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். உறவினர்கள் முன்னிலையில் பெருமையாகக் காட்டிக் கொள்ள வேண்டும், மற்றவர்களை போல நம் குடும்பமும் முன்னேற வேண்டும் என நினைத்து இயங்குவது, யூடியூப் ஆரம்பிப்பது என பல குடும்ப தலைவிகளை நம் கண் முன்னே பிரதிபலித்திருக்கிறார். குறிப்பாக, செக் தொலைந்து போனதும் முனீஷ்காந்த்தை அவர் திட்டி தீர்க்கும் இடத்தில் நடிப்பில் அசால்டாக ஸ்கோர் செய்கிறார் விஜி. படத்தின் மற்ற கதாபாத்திரங்களான ராதாரவி, காளி வெங்கட், வேலராமமூர்த்தி, குரேஷி என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளனர்.
படத்தின் மிகப்பெரிய பலமே அதன் யதார்த்தம்தான். இன்றைய காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் போதும் என்ற நினைப்பு பலருக்கும் இல்லை. அல்லது இருக்கும் பணத்தை எப்படி செலவழித்து சேமிப்பது என்ற தெளிவான ஐடியாவும் இல்லை. இதுவே குடும்பத்தில் பல சண்டை சச்சரவுகளுக்கு காரணமாகிறது. இதை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் தெளிவாக நகர்த்தி சென்றிருக்கும் இயக்குநர் கிஷோர் ராமலிங்கத்திற்கு பாராட்டுகள். அவரது இந்த நேர்கோட்டு கதைக்கு கலை இயக்கமும் ஒளிப்பதிவும் கைக்கொடுத்திருக்கிறது.
ஆனால், படத்தின் பாடல்கள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. முதல் பாதியில் கலகலப்பாக நகரும் கதை இரண்டாம் பாதியில் தடுமாறுகிறது. இரண்டாம் பாதியும் கிளைமாக்ஸூம் இப்படித்தான் இருக்கும் என நீங்கள் என்ன யூகிக்கிறீர்களோ அதுவே அச்சு பிசறாமல் திரையில் வருவது பெரிய மைனஸ். மற்றபடி, படம் பார்க்கலாம் என்று நம்பி போனவர்களை ‘மினிமம் கியாரண்டி’ கொடுத்து ஆசுவாசப்படுத்துகிறது இந்த ’மிடில் கிளாஸ்’.