லட்சுமி காந்தன் கொலை வழக்கு 
விமர்சனம்

லட்சுமி காந்தன் கொலை வழக்கு - விமர்சனம்

மிஸ்டர் முள்

தியாகராஜ பாகவதரும் என்.எஸ். கிருஷ்ணனும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஒரிஜினல் லட்சுமி காந்தன் கொலைவழக்கு பற்றிய விபரங்கள் அறிந்த மூத்த குடிமக்களை சற்றே கன்ஃபியூஸ் பண்ணுகிற தலைப்பு. அந்த பத்திரிகையாளர் கொலை வழக்குக்கும் இப்படத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சும்மா கவன ஈர்ப்புக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ள தலைப்பு.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொன்றால் பாவம்’ என்று ஒரு படம் எடுத்த இயக்குநர் தயாள் பத்மநாபன் மரண தண்டனை என்கிற பெயரில் கொன்றாலும் பாவம் என்று வாதிடும் படம் இது.

கொலைக்குற்றவாளி ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தனக்கு மரண தண்டனை வழங்குபடி பெண் நீதிபதியிடம் முறையிடுகிறார். பெண் நீதிபதிக்கோ மரண தண்டனை வழங்க மனமில்லை. கதை ஃப்ளாஷ்பேக்காக 70களுக்குப் பயணிக்கிறது.

அக்கதையின் நாயகனும் ஒரு திருடன். ஒரு திருட்டின்போது அவ்வூர் பண்ணையார் லட்சுமிகாந்தனைக் கொலை செய்துவிட்டு மரண தண்டனைக்காக காத்திருக்கிறான். அப்பண்ணையாரைக் கொலை செய்தபோது, அவரது பாலியல் துன்புறுத்தலிலிருந்து ஒரு சிறுமியைக் காப்பாற்றுகிறான். அந்த சிறுமிக்கும் இந்த பெண் நீதிபதிக்கும் ஒரு தொடர்பிருக்கிறது. படிக்கும்போதே புல்லரிக்கிறதா ? இவ்வளவுதான் கதை.

வெற்றிதான் கதை நாயகன். பொதுவாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்றொரு பெயர் இவருக்கு முன்ன ஒரு காலத்தில் இருந்தது. அவரது காதல் மனைவியாக பிரிகிடா சாகா நாலைந்து சோகா காட்சிகளில் வந்துபோகிறார். போனஸாக நடிப்பு அரக்கன் ரங்கராஜ் பாண்டே காவல்துறை அதிகாரியாக வந்து பொறுமையை சோதிக்கிறார்.

ஒளிப்பதிவு எம்.வி.பன்னீர் செல்வம். பல நீளமான காட்சிகள் சிறையின் சிறிய அறைக்குள் நடந்தபோதும் சலிப்பு ஏற்படாத ஆங்கிள்களால் கவனம் ஈர்க்கிறார்.

இசை தர்புகா சிவா. பாரதியார், பாரதிதாசன் பாடல்களுக்கு இசையமைக்கச் சொல்லி யார் அழுதார்கள்? கொடுமை.

திரைக்கதை வசனம் எழுதி ஒரு கொடூர பாத்திரத்திலும் நடித்திருக்கும் கவிதா பாரதி வசனம், நடிப்பு இரண்டிலுமே கவனம் ஈர்க்கிறார்.

சிறைக்குள்ளே இருந்தபடி நாயகன் வெற்றி மரண தண்டனைக்கு எதிராக ஒரு புத்தகம் எழுதி அதற்கு ‘என் தலை எழுத்து’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். படம் பார்க்க நேர்கிறவர்களுக்கு கச்சிதமாக பொருந்துகிற தலைப்பு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram