வாழ்க்கையில் வெவ்வேறு தேவைகள் கொண்ட நான்கு பேரிடம் துப்பாக்கி கிடைத்தால் என்ன ஆகும் என்ற கேள்விக்கான விடை சொல்லும் திரைப்படம் தான் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்.
திருநங்கை மகளைப் படிக்கவைக்கப் போராடும் தூய்மைப்பணி செய்யும் பெண்மணி, புருஷன் வீட்டில் பிரச்சினையை எதிர்கொள்ளும் இளம் பெண், காதல் மனைவியின் அறுவை சிகிச்சைக்கு பணம் வேண்டி கொலை செய்யத்துணியும் இளைஞன், மகளின் சாதி மறுப்பு காதலை எதிர்க்கும் தந்தை என்று நான்கு கதைகள். இந்த நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் எப்படி இணைக்கின்றன என்பதற்கான விடையை சொல்வதுதான் படத்தின் கதை.
வேறு வேறு கதைகளை முன்னும் பின்னுமாக நகர்த்தி சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் பிரசாத் முருகன். முதல் பாதியைவிட இரண்டாம் பாதியில் பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களும் அதிகம்.
திருநங்கை மகளை மருத்துவம் படிக்க வைக்க பாடுபடும் கேரக்டரில் அபிராமி. யதார்த்தமாக நடித்துள்ளார். தவிப்பையும் தைரியத்தையும் கச்சிதமாக பிரதிபலிக்கிறார். ஆட்டோ ஓட்டும் இளைஞராக பரத். ஏறக்குறைய அபிராமிக்கு உள்ள அதே சூழல்தான் இவருக்கும். உணர்வுகளை அதற்குரிய தன்மையில் வெளிப்படுத்தியுள்ளார். கனிகா கேரக்டர் கம்பீரமாக பெண்ணியம் பேசியுள்ளது. சாதித் திமிர்கொண்ட கேரக்டரில் தலைவாசல் விஜய், கணவரின் வீட்டால் ஏமாற்றப்படும் அஞ்சலி நாயர் என படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்துள்ளனர்.
ஜோஸ் பிராங்க்ளின் பின்னணி இசை படத்துக்கு பலம். ‘போ.. போ.. சேகுவாரா…’, ‘தேசமில்லா ராஜா நான்…’ ஆகிய இரண்டு பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகின்றன.
‘கற்புனா உடம்புலயா இருக்கு… அதுமனசுலல இருக்கு…’, ‘சாமிய சுத்தி வர்றதிலேருந்து, சாப்பிடுற உணவ தீர்மானிக்கிறவரை நீங்களே முடிவெடுத்தா அதுக்கு பேர் என்ன… சர்வாதிகாரம்தானே!’ என கேரக்டர்களுக்கு ஏற்ற வசனத்தை எழுதியுள்ளார் ஜெகன் கவிராஜ்.
சாதி எதிர்ப்பு, பெண்ணியம், கம்யூனிசம், ஓர்பால் ஈர்ப்பு போன்ற பல விஷயங்களை கதையின் தேவைக்கு அதிகமாகவே வைத்துள்ளனர். மனித உணர்வுகளைப் பேசுவதற்கு இவ்வளவு இசங்கள் தேவைதானா? ஒவ்வொரு கேரக்டருக்கும் வரும் பிரச்னை இயல்பானதாக இருந்தாலும், அவர்கள் தேடும் தீர்வு படத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிடுகிறது. அதோடு, மேலோட்டமான மேக்கிங் படத்தின் பெரிய பலவீனம்.
ஒவ்வொரு கதையையும் துண்டுதுண்டாக வெட்டி மனதில் பதியவிடாமல் செய்துவிடுகின்றனர். இருப்பினும் எளிய மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கைப்போராட்டத்தையும் பிரசாத் முருகன் சமூக அக்கறையோடு பதிவு செய்திருக்கிறார் என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.